ஓர் அகதியின் மரணம்!

எழுத்தாளர் - காவியா ஜெகதீஸ்வரன்.

ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது.


அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..! அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது.அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..!


அந்த இளைஞன் வாழ்விலும் சோதனை வந்தது..!

ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முடிவை அந்நாடுகளின் அரசுகள் தீவிரப்படுத்தியிருந்தன..! அதன் தொடர்ச்சியாக அதிகாலை வேளையில் அகதிகள் தங்கியிருந்த முகாம்களில், வீடுகளில், வேலை செய்யும் இடங்களில் என பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்..!

இவர்கள் யாவரும் ஜேர்மனியின் விமான நிலையங்களில் ஒன்றான Düsseldorf விமான நிலையத்திற்கு அருகாமையாக தடுத்துவைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இவர்களை மீட்டுக்கொள்ளும் பொருட்டு அகதிகளின் நலன்களுக்காக போராடும் அமைப்புக்களும், பொது அமைப்புகள், இடதுசாரிய அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் என்று பலரும் போராடிக் கொண்டிருக்க ...!அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பல குடும்பங்களும், பிள்ளைகளும், இளைஞர்களும், வயதானவர்களும் தமது உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்..!

அவர்களில் பலர் தமது பிள்ளைகளை விட்டு தாம் மட்டும் திருப்பி அனுப்பப்படும் சூழல் நிகழுமாயின்,பொலிஸார் முன்னிலையில் தம்மை கத்தியால் குத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்..!தாம் இவ்வளவு காலமும் சேர்த்த உடைமைகளையும், ஆவணங்களையும் தமது நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கெல்லாம் ஒளிந்துகொள்ள முடியுமோ அங்கெல்லாம் ஒளிந்து கொண்டனர்..! “ இச்சம்பவங்கள் யூத மக்கள் தம்மை கிட்லரின் நாசி படைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தமது உடைமைகள் சகிதம் ஓடி ஒளிந்த வரலாற்றை நினைவூட்டியது...!”

“அவ்வாறே இந்த இளைஞனும் தனது நண்பர் வீட்டில் ஒளிந்துகொள்ளப் போவதாக எம்மிடம் தெரிவித்தவர்; தனது அறையை உள்ளால் தாழிட்டுவிட்டு யாருக்கும் தெரியாது உள்ளே இருந்து விட்டார்...!”கைதுசெய்யப்பட்வர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று போராடிய அனைத்து நிறுவனங்களதும், தனிமனிதர்களதும், மனிதவுரிமை ஸ்தாபனங்களினதும் குரலை அரசு செவிமடுக்காது கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியது ஜேர்மன் அரசு..!


“இவ்வாறு ஒளிந்திருந்த இளைஞன் மரணித்து நான்கு நாட்களின் பின்னர்..! அவனது அறையிலிருந்து சடலமாக எடுக்கப்படுகின்றான்...!” அவனது மரணம்..! மாரடைப்பினால் நிகழ்ந்துள்ளதாக வைத்தியர்களும், பொலிஸாரும் உறுதிப்படுத்துகின்றார்கள்..!சமூக ஊடகங்கள் அவனது மரணதைப் பற்றி செய்தி வெளியிடுகின்றன..! எல்லோரும் அனுதாபம் தெரிவிக்கின்றார்கள்..! ஆனால் எம்மில் பலர் நாம் இந்த மண்ணின் பிரஜைகள்..! எம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது..! என்று இவ்வாறாக அகதி அந்தஸத்து கோரும் புதியவர்கள் விடயத்தை நோக்குகிறார்கள்..!

“ நாமும் அகதியாக வந்தவர்கள்தான் என்பதை அவர்கள் மறந்து விடாது மற்றவர்களுக்கும் இக்கட்டான காலங்களில் உதவ முன்வர வேண்டும்.!!!” இந்த மனிதனின் மரணம் பல ஆயிரம் புலம்பெயர்ந்த உறவுகளுக்கு தெரிந்திருந்தது..!அவனுடைய மரணத்தை மற்றவர்கள் பாதிக்காதவகையில் மக்கள், அமைப்புக்கள், குறிப்பாக ஐரோப்பிய, ஜேர்மன் மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் இன்னும் திருப்பிஅனுப்பப்படவுள்ளவர்களை பாதுகாத்திருக்க முடியும்..!ஆனால் துரதிஷ்டவசமாக இவை நடக்கவில்லை..!


தம்மை தமிழர்களின் இருப்பாக காட்டிக் கொண்ட அமைப்புக்கள் கூட அவன் மரணத்தில் கலந்துகொள்ளவில்லை..!இலங்கைத் தமிழர் ஒருவர் இறந்துள்ளதாக உள்ளூர் அரச அமைப்பு எமக்கு தொலைபேசியில் அழைப்பு அனுப்பியது..! பொதுவிடயங்களில் எமது குடும்பம் ஆர்வம் காட்டுவதனாலும், நீண்ட காலம் இந்த கிராமத்தில் நாம் வாழ்வதாலும் இவ்வாறான நடைமுறையை அவர்கள் கடைப்பிடிப்பது வழமை..!அந்த இளைஞனுக்கு யாருமில்லை..!

நாமாவது போய் அஞ்சலி செய்து இறுதி மரியாதை செய்துவர முடிவெடுத்து; விடுமுறையும் பெற்றுக்கொண்டு செல்ல ஆயத்தமான அன்றைய தினம் எனது துணைவியாருக்கு தொலைபேசி அழைப்பொன்று..! அந்த இளைஞருக்கு வேலை உறுதிசெய்யப்பட்ட செய்தி..! அடுத்த கிழமை அவர் வேலையைத் தொடங்கலாம் என்று..!

வேதனை..! மனதை முட்ட ..! அழுத என் துணைவியாரை அழைத்துக் கொண்டு பூக்களுடன்அஞ்சலி செய்ய போன பின்னர்தான் அவரின் உறவுகளும் வந்திருந்ததை காண முடிந்தது...!அந்த உறவுக்கார பெண் எங்களிடம் அவர் ஒளிந்திருந்ததையும், அதன்மூலம் ஏற்பட்ட மன அழுத்தம், அதைத் தொடர்ந்த உபாதைகள்,உணவு உட்கொள்ளாமல் மறைந்திருந்தது அனைத்தும் ஒன்றுசேர அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதுவரை தெளிவுபடுத்தினார்..!


அவரின் குரல் பதிவுகளையும் போட்டுகாட்டியவர் தேம்பியழுத்தை என்னால் மறக்க முடியவில்லை..!புலம்பெயர்ந்துள்ள உறவுகளுக்கு உதவுவோம்..!எம்மால் முடிந்தவரை..! பண உதவிகள் தேவையில்லை...! உங்கள் மொழி அறிவு கூட அவர்களின் வாழ்வில் விளக்கை ஏற்றலாம்..!

103 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: