ஒழுக்கவியல் சார்ந்த சமூக, சட்ட நெறிகளின் அழுத்தம் ஆண்கள் மீதும் பிரயோகிக்கப்பட வேண்டும்!

- தமனிகை பிரதாபன் -


நாளைய உலகின் வரலாற்றை எழுதத் துடிக்கும் பெண்கள் இன்று பல்வேறு தளங்களிலும் கால் பதித்து புகழும் பாராட்டும் பெற்று விட்டனர். இன்றைய பெண்கள் ஆளுமைத் திறத்தால் மனவிடுதலை பெற்று போரியல் வரலாறு தொட்டு விண்வெளிச் சாதனை வரை புரிந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தி உலக அரங்கில் மதிக்கப்படக் கூடிய நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த பார்வையில் பெண்களுக்கான சுதந்திரம் என்றோ கிடைத்து விட்டது. பெண்ணினமானது சமூக அரசியல் அறிவியல் மட்டத்தில் உயர்நிலையை எட்டி விட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் ''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்'' என பாரதி பாடிய வரிகளுக்கான அர்த்தத்தைப் பெற இன்றளவும் போராட வேண்டியிருக்கிறது.


சமூக மட்டத்தில் ஒரு பெண் பல பரிமாணங்களை எடுக்கின்றாள். ஒவ்வொரு பரிமாணத்திலும் பல இன்னல்களை அனுபவிக்கின்றாள். எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும் பெண்ணை இரண்டாம் தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து இன்னும் விலகவில்லை. பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைபோடும் நிலையும் மாறவில்லை. அவளின் ஒவ்வோர் அசைவும் அலசப்படுகிறது. இன்று பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள். உலக இயக்கத்தில் பெண்களின் பங்கு காத்திரமானது. எனினும் எமது சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக வாழ்கிறார்களா என்றால் அது வினாவிற்குரியதே?

பெண்களின் அந்தஸ்துப் பற்றிய ஆய்வுகள் பெண்கள் ஒதுக்கப்படுதலையும் ஆராய்ச்சிக்கு உட்பட்ட சமூகங்களில் அவர்கள் அனுபவிக்கும் அடக்கு முறைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. காலம் காலமாக திட்டமிட்டு கருத்துருவாக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு ஆணுக்கு பெண் கீழ்ப்பட்டவள் அவ்வாறு வாழ்வதே அவளுக்கு பெருமையும் மகத்துவமும் என்று கருதும் சமூகம் இன்றுவரை உள்ளது. பெண்ணினமானது தனிஉரிமை, சமத்துவம், சுதந்திரம், அரசியல் விடுதலை, தன்னாட்சி என்பவற்றை கொண்டுள்ளது எனப் பேசப்பட்டாலும் சுயமாகத் தலை நிமிர்ந்து வாழவேண்டுமாயின் இன்றுள்ள சமூக வார்ப்புக்களும் வழக்கங்களும்நெறிமுறைகளும் நீதிமுறைகளும் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெண் உரிமை, பெண் சுதந்திரம் ,பெண் சமத்துவம் என்பன மேலோட்டமான ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. சமூக ஒழுங்கையும் தனித்துவத்தையும் பேணுவதற்கும் குடும்ப அமைப்பை சீர்குலையாமல் பாதுகாப்பதற்கும் சில சட்ட திட்டங்களும் விதிமுறைகளும் அவசியமானதாகும். ஆனால் இச் சட்ட திட்டங்களும் விதிமுறைகளும் ஆணை ஒரு கண்ணோட்டத்திலும் பெண்ணை வேறொரு கண்ணோட்டத்திலும் நோக்கும் போது முரண்பாடு பிறக்கின்றது. சமத்துவத்திற்கான வழி மூடப்படுகின்றது.

சமூக மேம்பாட்டிற்கு அவசியம் எனக் கூறப்படும் ஒழுக்கவியல் சார்ந்த சமூக, சட்ட நெறிகள் பெண்களுக்கு மட்டுமே உரித்துடையவை என்ற கருத்துக்கு அப்பாற்பட்டு பெண்கள் மீது அவை கொடுக்கும் அதே அளவு அழுத்தம் ஆண்கள் மீதும் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே சமுதாய சமநிலை நிலவும். இச் சமநிலையே ஆரோக்கியமான சமூக உருவாக்கத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கும் பெண் பால்நிலைப் பாரபட்சம் காரணமாக ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்படுகின்றாள். உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒவ்வொரு பெண்ணின் ஆளுமையும் தன்நம்பிக்கையும் சிதைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணினதும் சுதந்திரமான காத்திரமான வாழ்விற்கான தடைகள் உடைக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான சமூகப் பார்வைகள் தகர்க்கப்பட்டு பெண்களை மூடியுள்ள போலித்திரைகள் கிழிக்கப்படுவது அவசியமாகிறது. ஒரு ஆணால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சட்டப் பாதுகாப்பு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். பெண்ணின் கல்விக்கான தடைகள் திருமணம் என்ற வேலியால் நிறுத்தப்படும் நிலை இல்லாதொழிந்து கலாச்சாரம் பண்பாடு சமூகத்தினுள் முடங்கி இருக்கும் நிலை அற்றுப் போக வேண்டும். ஆணின் சீதனவலையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் ஏராளமானோர் சமூகத்தில் இருந்து கொண்டே வருகின்றனர். அவர்களின் வாழ்வுக்கு வழிதான் என்ன?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். குறிப்பாக பொருளாதாரத்தில் ஆண்களுக்கு நிகராக சமபங்கு வகித்து தங்கி வாழும் நிலையை கையேந்தி நிற்கும் நிலையை இல்லாதொழிக்க முற்படுகின்றனர். அரசியலில் பெண்களின் பங்களிப்பை உயர்த்துவதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஊடகத்துறையைப் பெண்கள் கருவியாக்க முற்பட வேண்டும். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தாமே முகம் கொடுத்து வியூகங்களை அமைப்பதனுடாக அனைத்துத் துறைகளிலும் புரட்சி செய்து தமது உயர்ந்த சிந்தனைச் சிதறல்களை ஒன்று திரட்டி விடுதலை வாழ்வுக்கு வழிசமைக்கலாம். ''பெண்ணால் முடியும்'' என்ற தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு பெண்ணும் துணிவு கொள்ளும் போது சுயமான கௌரவமான வாழ்வை வாழ்வதுடன் நாளைய உலகை வெல்லலாம்.

61 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli