"டயஸ்போறா" என்னும் பெயரில் இலங்கையர்கள் எவருமில்லை!
சிறிலங்கா ஏற்றுக்கொள்ளாது!!

"டயஸ்போறா" (புலம்பெயர்ந்தோர்) என்பதை இலங்கை ஏற்றுக்கொள்ளாது. இஸ்ரேலில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட சமயம் அவர்களைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழிச் சொல் அது(Diaspora). இலங்கையில் இருந்து அவ்வாறு யாரும் வெளியேற்றப்படவில்லை.
சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச் சாளர் கம்மன்பில (Gammanpila) இவ்வாறு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
இத்தகவலை கொழும்பு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருக்கின்றன.
"வெளிநாட்டவர்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவர். விடுதலைப் புலி களின் சித்தாந்தத்தை ஊக்குவிக்கின்ற தனிநபர்கள், அமைப்புகள் எதன் மீதும் தடைவிதிக்கப்படும்."
"சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.எங்கள் அரசமைப்பின் கீழ் பிரிவினைவாதம் தடைசெய்யப்பட்டுள்ளது.சிறிலங்கா விலோ அல்லது வெளிநாட்டிலோ புலிகளின் சித்தாந்தத்தை, பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் எவரும் தடைசெய்யப்படுவார்கள்"
இவ்வாறு அமைச்சர் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இளையோர் அமைப்புகள் உட்பட புலம்பெயர்ந்த தமிழர்களது அமைப்புகள் பலவற்றையும் தனிநபர்களையும் சிறிலங்காவில் தடைசெய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகி இருக்கிறது.
வெளிநாடுகளில் இயங்குகின்ற ஏழு தமிழ் அமைப்புகளையும் சுமார் 388தனி நபர்களையும் தடைசெய்யும் அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டிருப்பது தெரிந்ததே.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை அடுத்து சிறிலங்கா அரசு புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்டுத்தி வருகின்றது என்று அவதானிகள்குறிப்பிடுகின்றனர்.