ஈழ தேசத்தின் நாடக விழுமியத்தை என் கண்முன்னே நிறுத்தினார்கள் - த.ரஜீந்திரகுமார் -


பாரில் எனக்கு பசி தீர்க்கும் 

பெரு விருந்தே தமிழ்பூர்வீகம் முழுக்க பிணி தீர்க்கும்  அரு மருந்தே தமிழ் பன்மொழி அடுக்கத்துப் பேசிடும்  தாய் மொழியே தமிழ் என் மொழியொன்றே வன்னிருளகற்றும் தன்னிகரில்லாத் தமிழ் 1990 களில் எழுதிய எனது இப்பாடலை “மெய்வெளி” நாடகப் பயிலகம் மெய்ப்பித்தது. 11.04.2019 அன்று மெய் சிலிர்க்கவும் செய்தது. இருள் அகன்று அற்புத ஒளியில் மில்ரன்கீன்ஸ்(MILTON KEYNES) குழந்தைகள் பிரகாசித்ததைப் பார்த்தேன். திரு.சாம்பிரதீபன் அவர்களும் திருமதி றஜித்தா அவர்களும் தமது நாடகப் பட்டறை ஊடாக அதை நிரூபித்துக் காட்டினர்.

முத்தமிழில் ஒன்று நாடகம். அத்தமிழ் முத்தமிழின் அற்புதத் தமிழ். நாடகத் தமிழுக்கு இசை கதை நடிப்பு இவை மூன்றும் மூலமாக வீரம், சோகம், மகிழ்ச்சி, ஆனந்தம், குழைவு, பயம், கோபம், தயக்கம், ஆச்சரியம் போன்றவற்றை குழந்தைகளிடமிருந்து இலகுவான முறையில் இருவரும் வரவழைத்துக் காட்டினார்கள். ஆங்கிலமே அறிவு என்றிருந்த குழந்தைகளுக்கு தெள்ளத் தெளிந்த தமிழில் ஒரு நாட் பொழுது நகர்ந்ததே தெரியாமல், இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு மிக இலாவகமாக உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆனந்தம் அளிக்கும் வகையில் நாடகப் பயிற்சி வழங்கியது கண்டு நான் மலைத்துப் போனேன். 

ஈழ தேசத்தில் மாமரத்தடியில் வீர மணி ஐயருக்கு மாணவனாக இருந்து தான் கற்றதை ஒரு பொழுது ஒரு தருணம் என்னை திரும்பிப் பார்க்கும்படி தட்டி உணர்த்தினார்கள். அந்த மண்ணின் நாடக விழுமியத்தை என் கண்முன்னே நிறுத்தினார்கள். சுமார் 30 குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த பட்டறை காலை முதல் மாலை வரை மிக அற்புதமாக  நீடித்தது. குழந்தைகள் காட்டிய ஆர்வம் அத்தனை அழகாக இருந்தது. அவர்களே இசை அமைத்துக் கொண்ட விதம், அவர்களே கதை புனைந்து கொண்ட முறை, அக்கதையை அவர்களே நாடகமாக அரங்கேறிய விதம், பாத்திரங்களுக்கு அவர்களே நடிகர்களை தேர்வு செய்த முறை, இப்படி இப்படி பலவற்றை குழந்தைகளிடமிருந்தே வரவழைத்து அவர்களையே செயற்பட வைத்தது எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. அப்பணியை மிகவும் லாவகமாக இருவரும் நிகழ்த்திக் காட்டி இருந்தனர். 

இப்பாரினில் எனக்கு பசி தீர்க்கும் விருந்து தமிழ். பூர்வீகம் முழுக்க பிணி தீர்க்கும் மருந்தே தமிழ். அடுக்கடுக்காய் நாம் பல மொழிகளை பேசினாலும் தாய்மொழி தமிழ். நமது தமிழ் மொழி மட்டுமே வலிமையான இருள் அகற்றும் தன்மை கொண்டது.  நமது தமிழ் மொழிக்கு நிகர் அதுவே என்பதனை திரு.சாம்பிரதீபன் அவர்களும் திருமதி றஜித்தா அவர்களும் மெய்வெளி நாடகப் பள்ளி வாயிலாக நிகழ்த்திக் காட்டியது கண்டு மலைத்துப் போனேன்.

- த.ரஜீந்திரகுமார்

44 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE