17 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் கைது.

வங்கி கணக்குகளை ஹேக் செய்து சுமார் 17 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாடொன்றிலிருந்து கிட்டத்தட்ட 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வங்கிக் கணக்குகளில் சட்டவிரோதமாக ஊடுருவி பெற்றுக்கொள்ளப்படும் பணம், மோசடிக்காரர்களிடையே பகிரப்படுகின்றமையும் தெரியவந்துள்ளது. இவ்வாறு பணத்தை பெற்றுக்கொள்ளும் பலர், நாட்டில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.மோசடியாக பெற்றுக்கொண்ட சுமார் 140 கோடி ரூபா பணம் நாட்டிலுள்ள சிலரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பணம் பெற்றுக்கொண்டவர்களில் ஒருவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.
இவ்வாறான பண மோசடியில் ஈடுபட்ட 36 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்