நீ ராணியாய் இராதே, தேனீயாய் இரு!


மகளே!

பதினெட்டு வயதிற்குள் நுழையும்

பட்டாம் பூச்சி நீ!

கண்ணில் பட்டதெல்லாம்

எட்டிப் பறித்திடத் துடிக்கும்

வாலிபத் துடிப்புடன் நிற்கும் வயதுனது.

நட்டதும் றோஜா பூத்திடவேண்டுமென்ற

வேகத்தின் உச்சியில் நடக்கும் அகவையுனது.


எல்லோரும் விரும்பிக் கடந்த

கட்டிளம் பருவம் ஒன்றில்

இப்போது நீ நடந்து கொள்கிறாய்.

குழந்தை மனமும் இளமைத்தனமும்

உரசிக் கொள்ளும்

விடலைப் பருவம் ஒன்றை

இப்போது நீ கடந்து போகின்றாய்.

ஆபத்துக்களும் ஆனந்தங்களும்

ஒன்றாய் சந்திக்கும் சூனிய வலயம் ஒன்றை

இப்போது நீ நெருங்கிக் கொள்கிறாய்.

சரியும் தவறும் ஒன்றுபோல் தெரியும்

காட்சித் திரையின் முன்

இப்போது நீ நிறுத்தப்படுகின்றாய்.

இது ஒரு வினோதப் பயணம்.

வில்லங்கப் பயணமும் கூட.

பயணத்தின் எந்தக்கட்டத்திலேனும்

நீ ராணியாய் இராதே

தேனீயாய் இரு.

ராணித் தேனீக்கு பறத்தல்கள் இல்லை

தேன் சுற்றிய வதைக்குள் இருத்தலைத் தவிர.

பூக்களில் மொய்த்துக் கொள்ள எப்போதும்

அச்சம் கொள்ளாதே.

நீ தேன்களின் எஜமானி.

பாறைகளில் மோதிக்கொண்டால்

பின்வாங்கிக் கொள்ளாதே

நீ துணிச்சல்களின் பாட்டுடைத் தலைவி.

இதுவரை பொத்திவைத்த

உன் பெற்றோரின் உள்ளங்கை

இன்றுமுதல்

உனக்காக விரிக்கப்படுகின்றது.

உன் செட்டைகளை இனி அகல விரித்துக்கொள்.

உன் உணர்கொம்புகளை நீளமாய் நீட்டிக்கொள்.

உந்தி எழும்பி உன் உடல் தூக்கிப் பறக்கப்பார்.

விட்டு விடுதலையாகி

அண்டத்தை அறுநூறு முறை சுற்றி வா.

உலகத்தை மணந்து பார்

உலகத்தவரை அளந்து பார்

பூக்களின் மேல் தேனெடு

பூகம்பங்களோடு போர்தொடு

மகரந்தங்களை இடம் மாற்றிக் கொண்டுவா

மகாநதிகளுக்கு வர்ணம் தீட்டு

முடிந்தால்,

நாயுருவிப் பூக்களுக்கு

றோஜாத் தோட்டங்களின் முகவரி எழுதிக்கொடு

சாக்கடைப் புழுவுக்கு

சந்தணக் காடடைய வழிகாட்டு.


பெற்றோரைத் தாண்டிய ஒரு புதிய பள்ளிக்கூடம்

இனி உனக்கு பாடங்கள் சொல்லித் தரும்.

உற்றவர் சொல்லாத

உண்மைகளின் இரகசியங்கள் எல்லாம்

இன்றுமுதல் வலிந்து வந்து

உன்னோடு பாட்டுப் பாடும்.

வீழ்ந்தாலும் எழுந்தாலும்

இனி உன்னை நீயே தட்டிக்கொடு

சோர்ந்தாலும் தளர்ந்தாலும்

இனி உன்னை நீயே உறுதிசெய்து கொள்.

காலம் உன்னைப் புடமிடும்

நீ மட்டும் காலத்தை படம் பிடி.

காலம்,

மகிழ்ச்சியை மாத்திரம் தந்துவிடாது மகளே!

மண் அள்ளிக் கொட்டும்.

கண்ணீர்களால் உனை நனைக்கப் பார்க்கும்.

விண்ணளவு எழுந்து வந்து

உன் எண்ணங்களை கவிழ்த்துப் போடும்.

பச்சாத்தாபங்களற்று

உன்னை இடறிக் கொண்டாடும்.

கொச்சைப்படுத்தி உந்தன்

ஆழ்மனம் உடைத்துப் போகும்.

நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

நேற்று என்பதை கொலை செய்துவிடு,

நாளை என்பதற்கு கொடும்பாவி எரித்துவிடு,

இன்று என்பதோடும் இந்தக் கணம் என்பதோடும்

வில்லேந்தி விளையாடு.

அக்கணத்தின் சவால்களை

சங்காரம் செய்து கடந்து போ.

வாழ்வு உனைக் கொண்டாடும்.

நண்பர்கள் துரோகியாவார்கள்

துரோகிகள் எதிரியாவார்கள்

உன் எதிரி பலமானவனாய் இருக்கட்டும்.

கனமான எதிரி ஒன்றை

எப்போதும் உன்னெதிரே வைத்துக்கொள்.

வாழ்வு உன்னை வரைவிலக்கணம் ஆக்கும்.


இந்தப் பயணத்தில் தான்

காதல் வரும்.

கண்ணடிக்கத் தோன்றும்.

ஹார்மோன்களோடு போராட்டம் நிகழும்.

காசொறு விதையே

மானே தேனே கச்சான் பருப்பே

கற்கண்டுக் குழம்பே

மானுடை பிறவா மதியே

என கவிதைகள் வந்து உன் கைபேசி நிறையும்.

நல்லவனா? வல்லவனா? என்ற தெரிவுக்கே

யுகங்கள் ஓடி முடியும்.

புத்தகங்கள் உன்னோடு உறையும்.

நித்திரையில்லா கல்வியின் இரவுகள் நீளும்.


மீண்டும் ஒரு நாள் வரும்

இளமை கடக்கும் அந்தலைப் பொழுதொன்றில்

திரும்பவும் வந்து

விரித்த உன் பெற்றோரின் உள்ளங்கைக்கு மேல்

அமர்ந்து கொள்

பொத்தி வைக்காத பட்டாம் பூச்சி ஒன்றின்

அனுபவக் கனதியை

அவர்களின் விரல்கள் உணரச் செய்.

சிட்டாய்ப் பறந்த சின்னக் குருவி ஒன்றின்

விரிந்த நுண்ணறிவை

மொழிபெயர்த்துக் கொடு

கசக்கி மணக்கப்படாத மல்லிகைப் பூவொன்றின்

புதுவாசம் முகரச் செய்

அமுதூட்டி அறிவூட்டிய வாழும் தெய்வங்களென

அவர்களின் முகம் பார்த்து பூபாளம் பாடு.

காலத்தால் வாழ்வேனோ நானறியேன்.

அத்தருணத்தே

இருந்தால் வந்து நின் முகம் மலர்வேன்

இல்லையென்றால்

விண்ணிருந்து

அப்போதும் உனை வாழ்த்துவேன்.

- சாம் பிரதீபன் -

4 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli