ஈழத்தமிழர்களின் போர் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டமை ஏன்?
FACEBOOK கொடுத்த விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சர்ச்சையாகி வரும் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பதில் வழங்கியுள்ளது.
மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை தாங்கள் மதிப்பதாகவும், எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்' என்றும் ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், தெரிவித்துள்ளார்.
வெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிராக இருப்பதனாலும், ஃபேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காகவும் நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் ஃபேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, குறிப்பிடப்பட்ட சில ஃபேஸ்புக் பயனர்களின் பதிவுகள், ஃபேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என ஃபேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது. எனினும், ஃபேஸ்புக்கில் பயனர்கள் பகிர்வதற்கு அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள், தலைவர்கள் மற்றும் விவகாரங்களின் ஒட்டுமொத்த பட்டியலை அளிக்க பிபிசி விடுத்த வேண்டுகோளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.