வட மாகாணத்தின் குப்பைகளும் மனிதப் பாவனைக் கழிவுகளும்!


இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகச் சவாலான விடயங்களில் ஒன்று குப்பைகளும் மனிதப் பாவனைக் கழிவுகளுமே.


குப்பைகளால் நிறைந்து போகும் இந்த பூகோளம் மனிதனை பல வகையிலும் அச்சுறுத்தியபடியே இருக்கிறது.

அந்த அச்சுறுத்தல் நோய்த்தொற்றுகள் என்றும், சூழல் மாசடைதல் என்றும், மனித சமூகத்தை அழிக்கும் நுண்ணுயிரிகளின்

உருவாக்கம் என்றும், பலவகையில் நீளுகின்றது. தான் வாழ்கின்ற சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதால் மட்டுமே மனிதன் இந்தப் பிரபஞ்சத்தில்

தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை உலகம் உணர்ந்து பல காலங்கள் ஆகிவிட்டது. இருந்தும் இப்போது கூட

வாழிட சுற்றுச் சூழல் பற்றிய மிகக் கரிசனையற்ற மனித சமூகம் இந்தப் பூமியில் வாழ்ந்தபடிதான் இருக்கின்றது.


அந்த கரிசனையற்ற அல்லது அவை பற்றிய விழிப்புணர்வற்ற சமூகங்களின் ஒரு பகுதியாகவே இலங்கையின் பல பாகங்கள்

இப்போதும் இருக்கின்றன.

வீதிகளின் ஓரங்களிலும், ஒழுங்கைகளின் முலைகளிலும், பிரதேசங்களின் ஒதுக்குப் புறங்களிலும் இப்போதும் மனிதப் பாவனைக் கழிவுகளை

கொட்டிவிட்டு அப்பால் நகரும் ஒருவித மனநிலை இலங்கையின் பல பிராந்தியங்களில் காணப்படுகின்றது.

அழுகிய மாமிசக் கழிவுகள் முதல் பிளாஸ்ரிக் கழிவுகள் வரை பொறுப்பற்ற வகையில் இந்தப் பாவனைக் கழிவுகள் வீதிகளின் ஓரங்களில்

கொட்டப்படுவது இப்போதும் நிகழ்ந்து வரும் அவலமாக இருக்கின்றது.


சூழல் மாசடைதல் பற்றியும், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் பற்றியும் போதிய விழிப்புணர்களும் செயற்பாடுகளும்

வளர்ச்சியடைந்த நாடுகளில் பாடசாலை மட்டங்களில் இருந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றன. குப்பைகளை வகை பிரித்து

தனித்தனியான பிரத்தியேக கழிவகற்றும் பெட்டிகளில் இடும் செயல்முறை தனியார் வீடுகள் முதல் கழிவுப்பொருட்கள் சேகரிக்கும்

தொழிற்சாலைகள் வரை மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.

குப்பைகளை வகைபிரித்து அவற்றை மீள் பாவனைக்குரிய சேதனப் பசளைகளாக மாற்றும் தொழிற்சாலைகள் பல பொருட்செலவில்

உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைந்த நாடுகளில் இயங்கு நிலைக்கு கொண்டு வந்து பல வருடங்களை தாண்டியிருக்கிறது.

ஒட்டு மொத்த சமூகமும் தமது சுற்றுச் சுழல் பற்றி எடுத்துக்கொள்ளும் இந்த அபரிமிதமான அக்கறை வளர்முக நாடுகளின்

பெரும் பகுதிகளில் இன்னமும் பற்றாக்குறையாகவே இருக்கின்றது.


குப்பைகளை வீதிகளில் கொட்டிவிட்டு அல்லது மனிதப் பாவனையற்ற ஒதுக்குப் புறங்களில் விசி எறிந்துவிட்டு நோய்களையும் வாங்கி,

தாவரவியலுக்கான செயற்கைப் பசளைகளையும் விலைகொடுத்து வாங்கி, செயற்கைப் பசளைகளின் இரசாயன வீச்சால்

மண்ணின் வளங்களையும் தொலைத்தபடி இருக்கிறது நம் சொந்தத் தேசம்.


இத்தகையதொரு சூழலில்தான் இலங்கையின் வட மாகாணத்தில் இப்போது உருவாகியிருக்கிறது குப்பைகளில் இருந்து

சேதனப் பசளைகளை உருவாக்கும் தொழிற்சாலை!

இயங்கு நிலைக்கு வரத் தயாராக இருக்கும் இந்த தொழிற்சாலை வட மாகாண மக்களுக்கு மிகப் பெரும் வரப்பிரசாதமாக

இருக்கும் என்று நம்பப்படுகிறது. புதிய வகை தொழில்நுட்ப வசதிகளுடன் அமையப்பெற்றுள்ள இந்த முயற்சி மிகப் பெரிய

பிரதேசமொன்றின் சுற்றுச் சூழலை நேர்த்தியாக பேண கிடைத்திருக்கின்ற ஒரு அருமையான சந்தர்ப்பம் என்று

பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.ஒரு பிரதேசத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு தொழிற்சாலை அமைவது மட்டும் அப் பிரதேச சுற்றுச் சூழலைப் பாதுகாக்க

போதாது என்பதும், ஒட்டு மொத்த சமூகமும் ஒரு கட்டுக்கோப்பான செயல்வடிவத்தோடும் பொறுப்புணர்வோடும்

செயற்பட வேண்டும் என்பதும் இந்த இடத்தில் மிக முக்கியமாகின்றது.


ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது

பெருந்தெருக்கள் அமைவது மட்டுமல்ல,

பெருஞ் செலவில் தொழிற்சாலைகள் கட்டப்படுவது மாத்திரமல்ல,

நிறுவனங்களும் வீட்டுத் திட்டங்களும் உருவாவது மட்டுமல்ல,

அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் இணைந்து உச்ச நிலைக்கு வருவதே அது.

வடக்கில் பெருந்தெருக்கள் அமைத்த போது அப் பிரதேச மக்கள் அங்கு தொழில்வாய்பைப் பெற தயாரற்றிருந்தது போல,

பலாலி விமானத் தளம் உருவாக்கம் கண்டபோது அங்கு வேலைபெற விண்ணப்பிக்க அப் பிரதேச மக்கள் தயாரற்றிருந்தது போல,

அபிவிருத்தித் திட்டங்கள் பல வடக்கில் உருவான போதெல்லாம் அதற்கூடாக வாழ்வுத்தரத்தை உயர்த்திக்கொள்ள

அப் பிரதேச மக்கள் தயாரற்றிருந்தது போல,

இந்த தொழிற்சாலையும் வெறும் கழிவகற்றும் கட்டட விஸ்தரிப்பாய மட்டும் அமைந்து விடுமா?

அல்லது அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் இணைந்து உயர்த்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


15 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE