அடவுகளைக் கடந்து.....

காலத்தின் கலைத் தடம் - 1

முழு இருட்டாக இருந்தது. நானும் என் தங்கச்சி தர்ஷினியும் அருகருகே இருக்கின்றோம். நேரம் இரவு ஏழு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது என நினைக்கிறேன். ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருந்த மனிதக் குரல்களில் பாதி திடீரென அமைதியானது. ஒரு பெரும் சத்தம். சத்தத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைச் சீலைகளாக மத்தியில் கிழிந்து கொள்கிறது. அப்போதுதான் முதன் முதலில் அப்படியொரு கம்பீரக் குரலைக் என் வாழ்நாளில் கேட்கிறேன். "ஏழு மொழிகள்.... ஏழு மொழிகள்..... அந்த ஏழு மொழிகளும் தான் எங்கே? ஒருவேளை அவை காற்றில் கரைந்து விட்டனவோ... அப்படியாயின் அண்ட கோளத்தின் அகன்ற வெளிகளே சற்று நில்லுங்கள்!"

யாழ்.திருமறைக்கலாமன்றத்தின் "சிலுவை உலா" திருப்பாடுகளின் ஆற்றுகை அந்த ஆண்டில் இப்படித்தான் ஆரம்பமானது. அந்த ஒரு ஆற்றுகைக்குப் பின்னர் இத்தனை ஆண்டுகளில் இன்றுவரை அந்த மன்றின் அவையில் இருந்து ஒரு பார்வையாளனாக எந்த ஆற்றுகையையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் குருநகர் என்னும் கரையோரப் பகுதிக் குக்கிராமம் தான் என்னுடையது. "கொண்டடி வீதி" என்ற பெயரில் புழக்கத்தில் இருந்த ஒடுங்கிய தெரு ஒன்றின் இரண்டு கரைகளிலும் நெருக்கமாய் அமைக்கப்படிருக்கும் வீடுகளில் ஒன்றில் தான் என் பிறப்பும் வளர்ப்பும் நிகழ்ந்திருந்தது. எங்கிருந்து எப்படி வந்ததோ தெரியவில்லை, கூத்தும் பாட்டும் கும்மாளமுமாய் எங்கள் வீடு அப்போதெல்லாம் அமர்க்களப்பட்டே கிடக்கும். நாங்கள் ஆறு பேர். ஆசை மாமாவின் பிள்ளைகள் நான்கு பேர். மொத்தமாக பிள்ளைகள் மட்டுமே பத்துப் பேர் கூட்டுக் குடும்பமாக அந்த சின்ன வீட்டில் வாழ்ந்திருந்தோம். பாடசாலை விடுமுறைக்கால வார இறுதிகளில் இரண்டு விடயங்களில் ஏதாவது ஒன்று கட்டாயம் நிகழும்.

ஒன்று, Deck வாடகைக்கு எடுத்து TV இல் படம் பார்த்தல். மற்றையது, பத்துப் பிள்ளைகளாய் நாங்களும் எமது அயல் வீட்டு நண்பர்களும் சேர்ந்து நாடகங்கள் வீட்டுக்குள்ளே போடுவது. அம்மாவும் அப்பாவும் மாமியும் தான் பிரதான பார்வையாளர்கள். அயல் வீட்டுப் பிள்ளைகளின் பெற்றோரும் வேறு அழையா விருந்தாளிகள் சிலரும் கூட சில தருணங்களில் வந்திருந்து உற்சாகப்படுத்துவார்கள். அப்படி உற்சாகப்படுத்தியவர்களில் ஒருவர்தான் G.P.பேர்மினஸ் uncle. அவர் அப்போது திருமறைக்கலாமன்றத்தின் நாடகப் பிரிவின் பொறுப்பாளர்.

எங்கள் வீட்டு வெளிப்புற முன்பக்க மதில் ஒப்பீட்டளவில் சற்று உயரம் குறைந்திருந்தது அப்போது. வீதியில் சைக்கிளில் நின்றபடி எட்டிப் பார்த்தால் வீட்டின் முன்பக்கம் அமைந்துள்ள விறாந்தையை தெளிவாகப் பார்க்க முடியும். அதுவரை வீட்டின் Hall இல் "பண்டாரவன்னியன்", "சங்கிலியன்","கட்டப்பொம்மன்", "குமணன்" போன்ற நாடகங்களைப் போட்டு அயல்வீடுகளில் எமக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருந்த நாம், அன்று ஒரு நாள் வீட்டின் முன் விறாந்தையில் "பலிக்களம்" என்ற மிகப் பழைய பிரபல்யமான நாடகத்தின் முக்கிய காட்சிகளை நிகழ்த்திக்காட்ட ஆயத்தமானோம். காட்சிக்கு முன்பதாக பழைய ரேப் றெக்கோடரில் Boney M பாடல்களை இசைக்கவிட்டு ஒரு வெள்ளை வேட்டியை தம்பியும் தங்கச்சியும் இரு கரைகளில் இழுத்துப் பிடிக்க, பின்னால் இருந்து மச்சாள் ஜானு eveready பற்றறி போட்ட Touch light ஐ அடிக்க, அந்த வெளிச்சத்தில் அப்போது பிரபல்யமான Star toffee சுற்றி வரும் பேப்பரை நான் பிடிக்க வேட்டிக்கு மறு புறத்தே இருப்பவர்களுக்கு பெரிய காட்சியாய் அதை காட்டி முடித்தோம். அம்மா கை தட்டினார். அப்பா சிரித்தபடி இருந்தார். வீட்டு மதிலுக்கு வெளியே சைக்கிள்களை நிறுத்தி எமது கூத்துக்களை எட்டிப்பார்த்தபடி பார்வையாளர் அதிகரித்திருந்தது அந்த இரவு வேளையில் எமக்கு தெரிந்திருக்கவில்லை.

Toffee paper இல் தொடங்கி நாடகம் முடியும் வரை எம்மிடம் இருந்த இந்த நாடக ஈடுபாட்டை சைக்கிளில் நின்றபடி மதில்களால் பார்த்தவர்களில் ஒருவர் தான் G.P.பேர்மினஸ். அத்தனை பேரையும் அழைத்தார் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திருமறைக்களாமன்ற "களப் பயிற்சி" வகுப்புகளுக்கு, முறைப்படி நாடகம் கற்றுத் தருவதற்காய். அங்கு வரும் ஏனையவர்களுடன் நடந்த ஒரு வருட தொடர்ச்சியான பயிற்சியின் பின்னர் எம்மில் பலருக்கு அதில் ஈடுபாடு குறையத் தொடங்க நானும் மூத்த தம்பி ஆனந்தும் தங்கச்சி தர்சினியும், அயல் வீட்டு ஜெகனும் மட்டுமே இறுதிவரை நின்று பிடித்தோம். எட்டாம் ஒன்பதாம் வகுப்புக்கு நான் வரும் வரை அந்த பயிற்சிக்கு ஒழுங்காக சென்றுவந்த என்னை, உள்ளக இடப் பெயர்வுகளும் பின்னர் O/L பரீட்சைக்கான ஆயத்தங்களும் தடை செய்யவே அம்மன்றத்துடனான தொடர்பு முழுவதுமாய் நின்று போனது.

நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் திருமறைக்கலாமன்ற முற்றத்தில் நானும் தங்கச்சியும் காலடி வைத்தது அந்த "சிலுவை உலா" ஆற்றுகை பார்ப்பதற்காகத்தான். அந்த ஒற்றை நாடகத்துடன் ஏற்கனவே எனக்கிருந்த ஈடுபாடும் போதையாய் ஏற, முழுவதுமாய் நுழைந்து கொண்டேன் அம்மன்றின் முயற்சிகளோடு. அதன் பின்னர் இன்றுவரை அங்கு நடந்த எந்த ஆற்றுகையிலும் மேடையில் அல்லது மேடைக்கு அருகில் ஈடுபாட்டாளனாக இருந்தேனே ஒழிய பார்வையாளனாய் இருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கவில்லை.

தடங்கள் தொடரும் .....


- சாம் பிரதீபன் -


  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE