உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ நா பேச வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்தல்!

மனித உரிமை விவகாரங்களில் மீறும் செயல்களில் ஈடுபடும் சில உறுப்பு நாடுகள் குறித்து ஐ.நா. பேசவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 'ஐ.நா. சபை சரியாக செயற்படவில்லை என்றும், மனித உரிமை விவகாரங்களில் மீறும் செயல்களில் சில உறுப்பு நாடுகள் ஈடுபடுகின்றன எனவும் குறிப்பிட்டார். அதனை சபையில் பிரதிபலிக்கவில்லை, இதுபற்றி நாம் பேச வேண்டிய தேவை உள்ளது. ஸின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது சீனாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி நாள்தோறும் நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இந்த சான்றுகளை எவராலும் தவிர்த்து விட முடியாது.
துன்புறுத்துதல், கட்டாய தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி ஊசி செலுத்துதல் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் தொடர்ந்து வருகின்றன. இதுபற்றி ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.