சாம் பிரதீபன் சிரிக்கவும் வைப்பார் என்று அண்டைக்குத் தான் தெரிஞ்சுது!

போன சனிக்கிழமை(07.04.2024) நைனை மணிமேகலை முன்னேற்றக் கழகம் நடத்திய மேகலை 29 என்ற தமிழ் கலாச்சார இரவு வழமையான பல கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றிருந்தது. பாட்டுகள் நடனங்கள் வீணைக் கச்சேரி பேச்சுகள் போட்டி நிகழ்ச்சிகள் என பல விடயங்கள் மேகலையில் இருந்தது. ஆனால் கடைசியில் நடைபெற்ற மெய்வெளி சாம் பிரதீபன் அவர்களின் எங்கட சனங்கள் என்ற ஒரு நாடகம் அங்கிருந்த எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்து மேடையேறியது.

 

ஊரில முந்திப் பார்த்த நாடகங்களுக்குப் பிறகு அன்றைக்குத் தான் ஒரு நல்ல நாடகத்தைக் பார்த்து வயிறு குலுங்க சிரித்து கண் முட்ட அழுது வீட்டுக்குப் போன அனுபவம் எனக்கு. நாடகம் என்ற ஒன்று போட்டால் இப்பிடித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு அருகில் இருந்தவர்களுக்கு சொல்லிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுப் போனேன். இரவு முழுக்க கனவில் கூட சாம் பிரதீபனின் பாத்திரங்கள் எனக்கு முன் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. நீ பிரிட்டிஷ் போர்ண் என்று நாடகம் முழுதும் அடிக்கடி சொல்லப்பட்ட ஒரு பஞ்ச் டயலொக்கை நான் மடடுமல்ல அங்கு நாடகம் பார்த்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நாடகத் தொடக்கத்தில் கொஞ்சப் பெட்டிகளை தலையில் தூக்கியபடி வந்து முடிவில் அதே பெட்டிகளை தூக்கியபடி மேடையை விட்டுப் போகும் வரை ஒரு 30, 40 நிமிடங்கள் மேடையில் அட்டகாசம் செய்துகொண்டிருந்தார் சாம் பிரதீபன். அவருக்கு கிட்டத்தட்ட ஒரு 50 வயதாகக் கூடும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த வயதில் கூட அவருக்கு எங்கிருந்து இந்த வேகம் புறப்பட்டு வருகிறதோ தெரியாது எனேர்ஜி லெவல் அது வேற லெவல் எண்டு தான் சொல்ல வேண்டும். தீபம் தொலைக்காட்சியில் இருந்து கன காலமா அவரை எனக்கு தெரியும். அவர் ஒரு சீறியசான ஊடகத்துறை மனிதர் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அந்த மனுசனால் நாடகத்தில் இப்பிடி மனுசரை சிரிக்க வைக்கவும் அழ வைக்கவும் ஏலும் எண்டு அண்டைக்குத் தான் தெரிஞ்சுது.
யாழ்ப்பாணத்தில வாழ்ந்த ஒருவன் லண்டன் வந்து வாழுற ஒரு நீண்ட காலத்தில நடக்கிறதை எல்லாம் அப்பிடியே கண்ணுக்கு முன்னுக்கு கொண்டு வந்து எங்கடை கதையை நாங்களே பார்த்து சிரிக்கவும் அழவும் யோசிக்கவும் முடியும் என்பதை அழகாக நடித்துக் காட்டியிருந்தார் சாம் பிரதீபன். எங்களிடம் இருந்த அற்புதமான நாடகக் கலையை இவரைப் போன்றவர்கள் அடுத்த தலைமுறைக்கும் முறைப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே மெய்வெளி என்று ஒரு நாடகத்துக்கான பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிறார் என பின்னர் தெரிய வந்தது.
எங்கட சனங்கள் என்ற அந்த நாடகத்தை என்னால எழுத்தில சொல்லி புரியவைக்க முடியாது. அதை மேடையில் பார்த்தால்தான் அந்த உணர்வை எல்லாரும் அனுபவிக்க முடியும். வசனங்களை சொல்லுற அல்லது கேக்கிற நாடகம் இல்லை அது. அவருடைய உடம்பும் குரலும் மேடையில காட்டின பொருட்களும் மியூசிக்கும் சேர்ந்து என்னை படாதபாடு படுத்திவிட்டது.
இது என்ர கதை. அப்ப இது உங்கட கதையும் தான் உங்கட எல்லாற்றையும் கதையும் தான் என்பது அந்த நாடகத்தின் முக்கியமான கருப்பொருள்.
இந்த நாடகத்தை பார்க்க வழி செய்ய நிகழ்ச்சிக்குழுவுக்கு மிக்க நன்றி.
நன்றி மணிமேகலை முன்னேற்றக் கழகம். நன்றி மேகலை 29. நன்றி மெய்வெளி. நன்றி சாம் பிரதீபன். நன்றி  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

– சிவா –