கடவுளும் மனிதனும் போட்டிக்கு விழா எடுக்கும் புனித பூமி இது!


ஒரு பிடி மண் அள்ளி

என்ன செய்யட்டும் நான்?

ஒரு பிடி மண் அள்ளி

எதை தேடட்டும் நான்?

ஒரு பிடி மண் அள்ளி

எதை காட்டட்டும் நான்?

ஒரு பிடி மண் அள்ளி

யாருக்கு கொடுக்கட்டும் நான்?


அள்ளி அள்ளி நான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு

மெள்ள மெள்ள நான் அள்ளத்தான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மெதுவாய் அழத்தான் முடிகிறது இப்போதைக்கு….


ஒற்றைத் துகள் மண்ணில் கூட

ஓராயிரம் புத்தக் கடவுளர்க்கு

குத்தகை எழுதவிட்டு

மற்றத் தேசத்தின் மறுகரை மண்ணிருந்து

பற்றுப் பாசமென வெற்றுக் கவி வடித்து

மெதுவாய் அழத்தான் முடிகிறது இப்போதைக்கு….

அள்ளி அள்ளி நான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மெள்ள மெள்ள நான் அள்ளத்தான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மெதுவாய் அழத்தான் முடிகிறது இப்போதைக்கு….


அற்றைத் திங்கள் ஒன்றில்

அம்புலி காட்டி என்னை

அழகு தமிழ் சொல்ல

அம்மா அமர்ந்திருந்த அருமைமண் எனது.

முற்றம் தனில் நிறைந்து

சுற்றம் உறவு நின்று

அகரம் எழுத வைத்து

அன்புத் தமிழ் படித்த ஆதார மண் எனது.

வெட்டை வெளிகளிலும்

வெற்றுத் தரைகளிலும்

கட்டப் பிராய் தொடங்கி

கன்னியாக் கிணறு வரை

தொட்டுக் கும்பிட்ட தொன்றுதொட்ட மண் எனது.

அதில்

ஒரு பிடி மண் அள்ள

உற்று நான் பார்க்கிறேன்

ஒரு துகள் மண்ணில் கூட

எங்களைக் காணவில்லை.

ஒரு பிடி மண் அள்ள

உற்று உற்று நான் பார்க்கிறேன்

ஒரு துகள் மண்ணில் கூட

எமதுகளைக் காணவில்லை.

வந்தார் வரத்தார் எல்லாம்

உண்டு கழித்த ஏப்பங்கள் தெரிகின்றன.

நின்றார் நிறத்தார் எல்லாம்

சாகசம் காட்டிய சங்கதி தெரிகிறது

எங்களை மட்டும் எங்கும் காணவில்லை.


குறிஞ்சி முல்லை மருதம் என்றோம்

குமரி முதல் ஏறி இமயம் வரை எங்கள்

குலத்தோர் வாழ்ந்த குவலயம் என்றோம்.

மூவேந்தர் என்றோம் முற்சங்கம் என்றோம்

முத்தமிழ் காத்த முதிசமும் நாம் என்றோம்

சோழன் என்றோம் சேரன் என்றோம்

பாண்டிய நாடும் பறம்பு தேசமும் எமதே என்றோம்.

இறுதியாய் நேற்றும்

குமரிக் கண்டமும் எமதே என்று நிறுவிடப் பார்த்தோம்.

கண்ணுக்கெட்டும் வல்லதேசமெங்கும்

வாகை சூடிய வல்லாளர் நாம்தான் என்றோம்.

எங்கே

ஒரு பிடி மண் அள்ள

உற்று நான் பார்க்கிறேன்

ஒரு துகள் மண்ணில் கூட

எங்களைக் காணவில்லை.

ஒரு பிடி மண் அள்ள

உற்று உற்று நான் பார்க்கிறேன்

ஒரு துகள் மண்ணில் கூட

எமதுகளைக் காணவில்லை.

வந்தார் வரத்தார் எல்லாம்

உண்டு கழித்த ஏப்பங்கள் தெரிகின்றன.

நின்றார் நிறத்தார் எல்லாம்

சாகசம் காட்டிய சங்கதி தெரிகிறது

எங்களை மட்டும் எங்கும் காணவில்லை.


எங்கே போய்விட்டோம்

நாமும் எமதுகளும்?

எந்த இடத்தில் தவறவிட்டோம்

எம்மையும் எமதுகளையும்?

எப்போதிருந்து மறக்கத் தொடங்கினோம்

எங்கள் முகங்களையும் முகவரிகளையும்?

நாங்கள் யுத்தங்களைக் கடந்து போனபோது

செத்துத் தொலைந்து போனோமா?

நாங்கள் யுகங்களை கடந்து போனபோது

முத்தி முதிர்ந்து சரிந்தோமா?

நாங்கள் புலங்களைக் கடந்து போனபோது

சொத்தி முடங்களாய் விழுந்தோமா?

எம் நேசத்துக்குரிய இளைஞர்களே!

எம் அடுத்த சந்ததியின் அகரங்களே!

எம் கலாசாரத்தின் புதிய அரிதாரங்களே!

எம் கல்வி எழுச்சியின் புதிய எக்காளங்களே

நாங்கள் வரலாற்றைத் தொலைத்தவர்கள்.


நாங்கள் இதுவரை தொலைத்தவை இரண்டு.

ஒன்று விடுதலை

மற்றொன்று விழுமியம்.

ஒன்று இனம் காப்பது

மற்றது சுயம் காப்பது.


எமக்கு இப்போது தேவை

விடுதலைப் போர் அல்ல! விழுமியப் போர்.

எமக்கு இப்போது தேவை

விடுதலைப் போர் அல்ல!

சுயத்தைக் காக்க ஓர் விழுமியப் போர்.

எமக்கு இப்போது தேவை

தானைத் தலைவனுமல்ல!

தார்மீகக் கடமை.

எமக்கு இப்போது தேவை

ஆயுதக் கவசம் அல்ல!

ஆள்மன விளக்கம்.

எமக்கு இப்போது தேவை

அவதி அவதியாய் ஒரு தீர்வும் அல்ல

அடுத்த அடி எடுக்க ஒரு அறுவைச் சிகிச்சை.


உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா?

சுயத்தை இழந்து நாம்

சுதந்திர தேசமொன்றில் சும்மா இருப்போமென்றால்

எல்லோரும் தருவார்கள் சுதந்திரம் எமக்கு.

எமக்குத் தேவை

சும்மா இருக்க ஓர் சுதந்திர தேசமா?

இல்லை

சுயமாய இருக்க எம் நிரந்தர தேசமா?


அள்ளி அள்ளி நான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மெள்ள மெள்ள நான் அள்ளத்தான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மெதுவாய் அழத்தான் முடிகிறது இப்போதைக்கு….


ஒரு பிடி மண் அள்ள

உற்று உற்று நான் பார்க்கிறேன்

ஒரு துகள் மண்ணில் கூட

எமதுகளைக் காணவில்லை.

களத்திலும் எம்மை காணவில்லை

புலத்திலும் எம்மை காணவில்லை.


போரிலும் சாவிலும்

பட்டினி வாழ்விலும்

நோயிலும் பாயிலும்

தேற்றுவார் இன்றிநாம் தேம்பிய போதிலும்

இழக்காத எம்மை,


சதியும் விதியும்

சூக்கும சூழ்ச்சியும்

துரோகமும் குரோதமும்

மாநிலம் காணாத

பிணமலை தாண்டியும்

இழக்காத எம்மை,


பட்டாடை கட்டிய தம்பி

வீட்டோடு எரிந்த போதும்

பட்டாணி கொறித்த தங்கை

கட்டுடல் ஊனமுற்ற போதும்

இழக்காத எம்மை,


என் ஊரின் கடல்களிலே

பிணங்கள் ஊர்ந்த போதும்

கண்ணீரும் செந்நீரும்

உப்பாய் உறைந்த போதும்

இழக்காத எம்மை,


சோக்காய் பொலிந்த கோப்பாய் வயல்வெளி

கேட்பார் அற்றுக் கிடந்தபோதும்

யார்க்கடிமை நாமெனக் கேட்டு

நாதியற்று நின்றுற்ற போதும்

இழக்காத எம்மை,

போரின் பின்னர் ஏன் இழந்து போனோம்.


போருக்குப் பின்னர் தான்

போர் நடந்த பூமி என்ற

பரிதாபப் பார்வை உலகிற்கு எம்மேல்.

வாய்க்குள் நுழையாத

பல பல பெயரோடு

ரோட்டில் போனது புதுப் புது சொகுசு VAN

தண்ணி ஊத்தவும் கண்ணி அகற்றவும்

கிணறு வெட்டவும் கூரை மாட்டவும்

மடம் கட்டவும் மருந்து பருக்கவும்

பருப்பு குடுக்கவும் பதிவு செய்யவும்

பாய் குடுக்கவும் நோய் தடுக்கவும்

உரிமை பேசவும் சிறுவர் காக்கவும்

ஒவ்வொன்றுக்கொன்று எங்கும் முளைத்தது.

வாங்கி வாங்கி பழகிப்போய்

தூங்கி எழும்பி நின்றோம்

வீங்கி வெடிச்சுப்போய் நாங்கள்.

ஓங்கிச் சொன்னால் தப்பில்லை

எமக்காய் துடிக்கவும்

ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவும்

இன்னும் நாம் படிக்கவேயில்லை.


போருக்குப் பின்னர் தான்

யாழ்ப்பாணச் சந்தை

உல்லாச விடுதியாய் ஊதிப் பெருத்தது.

சல்லாபச் சாக்கடை ஆகிப் போனது.

கணணியோடு கொஞ்ச நேரம் போதாததால்

மனிதரோடு மனிதர்

முகம் பார்த்துச் சிரிக்கும் முந்திய நாட்கள் காணாமல் போனது.

மங்கள இசையில்

தேசத்து நாதஸ்வரம் மன்மதராசா பாடிற்று

அதுக்கு

தவிலும் தப்பும் காலைக் கிளப்பி ஆடிற்று.


ஊரறிஞ்ச சினிமாக் கதை

சீரழிஞ்சு போனது.

காவாலி விறுமாண்டி

பேமாலி பெருச்சாளி

சண்டியன் காமுகன்

கொள்ளையன் குடிகாரன் எல்லாம்

கதாநாயகர் ஆகிய கலிகாலம் வந்தது.

கம்பனின் இளங்கோவின்

சீத்தலைச் சாத்தனாரின்

பாட்டுடைத் தலைவரெல்லாம்

காலம் சென்று காணாமல் போனது.


களமும் புலமும் விழாக் கோலம் பூண்டது.

நல்லூர்க் கந்தனும் நாச்சிமார் அம்மனும்

சந்நதி முருகனும் ஒரு பக்கத் திருவிழா


பொங்கல் விழா வாணி விழா

ஒளி விழா ஈஸ்ரர் விழா

நவராத்திரி சிவராத்திரி

தீபாவளி திருக்கார்த்திகை

என்றோரு பக்கம் ஆடம்பர பெருவிழா.


வெள்ளி விழா வைர விழா

பவள விழா மணி விழா

பொன் விழா நூற்றாண்டு விழா

சேவை நலம் பாராட்டி அங்குமோர் தனிவிழா.


கௌரவித்து ஒரு விழா

பாராட்டி மறு விழா

அறிமுக விழா வெளியீட்டு விழா

எங்கும் ஒரே விழாக் கோலம்.

கடவுளும் மனிதனும்

போட்டிக்கு விழா எடுக்கும் புனித பூமி இது.


ஒரு பிடி மண் அள்ள

உற்று உற்று நான் பார்க்கிறேன்

ஒரு துகள் மண்ணில் கூட

எமதுகளைக் காணவில்லை.

வந்தார் வரத்தார் எல்லாம்

உண்டு கழித்த ஏப்பங்கள் தெரிகின்றன.

நின்றார் நிறத்தார் எல்லாம்

சாகசம் காட்டிய சங்கதி தெரிகிறது

எங்களை மட்டும் எங்கும் காணவில்லை.


அந்த எமதோடும்

எம் நிரந்தர தேசத்தில் சுயத்தோடும் நாமிருக்க

விடுதலைப் போர் செய்து வீரராய் ஆனவர்

கல்லறைப் புள்ளியின் மையத்தில் நின்று

இனி

விழுமியப் போர் செய்வோம்.

ஒரு பிடி மண் அள்ளி

உதடுகளால் முத்தங்கள் ஒட்டுவோம்.

முட்கள் அவற்றைக் காயப்படுத்தும்

இருந்தும்

முட்டி மோதி தட்டுத் தடுமாறி

இன்னும் அந்தலைகளில் ஆழமாய் தேடுவோம்

எம்மையும் எமதுகளையும்.

ஓற்றைத் துகள் மண்ணில் கூட

எங்கள் ஓராயிரம் சுயம் எழுதிப் போக

புதியதோர் வேள்வி செய்வோம்.


எமக்கு இப்போது தேவை

விடுதலைப் போர் அல்ல!

சுயத்தைக் காக்க ஓர் விழுமியப் போர்.

எமக்கு இப்போது தேவை

தானைத் தலைவனுமல்ல!

தார்மீகக் கடமை.

எமக்கு இப்போது தேவை

ஆயுதக் கவசம் அல்ல!

ஆள்மன விளக்கம்.

எமக்கு இப்போது தேவை

அவதி அவதியாய் ஒரு தீர்வும் அல்ல

அடுத்த அடி எடுக்க ஒரு அறுவைச் சிகிச்சை.


ஆனால்

ஒற்றைத் துகள் மண்ணில் கூட

ஓராயிரம் புத்தக் கடவுளர்க்கு

குத்தகை எழுதவிட்டு

மற்றத் தேசத்தின் மறுகரை மண்ணிருந்து

பற்றுப் பாசமென வெற்றுக் கவி வடித்து

மெதுவாய் அழத்தான் முடிகிறது இப்போதைக்கு….

அள்ளி அள்ளி நான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மௌ;ள மௌ;ள நான் அள்ளத்தான் பார்க்கிறேன்

அள்ள முடியுதில்லை ஒரு பிடி மண் எனக்கு!

மெதுவாய் அழத்தான் முடிகிறது இப்போதைக்கு….


- சாம் பிரதீபன் -

2 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli