காலத்தை காதல் செய்வோம்


ஆதலால் காதல் செய்வோம்

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


காதல்!

இது

காதலை நினைத்து

காலம் எழுதிவைத்த

காதலர் தினத்தின் ஒரு இனிய மாலை.


காதல்!

இது

காதலர் இருவர் விழிகளுள் மோதி

தமக்காய் முளைத்த அரிய நாளென்று

அன்புச் சிரிப்புகள்

அழகாய் உதிர்க்கும் இன்பத்தின் வேளை.


காதல்!

இது

சாதிகள் உடைத்து,

சமய மதில்களைச் சங்காரம் செய்து,

மொழிகளைக் கடந்துபோய்,

இனத்திற்கு வெளியே,

அண்டத்தில் எழுதிய

ஓர் அற்புத ஓலை.


காதல்!

காலங்கள் தோறும் ஒவ்வொரு விதமாய்

காவியம் என்றும் கவிதைகள் என்றும்

கருவறை தொடங்கி

எம் கல்லறை வரையில்

எத்தனை மனிதர் எத்தனை விதமாய்

எழுதி மறைந்த

ஓர் ஏட்டின் முகவரி.


இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.


கட்டிளம் காளையும்

கன்னியின் பார்வையும்

தொட்டு உரசிடும் காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

அம்மை அப்பனாய்

அப்பு ஆச்சியாய்

கணவன் மனைவியாய்

சோடி சேர்கையால்

சிறப்படைந்திடும் காதலர் தினமல்ல.

இது காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

சென்ற காதலர் நின்று பார்க்கவும்,

புதிய காதலர் உறுதி செய்யவும்,

நேற்றுக் காதலர் தோற்றுப் போனதை

இன்று மீளவும் கொண்டு சேர்த்திடும்

காதலர் தினமல்ல.

இது காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

காதலை நினையும் தினம்.


வண்டுக்காக பூ மொட்டவிழ்ப்பதும்

கன்றுக்காக பசு முலை சுரப்பதும்

புவி நனைக்க கார் மேகம் மோதி

நல் மழை உதிர்ப்பதும்

சுடர் எடுக்க பெரும் மரங்கள் மோதியே

தீ பிறந்ததும்

பாவம் போக்கி எம் வாழ்வு காக்க

பல வேதம் வந்ததும்

நம் பசி மறக்க

நெல் தனை மடித்துமே

சாதம் தந்ததும் - காதல் எனில்

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


எப்படிக் காதல் செய்வோம்?

எதை எதைக் காதல் செய்வோம்?

என்று நான் கேட்கையிலே

ஏன் இந்தக் காதல் என்றும்

என் நெஞ்சு துடிக்கிறது.

அம்மாவின் தொப்புள் கொடி

பற்றி நான் சுழல்கையிலே

சுற்றிக் கருவறையை

சுகமாகக் காதல் செய்தேன்.

மனிதனைத் தெரியாது,

மொழியொன்றும் புரியாது,

மாசு மறுவென்று ஒன்றுமே அறியாது.

புன்னகை தெரியாது,

பொன்நகையும் தெரியாது,

விண்ணிருந்து மண்ணிலேதும்

நுண்ணறிவில் புரியாது.

பேச்சு வராது,

மூச்சும் வராது,

காசு என்ற சூட்சுமம் புரியாது,

தூசுநிறை மன மாந்தரும் தெரியாது.

வாசனை தெரியாது,

வாதனையும் அறியாது,

வாரிச் சுருட்டிடும் வஞ்சனை புரியாது.

பார்வை புலராது,

பக்குவம் புரியாது,

நாவில் நஞ்சுடன் வாழத் தெரியாது,

கேள்விப் புலத்தில் நாலும் தெரியாது.

மண்ணைத் தெரியாது,

மனிதர் தெரியாது,

விண்ணுறைந்திடும் மீனைத் தெரியாது.

அம்மாவின் தொப்புள் கொடி

பற்றி நான் சுழல்கையிலே

சுற்றிக் கருவறையை

சுகமாகக் காதல் செய்தேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


கருவறையை காபதல் செய்த

பத்து மாத நிறைவினிலே

பங்குனித் திங்களொன்றில்

புதுவுலகில் மெய்புதைத்தேன்.

முதல் மூச்சு ஓடிவந்து

முத்தமிட்டு உடல்வருட

பூமிமடி மீதிலொரு

புதுமகனாய் உருவெடுத்த

என் பிறப்பைக் காதல் செய்தேன்.

கருவிருந்து என் கொடியறுந்ததும்,

மேனிவருடி இப்பூமியன்னை

என் வரவு சொன்னதும்,

நாணமின்றி என்மேனி

உடையில்லா துறவு கண்டதும்,

கண்விழித்து என் பார்வை வந்ததும்,

செவி நுழைந்தொரு கேள்வி தந்ததும்,

உடல் தழுவி உள் உணர்வு வந்ததும்,

வாய் திறந்து புது ஒலி பிறந்ததும்,

என் பிறப்பின் அற்புதம்.

காற்று என்னுடன் சரசமிட்டதும்,

கூசும் மேனி வெந்நீரில் பட்டதும்,

வாசம் எத்தனை என் உடல் கமழ்ந்ததும்,

நேசத்தோடு பல பார்வை தொட்டதும்,

அழுதபோது கண்ணீர் சுரந்ததும்,

தொட்டில் மேலே சிறுநீர் கழித்ததும்,

விழி திறக்க என் தாய் தெரிந்ததும்,

மொழி திறக்க அம்மா என்றழைத்ததும்,

என் பிறப்பின் அழகியல்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


தொட்டிலாடித் தூங்கியெந்தன்

விழிதிறந்து நோக்குகையில்

பத்துமாதம் தாங்கியென்னை

பகலிரவாய் காத்தமுகம்

புன்னகைத்து நின்றதங்கு.

அன்றுமுதல்

என் அம்மாவைக் காதல் செய்தேன்.

முலை மீது முகம் புதைத்து

பால் தந்தாள்.

தலை கோதி வருடி எந்தன்

தாய் நின்றாள்.

விலை பேச முடியாத

பாசத்தின் யாசகத்தை

நிலையில்லா உலகிதிலே

அவள் தந்தாள்.

தேன் என்றாள்

என்னை மான் என்றாள்.

தோள்மீது போட்டு

எந்தன் கண் என்றாள்.

அழுவதென்று எண்ணுமுன்னே

ஆறுதலாய் எந்தன் அருகிருப்பாள்.

விழுவதென்று முயலுமுன்பே

அரணென தன் நலம் துறப்பாள்.

எழுவன் என் மகன் உலகில்

என்று கீதம் பாடிடுவாள்.

இறைவன் ஒன்றை என்னருகே

கண்டதுபோல் நின்றிருப்பாள்.

ஊனினை மறப்பாள்

துன் உறக்கமும் துறப்பாள்.

தான் என்னும் மெழுகாய் உருகி

நான் வர முயல்வாள்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


பேச்சு வந்ததும்,

நான் அம்மா என்றதும்,

மூச்செடுத்து நான்

புது வார்த்தை சொன்னதும்,

பழக வந்தது

பேச்சில் அழகு வந்தது.

இலகுவாகவே

நாவில் அகரம் வந்தது.

ஆம்!

அகரத்தை நான் காதல் செய்தேன்.

அம்மா என்றவன்

பின்பு அப்பா என்றனன்.

அழகு என்றவன்

பின்பு அன்பு என்றனன்.

அன்னை சொன்ன நான்

பின்னர் அன்னம் சொன்னன்.

அகிலம் என்பதை

கொஞ்சம் அதிகம் சொன்னன்.

அழகு சொன்னவன்

புது அறிவு கொண்டனன்.

அனலை வென்று

என் அறிவில் கொண்டவன்

அக்கா உள்ளவன்

இரு அண்ணன் உடையவன்.

அம்புலி மேலே

உயிர் அதிகம் கொண்டவன்.

அரியது சொன்ன

ஒளவை அறிவு படித்தவன்.

அறம் எனும் நீதி

கண்டு அழிவை வெறுத்தவன்.

அங்கதன் போல

புது அழகு கொண்டவன்.

அரிச்சுவடியிலே

அகரம் காதல் கொண்டவன்.

ஆம்!

அகரத்தை நான் காதல் செய்தேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


காலம் திரண்டது

என்னைத் தட்டிக் கொடுத்தது.

பூதலம் உருண்டது.

என்னில் புது வசந்தம் தந்தது.

அகரத்தை காதல் கொண்ட நான்

என் நகரத்தை காதல் கொண்டேன்.

வீதிகள் தோறும் விரைந்தது வாகனம்.

ஜோதியாய் எங்கேயும்

ஓளிர்ந்தது மின்சாரம்.

கட்டிடக் காடென பற்பல வடிவிலே

நிமிர்ந்து நின்றன

எத்தனை மாடிகள்.

நூலகம் இருந்தது.

நூதனசாலையும் திமிருடன் நின்றது.

சந்தைகள் பிறந்தது

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய

சரித்திரம் இருந்தது.

நீண்டு பெருத்த தொழிற்சாலை எத்தனை,

ஒன்றா இரண்டா

கலைச்சோலை எத்தனை.

இத்தனை இத்தனை அழகிய நகரை

எத்தனை விதமாய் காதல் செய்தேன்.

ஆம்!

அகரத்தை காதல் கொண்ட நான்

என் நகரத்தை காதல் கொண்டேன்.

சங்கிலித் தோப்பு நல்லூரில் இருந்தது,

சுப்பிரமணியப் பூங்காவும் பிறந்தது.

நல்லூர்க் கந்தனும் ஆசனக் கோவிலும்

பக்தி மிடுக்கிலே எழுந்திங்கு நின்றது.

கல்லூரிக் கட்டிடம் எத்தனை வந்திங்கு

அறிவுக் கண்களை திறந்து விட்டது.

கோட்டை மாமதில் விரிந்து கிடந்தது

வர்த்தகம்

குத்தகைக் கணக்கிலே பெருத்தது.

கல்யாண மண்டபம், காங்கேசன் துறைமுகம்

எல்லாம் எல்லாம்

நகரத்தின் விரைவினை

கட்டியம் சொன்னது.

ஆதலால்

நான் நகரத்தை காதல் கொண்டேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


நகரத்து காதல் சிகரத்தை அடைய

வெள்ளை உடுத்த நான்

துள்ளுநடை பயின்று

கொள்ளைச் சிரிப்புடன் அறிவு பெருக்கிய

என் பள்ளியைக் காதல் செய்தேன்.

அங்கு

என் கல்வியைக் காதல் செய்தேன்.

ஆம்!

என் பள்ளியைக் காதல் செய்தேன்.

பள்ளிக் காலம்

நெஞ்சிலே அன்று

அள்ளித் தந்த ஆசைகள் நூறு.

சொல்லச் சொல்ல தீராத கதைகள்.

அவை

சொல்லிச் சொல்லி ஆறாத கதைகள்.

மூன்றாம் கண்ணென

அறிவுக் கண்ணைத் திறந்தது கல்வி.

ஆறாம் விரலாய்

பேனா தந்து சொன்னது செய்தி.

உலகம் புரிந்தது

உண்மை தெரிந்தது.

பகுத்தறிவில்

ஒரு பாகம் வளர்ந்தது.

நிலை உயர்ந்தது தெளிவு தந்தது.

நேரிய வாழ்வுக்கோர் வழி புலர்ந்தது.

நான் பள்ளியைக் காதல் செய்தேன்

என் கல்வியைக் காதல் செய்தேன்.

அட்சர கணிதம் அமைக்கத் தெரிந்தது,

அழகியல் எத்தனை அபூர்வம் சொன்னது.

ஆங்கிலம் என்றொரு புதுமொழி புரிந்தது

விஞ்ஞானம் மட்டும்

என் மண்டையை பிளந்தது.

விளையாட்டுப் போட்டிகள்

வெண்கோப்பைகள் தந்தது.

சுற்றுலா போவது அடிக்கடி நிகழ்ந்தது.

குழப்படி கூடிப்போய்

தண்டனை கிடைத்தது.

இடைக்கிடை பொய்சொல்லி

பள்ளிக்கு ஒழித்தது.

எல்லாம் எல்லாம் நினைவிலே மீள

பள்ளியைக் காதல் செய்தேன்

என் கல்வியைக் காதல் செய்தேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


கட்டிளம் வயது எட்டிய போது

முட்டிய ஆசைகள் எப்படி சொல்வேன்.

வெட்டித்தனமாய் திரியினும் காதல்

சட்டென்று இழுத்ததை எப்படி மறைப்பேன்.

அன்றுதான்

பருவத்தைக் காதல் செய்தேன்.

பெண்ணின் புருவத்தைக் காதல் செய்தேன்.

விடலைப் பருவத்து வெளிகளில் நின்றதை

கடலையைப் போன்ற முகப்பரு தோன்றி

அடிக்கடி சொன்னதாய் ஞாபகம் உண்டு.

உடலை இடைக்கிடை

பார்த்து வருவதும்

கட்டுடல் ஆக்கிட தீவிரம் கொண்டதும்

பெட்டைகள் பார்வையை பெற்றிட எண்ணி

அரும்பு மீசை வளர்த்திட ஏங்கி

நறுமணத் தைலம் எத்தனை வாங்கி

நாளுக்கு நாள்

புதுக் கனவினில் தூங்கி

எங்கோ பார்த்து சிரித்தவளை

என்னைப் பார்த்துச் சிரித்தாளென

முகவரி தேடி அலைந்து

கடிதம் போட்டு பதில் இன்றி

தாடி வளர்த்து வீதியில் திரிந்து

நினைக்க நினைக்க

வேடிக்கை காட்டும்

என் பருவத்தைக் காதல் செய்தேன்.

பெண்ணின் புருவத்தைக் காதல் செய்தேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


தாயைப் போலவே

என் தாய்மொழித் தேசம்

காயம் நிறைந்துபோய்க்

கிடந்தது என்றும்.

தேசத்தைக் காதல் செய்தேன்

செந்நீர் ஓடிய

என் தேசத்தை காதல் செய்தேன்.

வரலாறு வரைந்த சதுரங்கத் தட்டிலே

புண்பட்டு அழுதது

என்னுயிர்த் தேசம்.

கண்பட்டுப் போனதாய் மண்ணவர் அவலம்

பாருலகெங்கும் பரவி ஒலித்தது.

விண்ணுயர் மாடிகள் சரிந்து விழுந்தது.

என்நிலம் எங்கும்

மரணம் மலிந்தது.

கேட்பாரற்று எம்குரல் சரிந்தது

பார்ப்பாரற்று எம்முயிர் இறந்தது.

அணைத்திட ஆளின்றிஅ ங்கம் வெந்தது

துடைத்திட விரலின்றி அழுகை நீண்டது.

தாயைப் போலவே

என் தாய்மொழித் தேசம்

காயம் நிறைந்துபோய்க்

கிடந்தது என்றும்.

தேசத்தைக் காதல் செய்தேன்

செந்நீர் ஓடிய

என் தேசத்தை காதல் செய்தேன்.

வீதிகள் வெறிச்சோடி வெறுமை கண்டது

ஊரடங்கும் பொழுதுகள்

நிலையென்றானது.

பேசத் துணிந்ததால் நாவறுந்து போனது.

புலம்பெயர்தோடி எங்கள்

நாவறண்டு சோர்ந்தது.

எங்களின் வாழ்விடம் எல்லையழிந்தது.

மங்களம் குலைந்து போய்

தொல்லை நிறைந்தது.

கொள்ளைநோய் மேனியை

தின்று சிலிர்த்தது

பட்டினி மரணத்தின் பட்டியல் நீண்டது.

உற்றம் உறவுகள் ஊரவர் என்று

கண்ணீர் உகுத்தொரு

ஒப்பாரி கேட்டது.

முற்றும் போரின் முழக்கம் கேட்டு

மீண்டும் அச்சம் அப்பிக் கிடந்தது.

தாயைப் போலவே

என் தாய்மொழித் தேசம்

காயம் நிறைந்துபோய்க்

கிடந்தது என்றும்.

தேசத்தைக் காதல் செய்தேன்

செந்நீர் ஓடிய

என் தேசத்தை காதல் செய்தேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.


கருவினைக் காதல் செய்தேன்

என்

பிறப்புருவினைக் காதல் செய்தேன்.

அன்னையைக் காதல் செய்தேன்

அவள்

அன்பினைக் காதல் செய்தேன்.

அகரத்தை காதல் செய்தேன்

என்

நகரத்தை காதல் செய்தேன்.

பள்ளியைக் காதல் செய்தேன்

பள்ளிக் கல்வியைக் காதல் செய்தேன்.

பருவத்தை காதல் செய்தேன்

பெண்ணின்

புருவத்தைக் காதல் செய்தேன்

கன்னியைக் காதல் செய்தேன்

நல்ல

கருத்தினைக் காதல் செய்தேன்.

பெண்ணினைக் காதல் செய்தேன்

சொந்த

மண்ணினைக் காதல் செய்தேன்.

கண்ணீரைக் காதல் செய்தேன்

சிந்திய

செந்நீரைக் காதல் செய்தேன்.

வாழ்வைக் காதல் செய்ததால்

வாழ்வு மீதான காலத்தைக் காதல் செய்தேன்.

இனி

இறக்கும் போதும்

என் மரணத்தைக் காதல் செய்வேன்.

இது காதலர் தினமல்ல.

நல்ல காதலின் தினம்.

இது காதலர் இணையும் தினமுமல்ல.

நல்ல காதலை நினையும் தினம்.

ஆதலால் காதல் செய்வோம்.

பாழ்பட்டுப் போன எம்

சீர்கெட்ட நெஞ்சுடையும்

வேல்தைத்துப் போன எம்

துன்பத்துக் கறையோடும்

ஆதலால் காதல் செய்வோம்.

எனவே!

வாருங்கள்,

கருவறை தொடங்கி

எம் கல்லறை வரை

ஜனனம் முதல் எம் மரணம் வரை

காலத்தை காதல் செய்வோம்.

- சாம் பிரதீபன் -

1 view
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli