இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி:


இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆரம்பித்தது.ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக அடியெடுத்து வைத்தார். இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கிய இவர்கள் வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்கள் திரட்டி அசத்தியது. நடப்பு தொடரில் ‘பவர்-பிளே’யில் இந்தியா விக்கெட்டை இழக்காதது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்து பவுலர்கள் வீசிய ஷாட்பிட்ச் பந்துகளை அசராமல் சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா நாலாபுறமும் பந்துகளை தெறிக்க விட்டார். விராட் கோலியும் ஏதுவான பந்துகளை விரட்ட தவறவில்லை. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. ரன்ரேட் 10 ரன்னுக்கு குறையாமல் சென்றது. 45 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரோகித் சர்மா தனது 22-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு பென் ஸ்டோக்சின் ஓவரில் சிக்சர், பவுண்டரி துரத்தியடித்த ரோகித் சர்மா (64 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) அதே ஓவரில் போல்டு ஆனார். ரோகித்- கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேகரித்தது.


அடுத்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் சந்தித்த முதல் ஓவரிலேயே அடில் ரஷித்தின் சுழலில் இரண்டு பிரமாதமான சிக்சர்களை தூக்கியடித்து குஷிப்படுத்தினார். கிறிஸ் ஜோர்டானின் ஓவரில் அவர் ஹாட்ரிக் பவுண்டரி சாத்தினார். அவரது சரவெடியால் ஸ்கோர் வேகம் தொய்வின்றி நகர்ந்தது. அணியின் ஸ்கோர் 143 ரன்களாக உயர்ந்த போது சூர்யகுமார் (32 ரன், 17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலி தனது 28-வது அரைசதத்தை எட்டினார். இந்த தொடரில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும்.


கடைசி கட்டத்தில் கோலியும், ஹர்திக் பாண்ட்யாவும் ரன்மழை பொழிந்தனர். இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் இங்கிலாந்து பவுலர்கள் விழி பிதுங்கினர். அவர்களின் பீல்டர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நாலாபுறமும் ஓடவிட்டு வேடிக்கை காட்டினர்.


20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கோலி 80 ரன்களுடனும் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களுடனும் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.


ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் 4-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் சிறந்த ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அந்த அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.


அடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாசன் ராயை (0), வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் கிளீன் போல்டாக்கினார். இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், டேவிட் மலானும் இணைந்து பதிலடி கொடுத்தனர்.சகட்டு மேனிக்கு பந்துகளை நொறுக்கிய இவர்கள் ஸ்கோரை துரிதமாக உயர்த்தினர். 9.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தாண்டியது. இவர்கள் ஆடிய விதம் இந்திய வீரர்களை மிரள வைத்தது. இந்த சூழலில் மீண்டும் புவனேஷ்வர்குமாரை பந்து வீச கேப்டன் கோலி அழைத்தார். இது தான் ஆட்டத்தில் திருப்பு முனை என்று சொல்ல வேண்டும். ஸ்கோர் 130 ரன்களை எட்டிய போது (12.5 ஓவர்) அவரது பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் (52 ரன், 34 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.

இதைத் தொடர்ந்து இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். பேர்ஸ்டோ (7 ரன்), டேவிட் மலான் (68 ரன், 46 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மோர்கன் (1 ரன்) அடுத்தடுத்து வெளியேற ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.


20 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் 8 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இ்ந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 முன்னணி விக்கெட்டை வீழ்த்திய இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருதையும், 5 ஆட்டத்தில் ஆடி 3 அரைசதம் உள்பட 231 ரன்கள் சேர்த்த இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.


அடுத்து இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

3 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli