தோட்டாக்களுக்கு அப்பால்....
வாழும் காலத்தின் சாட்சியம் - 1

"இரண்டாயிரத்தின் நடுப்பகுதி அது. 'கிட்டு'சர்வதேச விமான நிலையத்தில் தமிழீழத்துக்கு சொந்தமான விமானம் தரையிறங்குகிறது" இப்படித்தான் ஆரம்பித்தது அந்த சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுக்கு தெரிவான கதை. அப்போது தொண்ணூறுகளின் ஆரம்பக் காலகட்டம். எனது உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு மிகப் பெரிய பரபரப்பு அடங்கிப்போக அடுத்து என்ன செய்வது என எண்ணியபடி இருந்த போதுதான் எனது பெரிய மாமாவினூடாக அப்படி ஒரு நுழைவாயில் திறந்துகொண்டது. எப்போதும் வெட்டியாய் இருக்க விரும்பாத மனநிலை இப்போது போலவே அப்போதும் என்னிடம் ஒட்டியிருந்தது என் அம்மாவுக்கு மட்டும் நன்றாகத் தெரியும். அம்மா அப்பாவின் பூரண சம்மதத்தோடு நான் முதன் முதலில் வேலை செய்ய புகுந்த இடம் தான் "தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்" யாழ்ப்பாணம் தாவடியில் இயங்கிவந்த அந்த நிறுவனத்தின் ஊடகப் பிரிவில்தான் எனக்கான களங்கள் விரிந்து திறந்தன.
முப்பத்தி இரண்டு கதைகளில், கடைந்தெடுத்து பத்துக் கதைகளை விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட குழுவில் நானும் ஒருவன். யதார்த்தம் குன்றிய கதையென எம்மில் பலரும் ஒதுக்க முனைந்த அந்தக்
கதைதான் முதலாம் பரிசுக்குரியதாய் தலைவர் பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கதையின் சாரம் இவ்வளவுதான். யுத்த காலங்களில் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்த ஒருவன் முப்பது வருடங்களின் பின் தாயகம் திரும்புகிறான். புலம்பெயர்ந்த போது அவனது தாயகம் இலங்கை. இப்போது திரும்பும் போது அவனது தாயகம் தமிழ் ஈழம். கிட்டு சர்வதேச விமான நிலையத்தில் தமிழீழ எயார் லைன்ஸ் இல் வந்திறங்குகிறான். விமான நிலையம் எங்கும் ஒலித்த தமிழோடு நெஞ்சை நிமிர்த்தத் தொடங்கியவன் "தமிழீழம் உங்களை வரவேற்கிறது" என்றபடி வந்து நின்ற வாடகைக் காரில் அவன் பிறந்த ஊர் வந்து சேரும் வரை ஒருவித பரவசத்தில் இருக்கிறான். வாடகைக் கார் ஓட்டுநருக்கும் அவனுக்கும் வழியெங்கும் நடக்கும் உரையாடலே கதையாய் நீள்கிறது.
விமான நிலையத்தில் இருந்து தனது கிராமத்து வீட்டுக்கு நகரும் சந்திகள்,திருப்பங்கள்,வீதிகள்,விடுதிகள்,வாணிபங்கள், கல்விக் கூடங்கள், கலை மன்றங்கள்,வைப்பகங்கள்,நீதிமன்றங்கள்,ஆய்வு கூடங்கள் என எல்லாவற்றிலுமான அழகியல்கள் ஆச்சரியத்தை உண்டு பண்ண அவனுக்குள் எழும் அத்தனை கேள்விகளுக்கும் முப்பது வருட வரலாற்று விளக்கம் அளித்தபடி வாகன ஓட்டி நகர்ந்துகொண்டிருந்தான். என் தேசமா இது? நான் நடந்த தெருக்களா இவை? என்ற ஆச்சரியங்கள், நான் வாழ்ந்த வீடா இது? என்ற வியப்பு வரை அவனை கொண்டுவந்து விட்டிருந்தது. அவன் கொடுத்த முகவரிக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என சாரதி கூறும் வரை அவனால் சுய நினைவுக்கு வர முடியவில்லை. தனது பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கி வைத்துவிட்டு வாகன ஓட்டியை தனது வீட்டுக்குள் வந்து தேநீர் அருந்திச் செல்லுமாறு கேட்டான் அவன். "அழைத்தமைக்கு நன்றி. ஆனால் உங்களை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்க்க மட்டும்தான் எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி. மீண்டும் சந்திப்போம். தமிழீழ வளங்களை அனுபவியுங்கள்" என்று பதில் சொல்லி வாகனம் புறப்பட்டுப் போகும் வரை அவனுக்கு தெரிந்திருக்கவில்லை இதுவரை அவனுடன் பேசியபடி வாகனம் ஓட்டி வந்தது ஒரு தமிழீழ றோபோ என்று.
சாட்சியங்கள் தொடரும் .....
- சாம் பிரதீபன் -