உழைக்கும் வர்க்க பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம்!

பொதுவுடைமை இயக்கம் அழைப்பு

நடக்கப்போகும் தேர்தலில் மறுபடியும் சலிப்புடனும் ஏமாற்றத்துடனும் போய் வாக்களிக்க கூடிய சூழல் தான் இங்குள்ளது. பொய்யான வாக்குறுதிகளையும், காதில் பூ சுற்றும் தேர்தல் அறிக்கைகளையும், ஊழல் அரசியல்வாதிகளையும் தான் மறுபடியும் நாம் எதிர்கொள்ள போகிறோம்.


இங்குள்ள சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகள் வெறும் மேலோட்டமாக முன்வைக்கும் கண்துடைப்பு திட்டங்களால் நமது சமுதாயத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. மக்களிடம் உள்ள ஏற்றத் தாழ்வுகளை இங்குள்ள ஆளும் வர்க்க அரசியல் மாற்றப்போவதில்லை.

முதலாளித்துவத்தையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் பாதுகாத்து வரும் இந்த ஆளும் வர்க்க அரசியல் கட்டமைப்பில் நிலமில்லா மக்களுக்கு விவசாய நிலத்தை உறுதிப்படுத்தும் தீவிர நிலசீர்திருத்தங்கள் சாத்தியப்படுமா? இந்த ஆளும் வர்க்க அரசியல் கூட்டணிகள் யாராவது பெரும் முதலாளிகளுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுப்பார்களா? துப்புரவு தொழிலாளர்கள் உட்பட பல ஏழை உழைப்பாளர்கள் ஊதியத்தை கையகப்படுத்தும் ஒப்பந்த முறையை (கான்ட்ராக்ட்) ஒழிப்பார்களா? வறுமையில் உழலும் ஏழைகளுக்கு போய் சேரவேண்டிய மக்கள் பணத்தை சுரண்டிப் பிழைக்கும் ஊழல்வாதிகள் உள்ள இந்நிலையை எதாவது ஒரு ஆளும் வர்க்க கட்சியாவது அடிப்படையாக மாற்றுமா? இவற்றிற்கு மாற்றாக ஒரு பொதுவுடைமை அரசியலை முன்னெடுக்க வேண்டாமா?


ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தையும், சமத்துவத்தையும், சூழலியலையும் முன்னிறுத்தும் மாற்று அரசியல் அமைப்பை கட்டுவது எளிதல்ல. அதற்காக தொடர்ந்து ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டணிகள் அமைப்பது, பாஜகவை வீழ்த்திவிடும் என்று மக்களை நம்ப வைப்பது முறையானதல்ல.


இன்று பாஜக போன்ற மதவாத அமைப்புகள் தலைவிரித்து ஆட காரணமே காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் இருந்த போது நடந்தேறிய அட்டூழியங்கள் தான். கடந்த பொது தேர்தலில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம், வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம் என்று கூறி தான் பாஜக அதிகாரத்திற்கு வந்தது. அந்த அளவுக்கு மக்களை ஏழ்மையிலும் நெருக்கடியிலும் வைத்திருந்தது அன்று அதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரசும் திமுகவும். கடந்த பத்து ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக அரசின், பண மதிப்பு நீக்கம் (Demonetisation), GST வரி விதிப்பு, வேலை வாய்ப்புகள் இல்லாமை, தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாடுகள், மக்கள் விரோத சட்டங்கள் போன்ற ஒட்டுமொத்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி ஒருபோதும் மாற்றாகாது.

மாறி மாறி இவர்களுக்கு வாக்களித்ததும், ஆதரித்ததும் போதும். இந்த ஆளும் வர்க்க அரசியலுக்கு நமது உழைப்பையும் நேரத்தையும் வீணடித்து விரயமாக்குவதை விட முதலாளித்துவத்துக்கு மாற்றான பொதுவுடைமை அரசியலை முன்னெடுக்கும் மாற்று அரசியலுக்கான வேலைகளை மேற்கொள்வோம். உழைக்கும் மக்களை சுரண்டி லட்சக்கணக்கான கோடிகளை இந்நாட்டின் முதலாளிகள் குவித்து வைத்துள்ளார். இந்த பெரும் முதலாளிகள் தான் இன்று அதிகாரத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவது. கார்பரேட் முதலாளிகளும், பெரும் நில உடமையாளர்களும், சாதி ஆதிக்கவாதிகளும், மதவாதிகளும், உயர் அதிகாரிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்க கட்டமைப்பை நாம் மாற்றுவதற்கான அரசியல் தான் உண்மையில் மாற்று அரசியல்.

மதவாத சக்திகளிடம் கொண்டுள்ள பயம் அல்ல, போராட்ட களங்களில் திரளும் மக்களின் மீது உள்ள நம்பிக்கை தான் நமது அடுத்தக்கட்ட அரசியலை தீர்மானிக்க வேண்டியது. இந்த உறுதி தான் மாற்று அரசியலுக்கான தளத்தை ஏற்படுத்தும். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் ஆளும் வர்க்க நிலைப்பாடுகளையும், அப்பட்டமான சந்தர்ப்பவாத போக்குகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. மக்களை அரசியல் படுத்துவது மட்டும் அல்லாமல், ஆளும் வர்க்க அரசியலை புறக்கணித்து மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவையை நாம் எந்த சமரசமும் இன்றி வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து மோடி அரசின் இஸ்லாமியர், பெண்கள், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகட்டும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்கள், மூன்று வேளாண் சட்டங்கள் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் தான் களத்தில் வலுவான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்ற ஆண்டு மட்டும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நான்கு முறை தொழிலாளர்கள் மேற்கொண்டு முதலாளித்துவத்திற்கு பெருத்த நெருக்கடியை அளித்தார்கள். டெல்லியில் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

தமிழகத்திலும் கூட ஜல்லிக்கட்டு, நீட், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், துறைமுக விரிவாக்கம் என்று பல மக்கள் விரோத, சூழலியல் விரோத திட்டங்களுக்கு எதிராக பெருமளவில் மக்கள் தான் களத்தில் போராடி வருகிறார்கள். இவர்கள் தான் உண்மையான ஜனநாயக சக்திகள் இந்த ஒடுக்குமுறை அரசை எதிர்த்த உண்மையான எதிர்க்கட்சி. இவர்களை திரட்டி ஒரு மாற்று அரசியல் தளத்தை நாம் அமைக்க வேண்டும்.


பொதுவுடைமை அரசியலை லட்சியமாக கொண்டு உழைக்கும் மக்களை முன்னிறுத்தும் அரசியலை ஆதரித்து வாக்களிப்போம் !


உழைக்கும் வர்க்க பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம் !

22 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli