முகக்கவசங்கள் எப்பொழுதும் காவற்துறையினரிடமிருந்தான பாதுகாப்பு அல்ல!


அது ஒரு மாலைப்பொழுது. சூரியன் தன்னை ஒடுக்கி நாளைய நாள் வரவுக்கான ஒரு விடைபெறுதல் பொழுது. அவசர அவசரமாக நகர்ந்து செல்லும் வாகன வரிசையில் என்னுடைய காரின் நகர்வும் நெருக்கமாய் நுழைந்து இடம்பிடித்துக்கொண்டது. நானும் என்னுடைய மனைவியின் சில நிமிட நிசப்த்தத்தின் பின் ஏதோ சொல்ல முனைவதை புரிந்து கொண்டவனாக சீக்கிரமாக காரை ஓட்டத்தொடங்கினேன். மிகுதியாய் இருக்கும் இரண்டு மணி நேரத்தில் திரும்பவும் வீடு வந்துவிட வேண்டிய ஊடரங்குச்சட்ட வேளை அது. கொரோனாவுடன் பழகிப்போய் விட்ட ஒருவனாக ஆங்காங்கே முகக்கவசங்களை கழற்று வைத்துவிட்டு செல்லுகின்ற நிலையிலேயே அந்த நிமிடம் வரை இருந்தேன். பல கேள்விகளுடன் எம்மோடு பயணப்பட்டிருந்த எமது பிள்ளைகளும் அந்த நிமிடம் வரை என்னுடன் பேசவில்லை. இரவு ஊரடங்கு நேரம் பத்து மணிக்கு பத்து நிமிடங்களே எஞ்சியிருக்கும் நிலையில் சீக்கிரமாக வீடு திரும்பவேண்டி இருந்தது.

அங்காங்கே தூரங்களில் என்னைப்போன்றவர்களும் கடைசி ஒருநிமிடத்துக்குள்ளாவது போய்விடவேண்டும் என்ற வேகத்தில் முந்தியடித்து சென்றுகொண்டிருந்தனர். திடீரென நான் சென்றுகொண்டிருந்த பாதையில் நீலநிற மின்னி மின்னி அணையும் வெளிச்சத்துடன் காவற்துறையினரின் வாகனத்தை என் கண்கள் காணவும் அத்தனை மணி நேரமும் தூக்கிபோடப்பட்டிருந்த முகக்கவசத்தை தேடி எடுத்து போட்டுக்கொள்வதற்குள் என் பதற்றத்தை பின்னால் இருந்து புரிந்துகொண்ட இருபிள்ளைகளும் தாங்களும் காவற்துறை வாகனத்தை அண்மிப்பதற்கிடையில் முகக்கவசத்தை சரிசெய்தவண்ணம் தங்கள் தயார் நிலையை எனக்கு கூறினார்கள். மெதுவாக காவற்துறையினர் நின்ற இடத்தை கடந்து வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்தநாள் காலை வழக்கம்போல பிள்ளைகள் பாடசாலைக்கு தயாரானார்கள். அவர்களை காரில் ஏற்றியவண்ணம் இன்னுமொரு நாள் வேகமாக நகர ஆரம்பித்தது. அவசரமானதும் அவசியமானதுமான வேலைகளுடன் இரவின் ஊரடங்கை தளர்த்திய பெருமூச்சுக்களை காலையின் வாகன நெரிசல் உணர்த்தியது. வழமையை போலவே முகக்கவசங்களை காரின் அருகில் வைத்துவிட்டு என்னுடைய பயணம் தொடர்ந்தது.

சில நேரம் கழித்து காவற்துறையினரின் வாகனம் வீதியின் அருகில் தரிக்கப்பட்டிருந்ததை என்னுடைய பிள்ளைகள் கண்டு வேக வேகமாக முகக்கவசங்களை எடுத்து அணியத்தொடங்கியவர்களாக எனக்கும் எடுத்து நீட்டியவர்களாக முகக்கவசத்தை அணிந்துகொள்ள துரிதப்படுத்தினார்கள். எனக்கு தெரிந்திருந்தது அந்த வாகனத்தில் காவற்துறையினர் இருந்திருக்கவில்லை என்று... அப்பொழுதே நான் எனக்குள் வெட்கிப்போனேன். பிள்ளைகளுக்கு பிழையானதொரு செயற்பாட்டை நேற்றைய தினம் காண்பித்து கொடுத்துவிட்டேன் என்று.

முகக்கவசங்கள் எப்பொழுதும் கொரோனாவிலிருந்து எமக்கான பாதுகாப்பே தவிர காவற்துறையினரிடமிருந்தான பாதுகாப்பு அல்ல. அந்த நிமிடத்தில் பிள்ளைகளுக்கு என்னிடத்தில் மௌனத்தை தவிர வேறு எந்த பதிலும் இருந்திருக்கவில்லை. சில மணித்துளிகள் அமைதியின் பின்னர் முகக்கவசத்தை வாங்கி அணிந்துகொண்டே நன்றி என்று சொன்னேன். அந்த நன்றி என்னுடைய தவறான வழிநடத்துதலை உணர்த்திய அவர்களுக்கானது என அவர்கள் அறிந்திருக்கவில்லை..

குழந்தைகள் எப்பொழுதும் எமக்கான வழிகாட்டிகளே நாம் சரியாக வழிகாட்டும் வரை...

50 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: