தாக்குதல்கள் இடம்பெற்று 02 வருடங்கள் கடந்த போதிலும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை குற்றமற்றவர்களாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் ஊடாக இதன் பின்னணியில் அரசியல் சக்திகள் காணப்படுகின்றன என்பது தெளிவாகிறது.


குண்டு தாக்குதல்கள் தொடர்பான உண்மையான பின்னணியை வெளிப்படுத்துவது தொடர்பாக தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்படுவது நாட்டுக்கு அச்சுறுத்தலாகும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் முதற்கட்டமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடன் அமுலாகும் வகையில் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு இன்று புதன்கிழமை கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.

தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இதன் பிரதான சூத்திரதாரிகள் யார் , எதற்காக யாருடைய தேவைக்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்துவதில் குற்ற விசாரணைப் பிரிவும் , அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளன.


எந்தவொரு தவறும் இழைக்காத 269 அப்பாவி மக்களின் உயிர் போகக் காரணமானவர்களை வெளிப்படுத்துவதில் அரசியல் நோக்கங்களால் அரசாங்கம் பின்வாங்குகின்றமை கவலையளிக்கிறது.


இந்த தாக்குதல்களின் பின்னணியின் பெரும்பாலும் அரசியல் சக்திகள் காணப்படுகின்றமை சகலரும் அறிந்த விடயமாகும். எனவே தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மன்னிப்பதற்கு நாம் தயாராகவுள்ள போதிலும் , தாக்குதல்களின் உண்மையான பின்னணியை அறிந்து கொள்வது எமக்கு உரிமையாகும். அத்தோடு நாம் மன்னிப்பதாயினும் குற்றமிழைத்தவர்கள் யார் ? அவர்கள் குற்றத்தை ஏற்றுக் கொள்பவார்களா ? என்பது தெளிவாக வேண்டும். தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இனங்காண்பதற்கு பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் அரசியல் பின்னணியே ஆகும் என்று நாம் நம்புகின்றோம்.


எனவே தான் உண்மையான பின்னணி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் முதல் கறுப்பு ஞாயிறு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எமக்கான நியாயம் கிடைக்கப் பெறும் வரை அந்தப் போராட்டத்தைத் தொடருவோம்.


இந்த தாக்குதல்கள் ஒரு மதத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல. மத அடிப்படைவாதமானாலும் , ஏனைய அடிப்படைவாதங்களானாலும் இறுதியில் அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சிலரின் தேவைகளே நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறான சதித்திட்டங்களில் சிக்காமல் அவதானமாக இருக்குமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மத அடிப்படைவாதத்திற்கு எதிராக நீங்களே முன்னின்று செயற்படுங்கள் என்று முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நாம் பாதுகாத்தோம். எனினும் எமக்கான நியாயத்திற்கு குரல் கொடுப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன்வரவில்லை. எனினும் இன்றைய தினம் ஹசன் மௌலானா மௌலவி குரல் கொடுத்துள்ளார்.


எவ்வாறிருப்பினும் தாக்குதல்களின் உண்மையான பின்னணியை இனங்காண்பதை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதானது நாட்டுக்கு அச்சுறுத்தலாகும். எனவே இன, மத , கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களின் உண்மையை வெளிப்படுத்துவதை வலியுறுத்துவோம்.

உரிய தரப்பினருக்கு அழுத்தம் பிரயோகிப்போம். எனவே உண்மையான குற்றவாளிகளை இனங்காண்பதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு வலியுறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டுவதற்கான முதற்படியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.


அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற முக்கிய காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

28 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: