இரணைதீவு பகுதியில் கொரோனா சடலங்களைஅடக்கம் செய்வது நடைமுறை சாத்தியமற்றது- மசூதியின் நிர்வாகத்தினர்.

கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதானது நடைமுறை சாத்தியமற்றது எனவும் தெமட்டகொட – குப்பியாவத்தை மயானம் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு தகுந்த இடமாகும் என்று பேராதனை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தும் மருதானை மசூதியின் நிர்வாகத்தினரால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட – குப்பியாவத்தை மயானம் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு தகுந்த இடமாகும் என்று பேராதனை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதாக குறித்த கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இஸ்லாமிய மையத்தின் தலைவர் மொஹமட் உசைன், இந்த விடயம் குறித்து தேவைப்பட்டால் உலக முஸ்லிம் சபைக்கும் சென்று பொருத்தமான நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குப்பியாவத்தை மயானம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகம் நடத்திய நிலத்தடி நீர் நிலை அறிக்கை எந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாகவும் தாங்கள் இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம், ஆனால் மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் முறையிடுகிறோம் என கூறியுள்ளார். இதேநேரம், குறித்த கடிதம் இந்தவாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.