இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 54 பேர் கைது.
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய மீனவர்களின் 05 படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.மன்னார் – பேசாலை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த கடற்பகுதியில் பாரிய படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறினார்.மேலும், முல்லைத்தீவு சாலைக் கடற்பகுதியில் 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி அத்துமீறி இலங்கையின் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த பாரிய கைதுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது