“எல்லாவற்றையும் இயந்திரங்களிடம் கொடுத்துவிட்டு நாங்கள் Gym இற்கு போய்க்கொண்டிருக்கிறோம்”
யாழ்ப்பாணத்தில் நான் கண்ட “மோட்டர் துருவுபலகை”(திருவலை)

“எல்லாவற்றையும் இயந்திரங்களிடம் கொடுத்துவிட்டு நாங்கள் Gym இற்கு போய்க்கொண்டிருக்கிறோம்” இப்படிப் புறுபுறுத்துக்கொண்டிருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவரை அங்கு சந்தித்தேன்.
விடுமுறையில் யாழ்ப்பாணம் நின்ற காலங்களில் எனது பிறந்த வீட்டின் புணரமைப்பு வேலைகளில் சற்று ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். வீட்டுக் கதவுகளுக்கு நல்ல நீர்வேலிப் பூட்டு வாங்கிப் பொருத்துவதற்காக ஸ்ரான்லி வீதியில் உள்ள ஒரு கடையில் நின்றபோதே அந்த பெரியவர் அப்படிப் புறுபுறுத்துக் கொண்டார்.
கடையின் வலது புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் இதுவரை நான் கண்டிராத வினோதமான ஒரு பொருளைக் கண்டேன். சைக்கிள் செயின் போன்ற ஒரு பொருள் மோட்டர் இயந்திரத்துடன் பொருத்தப்பட்டு மின்சார இணைப்புக்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அமைந்த எனது விசாரிப்புக்கு கடைக்காரர், “இது மோட்டர் திருவலை” என்று சொன்ன பதிலைத் தொடர்ந்தே அந்த பெரியவர் “எல்லாவற்றையும் இயந்திரங்களிடம் கொடுத்துவிட்டு நாங்கள் Gym இற்கு போய்க்கொண்டிருக்கிறோம்” என்று புறுபுறுத்திருந்தார்.

வீடுகளின் சாதாரண வாழ்க்கையில் இப்போதெல்லாம் உடல் இயக்கம் குறைந்து போய் இயந்திர இயக்கம் அதிகரித்ததன் விளைவுகளில் ஒன்று தான் இந்த திருகுபலகை மாற்றம் என்பதே அந்த பெரியவரின் ஆதங்கமாக இருந்திருக்க வேண்டும்.
“ஐயா இது வீடுகளுக்கு இல்லை. பெரும் சாப்பாட்டுக் கடைகளுக்கு” என்று கடைக்காரர் சொல்லி முடித்தார்.
“ஓம் ஓம் வீடுகளில் இப்ப சமையல் எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டு Take away எண்டு யாழ்ப்பாணம் ஓடுது. அதாலதான் சாப்பாட்டுக் கடையள் பெருத்துப் போய் மோட்டர் திருவலை வந்து நிக்குது” என்று சற்று நேரம் வெப்பியாரத்தில் பொரிந்து தள்ளினார் அந்த பெரியவர்.

உண்மையில் யாழ்ப்பாணம், வீட்டுச் சமையலை நிறுத்தி சாப்பாட்டுக் கடைகளை ஊதிப் பெருப்பித்திருக்கின்றதா? என்ற மனவோட்டத்தோடு பூட்டுகளும் கையுமாக நான் வீட்டுக்கு சென்றேன்.
முதுமை காரணமாகவும் ஓராள் என்கிற தனிமைக்கு சமையல் ஏன் என்ற காரணமாகவும் என் அம்மா கூட இப்போதெல்லாம் அதிகம் Take away தான் எடுப்பதாக எனக்கும் இந்தமுறை அறியக்கிடைத்தது. “ஓராளை சமையலுக்கு உதவிக்கு அமர்த்தி உங்களுக்கு சமைப்போமா?” அப்படி ஒரு விண்ணப்பத்தை அம்மாவிடம் வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னமும் பதில் வந்திருக்கவில்லை.
- சாம் பிரதீபன் -