ஆஸ்பத்திரிகளது நிலைமை மோசம்முடக்கமா, மாற்று வழி முறைகளா?
அதிபரின் முடிவுக்காகக் காத்திருப்பு

தற்போதைய நிலைவரத்தைச் சமாளிக்க மூன்று விதமான நடவடிக்கைகளை அரசுத்தலைமை ஆலோசித்து வருகிறது என்று பாரிஸ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நெருக் கடியைத் தளர்த்துவதற்காக அதிகம் பாதிக்கப்படாத பிராந்தியங்களில் இருந்து மருத்துவர்களையும் அவசர சிகிச்சைக் கட்டில்களையும் பாதிப்புக் கூடிய இடங்களுக்கு நகர்த்துவது
பாரிஸ் பிராந்தியம் உட்பட மிக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மூன்று பிராந்தி யங்களிலும் பாடசாலைகளை மூடுதல், ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் பணிகளை மிக வேகமாக முன்னெடுத் தல்
தொற்று நிலைமை கட்டுமீறியுள்ள பிராந்தியங்களை முற்றாக முடக்குவது
மூன்றாவது யோசனை.
இந்த மூன்று விடயங்களும் நாளை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத் தில் முக்கியமாக ஆராய்படவுள்ளன எனத் தெரியவருகிறது.நாளைய கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் இன்று மாலை எலிஸே மாளிகைக்குச் சென்று அதிபர் மக்ரோனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. புதிதாக கட்டுப்பாடுகளை இறக்குவது என்பதில் அதிபர் மக்ரோன் இணக்கம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரது எண்ணிக்கை இன்று செவ்வாய்க் கிழமையுடன் ஐயாயிரத்தை தாண்டி உள்ளது. ஆஸ்பத்திரிகள் சில அனர்த்த காலம் போன்று நோயாளிகளைத் தரம் பிரித்து அனுமதிகளை வரையறை செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
பாரிஸ் பாடசாலைகளில் தொற்றுக்கு உள்ளாகிய மாணவரது எண்ணிக்கை கடந்த இரு தினங்களில் மூன்று மடங்காக உயர்ந்து இன்று மாலை வரை 722 வகுப்பறைகள் மூடப்பட்டுவிட்டன.
விரைவானதும் இறுக்கமானதுமான கட்டுப்பாடுகளை அமுல் செய்வதற்கு காலத்தை இழுத்தடிக்க வேண்டாம் என்று மருத்துவர்களும் தொற்றுநோயியலாளர்களும் தொடர்ந்து அரசை எச்சரித்து வருகின்றனர்.
மருத்துவர்களுடன் அரசு மோதலில் ஈடுபடுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. சமூக, பொருளாதார ரீதியில் பலத்த தாக்கங்களை ஏற்படுத்து கின்ற தேசிய ரீதியான பெரும் முடக்கங் களை இனிமேல் (ஜனவரிக்குப் பிறகு) அமுல்செய்வததில்லை என்று தெரிவித்த தனது உறுதி மொழியைத் தொடர்ந்து காப்பாற்ற அதிபர் மக்ரோன் முயன்று வருகிறார் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
நாட்டு மக்களில் கணிசமானோருக்குத் தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் நாட்டை முடக்காமலேயே வைரஸின் மூன்றாவது அலைத் தொற்றைச் சமாளித்துவிடமுடி யும் என்று அரசுத் தலைமை கணக்குப் போட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாகத் தடுப்பூசி ஏற்றுவதில் ஏற்பட்ட மந்தநிலை அரசின்சுகாதார உத்திகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளைய கூட்டத்துக்குப் பிறகு அதிபர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதில் முழு நாட்டின் கவனமும் திரும்பியிருக்கிறது.