அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த கூட்டமைப்பு வலியுறுத்தல்.
தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்படாது: விதுர விக்கிரமநாயக்க.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், சாணக்கியன் ஆகியோர் இந்த தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் தொல்லியல் துறையினரை விடவும் இராணுவத்தினரே அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியதுடன் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் தொடர்பான வரலாற்றையும் விரிவாக சபையில் முன் வைத்தனர்.
தொல்லியல் திணைக்களத்தினரின் பணியில் ஏன் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்? நாம் சமாதானத்தை விரும்புகின்றோம். அதேபோன்றே எமது ஆலயங்களும் சமாதானத்தையே வலியுறுத்துகின்றது. ஆனால் அரசும் தொல்லியல் திணைக்களத்தினரும் எம் மீதும் எமது ஆலயங்கள் மீதும் அராஜகத்தையே புரிகின்றனர் .இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
எனினும் தொல்லியல் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் எந்த ஆய்வு நடவடிக்கைகளும் நிறுத்தப்படாது' என தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் விடயம் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ குழுவுக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல.கௌதாரிமுனை சிவன் கோவில் உட்பட இரு சிவன் கோவில்கள் இரண்டும் புராதன தன்மைகளைக் கொண்டவை என்றும் பழைய கட்டிட மரபுகளைக் கொண்டவை எனவும் தெரிவித்த அவர் இவை பௌத்த சிங்கள கட்டிடக் கலைகள் என்று கூற மாட்டோம். ஆனால் இவற்றை உறுதி செய்ய தொல்லியல் ஆய்வே உதவும். இவ்வாறான புராதனங்கள் இந்து மதத்துக்கோ பௌத்த மதத்துக்கோ மட்டும் உரித்தானதல்ல. முழு நாட்டுக்கும் முழு உலகத்துக்கும் உரித்தானது. எனவே நாம் தொல்லியல் ஆய்வுகளை செய்யத்தான் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன் வர வேண்டும். தென்பகுதியிலுள்ள இந்து ஆலயங்களில் ஆய்வுகளைச் செய்யாமல் வடக்கு, கிழக்கில் மட்டும் ஏன் ஆய்வுகளைச் செய்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்ட கேள்விக்கு, தரவுகள், தகவல்கள் கிடைக்குமிடங்களில் தாம் ஆய்வுகளைச் செய்கின்றோம் என்றும் நிலங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது ஆய்வு செய்தால் தானே தெரியும் என குறிப்பிட்ட அவர் தென்பகுதியில் அழிவடைந்துள்ள இந்துக் கோவில்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.