அடவுகளைக் கடந்து.....

காலத்தின் கலைத் தடம் - 2

எனது வகுப்பறை முழுவதும் கொள்ளெனச் சிரித்தது. எல்லோரும் மிக ஏளனமாக என்னைப் பார்த்து சிரித்தபோது, நான் வெட்கித்துப் போய் இருக்கிறேன் என்பதாகத்தான் அவர்களில் பலரும் நினைத்திருப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் எல்லோரும் செய்ய முடியாத ஒன்றை, அல்லது செய்ய விரும்பாத ஒன்றை நான் செய்திருப்பதாகவே அப்போதும் நம்பினேன். அந்த சம்பவம் என் பயணத்தின் ஒரு தடையாக எனக்குள் வந்துவிடக் கூடாது என்பதில் அப்போது நான் மிகக் கவனமாக இருந்து கொண்டேன்.


30 வருடங்களுக்கு மேலாக, "திருப்பாடுகளின் ஆற்றுகையை இதைவிட சிறப்பாக யாராலும் படைத்துவிட முடியாது" என்னும் அளவுக்கு திருமறைக்கலாமன்றம் தன் திறனை வெளிப்படுத்தியபடி இருந்த காலகட்டம் அது. மேற்புலத்து நாகரிகங்களின் கண்களினூடாக கடவுளைப் பார்த்த காலங்களில் சலிப்புற்ற அருட்தந்தை மரியசேவியர் அடிகள், எமது சிற்றிலக்கியங்களூடும் அதன் அழகியல் கண்களூடும் இறை தரிசனத்தைக் கொடுக்க அப்போதெல்லாம் முழு முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். உலா, கலம்பகம், பரணி என சிற்றிலக்கியங்களை கத்தோலிக்கத்துக்கு அவர் அறிமுகம் செய்து வைக்க முனைந்த அந்த காலங்களில் தான் அவரை நெற்றிக்கு நேரே சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.

1991 இல் "சிலுவை உலா" ஆற்றுகையில் பார்வையாளனாக இருந்த என்னை உலா, உள்ளிளுத்துக் கொள்ள அடுத்த ஆண்டின் "கல்வாரிப் பரணி" ஆற்றுகைக்கு தயார்ப்பட்டுக் கொண்டிருந்த திருமறைக்கலாமன்றத்தோடு அவ் ஆற்றுகையில் இணைய எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

திருப்பாடுகளின் ஆற்றுகையை அம் மன்றத்தின் இயக்குனர் அருட்திரு.மரிய சேவியர் அடிகளார் தான் அக்காலங்களில் நெறிப்படுத்துவது வழமை என்பதை அப்போது நான் அறிந்து வைத்திருந்தேன். ஆற்றுகையில் இணைய சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்பதற்கு அப்பால் அந்த அடிகளாரை நேருக்கு நேராய் காணப்போகிறேன் என்கின்ற ஒரு ஆர்வம் தான் எனக்குள் அப்போது மிக அதிகமாய் இருந்தது. என் வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பிய மனிதர்கள் இருவர். ஒன்று அரசியல் விடுதலைக்கு ஆயுத, அகிம்சை வழி போராடிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். மற்றையது, சமுக, ஆன்மீக விடுதலைக்கு கலை, கலாசார வழி போராடிய அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார். இருவரும் வெவ்வேறு பாதை வழியே ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தார்கள் என்பதாகவே நான் அவர்கள் குறித்து நம்புகின்றேன். ஒன்று ஆபத்துகள் நிறைந்த பாதை. மற்றையது அடர்ந்த இருள் நிறைந்த பாதை. இரண்டு பாதைகளிலும் பயணிப்பதற்கு ஒரு அசாத்தியத் துணிச்சலும் பேராளுமையும் தேவையாக இருக்கின்றது.

அருட்தந்தையை காண வேண்டும் என்ற ஆர்வம் அப்போதைய கால கட்டத்தில் திடீரென முளைத்துக் கொண்டதல்ல. எனது ஐந்து வயது முதல் எனக்குள் இருந்த ஆர்வம் தான் அது. ஆனால் "கல்வாரிப் பரணி" வரை எனக்கு அந்த தருணம் வாய்த்திருக்கவில்லை.

எனது ஊர் "குருநகர்" என்னும் ஒரு கரையோர குக்கிராமம். அக்கிராமத்தின் சிறப்புகள் பற்றியோ, அதன் பெருமைகள் பற்றியோ, அதன் மூதாதையர், பாரம்பரியம், முதிசம், அங்கு வாழுகின்ற மனிதர்கள், வாழ்வு முறைமைகள் பற்றியோ அப்போதெல்லாம் பெரிதாக எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவ்வூரின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்த சிறிய கலை அரங்கில் எழுதப்பட்டிருந்த வாசகம் மட்டும் எனக்குள் அப்படியே அந்த வயதில் உறைந்து போயிருந்தது. "உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்" என்ற அந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் அது எழுதப்பட்டிருந்த அந்த கலையரங்கத்தின் உருவாக்க கர்த்தாவும் அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

"பாலா பாலா ஓடிவா பட்டம் விடுவோம் ஓடிவா நிசார் நிசார் ஓடி வா பந்தடிப்போம் ஓடி வா" என்ற பாலர் பாடசாலைப் பாடல்களுக்குப் பிறகு எனக்குள் களமிறங்கிய முதல் கவிதைகளின் வரிகள் அந்த வரிகளாகவே அப்போது எனக்கு இருந்தன.

சவிரிமுத்துச் சுவாமி என்பது மரிய சேவியர் அடிகளார் தான் என்பது அந்த நாட்களில் எனக்கு தெரியாது.

எனது ஊரில் சவிரிமுத்து சுவாமியின் பெயர் அப்போது மிகப் பிரபல்யமாயிருந்தது. என்னுடைய ஊரில் நடைபெறும் திருமண, சாமத்திய மற்றும் அற்ஹோம் போன்ற நிகழ்வுகளுக்கு தெருக்களை ஊடறுத்து பந்தல் போட்டு கொண்டாடுவது அந்த நாட்களில் வழக்கம். கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் பலமான மரக் கம்பங்களால் அமைக்கப்படும் பந்தல்களுள் அனேகமாக சிறுவர்கள் கம்பு பிடித்து விளையாடும் விளையாட்டை விளையாடுவார்கள். எங்கள் ஊரின் கொண்டாட்டப் பந்தல்களில் அந்த நாட்களில் சினிமாப் பாடல்களைக் காட்டிலும் அதிகம் ஒலித்தது சவிரிமுத்து சுவாமியின் அடுக்கு மொழிகளில் அமைந்த அவருடைய பேச்சுக்களின் ஒலி நாடாதான். கம்பு பிடித்து விளையாடுவதைக் காட்டிலும் அந்த ஒலிபெருக்கிகளின் கீழ் நின்று அவருடைய பேச்சுக்களைக் ஒன்றுவிடாமல் கேட்பதில்தான் எனக்கு அப்போது அதிகம் ஆர்வம் இருந்தது. இந்த மொழியாற்றல் எனக்கு வரவேண்டும், இவரைப் போல நானும் ஒரு நாளில் பேச வேண்டும் என ஒரு ஏகலைவனைப் போல அவர் குரலை மட்டும் கேட்டு என்னை அத்துறையில் வளர்த்துக் கொள்ள விரும்பியவன் தான் நான்.

"கல்வாரிப் பரணி" ஆற்றுகையில் எனக்குத் தரப்பட்டது ஒரு சிறிய பாத்திரம் தான். இயேசுவை மரணத் தீர்வைக்கு உட்படுத்திய உரோமைய ஆளுநர் பிலாத்துவின் கை கழுவும் பாத்திரம் ஏந்தும் ஒரு உதவியாளன் தான் நான். இருநூறு அடி நீளமான அந்த பிரமாண்ட அரங்கின் ஒரு மூலையில், ஏறத்தாழ 250 நடிகர்கள் கலந்து கொண்ட இரண்டு மணி நேர ஆற்றுகையில், வெறும் இருபது வினாடிகளிலும் குறைவான நேரத்தில், இருபது அங்குல நீளமான குட்டைப் பாவாடை போன்ற உடையணிந்து உள்ளாடை தெரிய மின்னல் போல் வந்துவிட்டு மறைந்த என் பொருட்டுத் தான் அன்று எனது பாடசாலை வகுப்பறை அப்படி கொள்ளென்று சிரித்துக் கொண்டது. பாடசாலை மட்டத்தில் ஒரு சிறந்த நாடகக் கலைஞன் என பெயர் வாங்கி அத்தனை சகபாடிகளுள்ளும் ஒரு ஹீரோவாக வலம் வந்தவன் திருமறைக் கலாமன்ற நாடகத்தில் நடிக்கிறான் என்றதும் எல்லோரும் வந்து அங்கு அவையை நிறைத்திருந்தார்கள். அவர்களுள் எனது பொருளியல் ஆசிரியர் திரு.திலகரட்ணம் அவர்களும் ஒருவர். ஆனால் வருவான் வருவான் என தொடக்கத்தில் இருந்து மிக ஆர்வத்தோடு அரங்கில் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, கடைசியில் ஒரு மங்கிய வெளிச்சத்தில் ஓரிரு வினாடிகள் மாத்திரம் தோன்றி மறைந்த என் பாத்திரம் நகைப்புக்கிடமாகிப் போனது. தம்மிடையே இருக்கும் ஒரு HERO அம் மன்றத்தில் ZERO ஆகிப் போனமை நிகழ்வுக்குப் பிந்திய வகுப்புகளில் நகைச்சுவைப் பேசு பொருளாக ஆகியிருந்தது.


ஆனால் அதுவரை ஒரு ஏகலைவனாக இருந்த நான், என் கலைத் துரோணாச்சியாரை நெற்றிக்கு நேரே கண்ட மகிழ்ச்சியிலும் அவர் நெறிப்படுத்தலில் அப்படி ஒரு மேடையில் தோன்றி மறைந்த பெருமிதத்திலும் அவரிடம் இன்னமும் ஆழமாய் கற்கவும் நான் அப்போதெல்லாம் வழி தேடிக்கொண்டிருந்தேன்.

தடங்கள் தொடரும் .....


தடம் - 1


19 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli