சென்னை அணி வீரர்களுக்கு புதிய ஜெர்சி - அறிமுகம் செய்தார் கேப்டன் டோனி!

14-வது ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அண்மையில் வெளியிட்டார். இதன்படி 8 அணிகள் இடையிலான ஐ.பி.எல். திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார். சென்னை அணிக்கான டுவிட்டர் பக்கத்தில், 'தல தரிசனம்' என்ற பெயரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், டோனி தனக்கான மஞ்சள் நிற ஜெர்சியை அறிமுகம் செய்தார். புதிய டிசைனுடன் இருக்கக்கூடிய ஜெர்சியை பார்த்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு என டோனி மகிழும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.