சிவன் கோவிலடி மோர்க்கடை!அப்போது எனக்கு ஒரு 18 வயதிருக்கும் என நினைக்கிறேன். யாழ்ப்பாண சிவன் கோவிலடிக்கு அருகில் இருக்கும் கடைகளின் ஒன்றின் முன் நிற்கிறேன். உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பேறுபேறுகளுக்காகக் காத்திருந்த ஒரு நாளில் தான் அந்தக் கடைக்கும் எனக்குமான முதல் உறவு அப்போது ஆரம்பமாகியிருந்தது. மிகத் தரமான மோர் விற்கும் கடைகளில் ஒன்றாக யாழ்ப்பாணத்தின் அந்தக் கடை எனக்கு அறிமுகமாகியிருந்தது. ஒரு மோர்க்கடை வியாபாரியிடம் இருந்து அப்படியொரு முதிர்ச்சியான தத்துவார்த்த சிந்தனை அடங்கிய அந்த வார்த்தைகளை அப்போது நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போதும் கூட அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த மனித நடத்தை உளவியல் என்னை ஆச்சரியப்படுத்தியபடியே இருக்கிறது.இந்த ஆண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கும் நான் இன்று மதிய உச்ச வெய்யில் நேரமொன்றில் அந்த சிவன் கோவிலடியை தாண்டிக்கொண்டிருந்தேன். அந்த மோர்க்கடையின் நினைவுகளுக்கு அவ்வளவு சக்தி இருந்திருக்கிறது. என் பயணத்தை திருப்பி அந்த மோர்க்கடை அமைந்திருந்ததாய் நான் ஊகிக்கும் அந்த பகுதியில் இப்போது இருக்கும் கடைகளின் ஓரமாய் மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறேன். கடைகள் எல்லாம் மாறிப்போயிருந்தன. மோர்க்கடை இருந்ததாய் நான் நம்பும் அந்தக் கடை மிகப்பெரிய ஒரு தேனீர்க் கடையாய் பெருத்துப்போயிருந்தது. ஆர்வத்தோடு உள்ளே சென்று விசாரித்தேன். இன்னமும் அந்த மோர்க்கடை அதே இடத்தில் தான் மோர் விற்றபடி இருக்கிறது எனக் கூறி அருகில் இருக்கும் கடையை கை காட்டினான் அந்த பெருத்த தேனீர்க்கடை முதலாளி.

“PEPSI” என்ற மேல் நாட்டுக் குளிர்பான விளம்பரப் பலகையுடன் “கிருஷ்ணா ஸ்ரோர்ஸ்” என்ற பெயரில் அந்த மோர்க்கடை என்னைப் பார்த்து அங்கே சிரித்தபடி இருந்தது. வெற்றிலை, பாக்கு, கடலை, கச்சான், அல்வா போன்றவற்றோடு ஒரு ஓரமாய் மோரும் அங்கு விற்பனைக்காக காத்திருந்தது. ஒரு 10 நிமிடங்கள் அங்கு நின்றபடியே இருந்தேன். யாரும் அங்கு வந்து மோர் வாங்கியதாக அப்போது நான் கண்டிருக்கவில்லை.

25 வருடங்களுக்கு முன் அந்த கடையின் பிரதான விற்பனைப்பொருள் அங்கு மோராகத்தான் இருந்தது. தயிர், மோர்க்கரைசல் ஆகி அடர்த்தியான வெங்காயம், பச்சை மிளகாயுடன் கடும் வெக்கைக்கு குளிர்மை கொடுத்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது.


18 வயது இளைஞனாக அப்போது மோர்க்கடை முன் ஒரு தம்ளர் மோர் வாங்க காத்து நிற்கிறேன். எனக்கு முன் இருவர் வரிசையில் நிற்கிறார்கள். முதலாவதாய் நின்றவருக்கும் அந்த மோர்க்கடை முதலாளிக்கும் என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. மிகக் கடும் வார்த்தைகளால் அந்த மோர்க்கடை முதலாளியைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். முதலாளியின் சுயமரியாதைச் சுவர்களை எல்லாம் நொருக்கிப் போடும் அளவுக்கு மிக மலினமான வார்த்தைகளால் வசை பாடிக்கொண்டிருந்தார் அப்போது அவர். அத்தனை வசவு வார்த்தைகளுக்கும் முதலாளியின் பதில் ஒரு மெளனமான அரைப்புன்னகையாகவே நீண்டுகொண்டிருந்தது. சம்பவத்தை மிக அதிர்ச்சியுடன் நானும் எனக்கு முன்னே நின்றுகொண்டிருந்த அந்த இரண்டாவது மனிதரும் பார்த்தபடியிருக்கிறோம்.

நெற்றியில் திரு நீறும் சந்தணமும் தரித்து, சிவப்புக் கட்டம் கட்டிய சேட்டுடன் இன்று நான் அந்த மோர்க்கடையில் சந்தித்த அந்த முதலாளியின் முகம் அச்சொட்டாக 25 வருடங்களுக்கு முன்னர் நான் சந்தித்த அந்த முதலாளியின் முகம் போல் இருந்திருக்கவில்லை. காலமாற்றத்தின் தோற்ற மாறுதல்களாக இருக்குமோ என எண்ணிக்கொண்டேன். ஒரு தம்ளர் மோரை அருகில் நின்றிருந்த அவர் மனைவி முகம் எல்லாம் பல்லான புன்னகையுடன் வார்த்துத் தந்தார்.


வெங்காயம், பச்சை மிளகாயின் அடர்த்தி குறைவாக இருந்தாலும் மோரின் சுவை என்னவோ மாறாமல் அப்படியே இருந்தது. “25 வருடங்களுக்கு முன்னர் இந்த மோர்க்கடையை நடத்தியது நீங்களா?” மோர் குடித்தபடியே நான் துருவத் தொடங்குகிறேன். மோர் நல்ல குளிர்மையாய் தொண்டைக்குழிக்குள் இறங்கிக்கொண்டிருந்தது. “இல்லை அது என் அண்ணா” இப்போதைய மோர்க்கடை முதலாளி பதில் தருகிறார். “அண்ணா இப்ப எங்கே” இது நான். “அவர் இப்ப இல்லை மோசம் போட்டார்” இது அவர். தொண்டைக்குள் மோர் இப்போது கொஞ்சம் சுட்டுக்கொண்டு இறங்குவதாய் தெரிந்தது. ஒரு அற்புதமான மனித உளவியல் தத்துவத்தை தன் நடத்தையால் என்னிடம் இன்றுவரை பதிய வைத்த அந்த மனிதன் இப்போது உயிருடன் இல்லை. இப்போது மோர் தொண்டைக்குள் இறங்கமாட்டேன் என அடம்பிடிக்கிறது. “மிகச் சிறந்த ஒரு மனிதனாய் இருந்தார் உங்கள் அண்ணன்” என கூறியபடியே 25 வருடத்துக்கு முந்திய வரலாற்றின் அங்கமொன்றை சொல்லத் தொடங்கினேன் தம்பிக்கு.

தனது மற்றைய வாடிக்கையாளர் முன் தரமற்ற வார்த்தைகளால் வசைபாடிய அந்த முதலாமவனின் அத்தனை சன்னதங்களுக்கும் மெளனப் புன்னகை உதித்தபடி இருந்த அந்த மோர்க்கடை முதலாளியின் தத்துவார்த்தம் 25 வருடம் கழித்து அதே இடத்தில் புதிய முதலாளிக்கு இன்று நினைவு செய்யப்படும் என்று அப்போது நான் நினைத்திருக்கவேயில்லை. தன் அத்தனை வக்கிரங்களையும் உமிழ்ந்து அந்த முதலாமவன் சென்றபின், அடுத்தவருக்கு மோரை வார்த்துக் கொடுத்தபடியிருந்தார் முதலாளி. “உங்களை இவ்வளவுக்கு கேவலப்படுத்திய அவனுக்கு நீங்கள் ஒரு வார்த்தை கூட திருப்பி சொல்லவில்லையே. உங்களுக்கு கோபம் வரவில்லையா?” என மோரை வாங்கியபடி கேட்கிறார் எனக்கு முன்னே நின்ற இரண்டாமவர். இதுவரை யாரும் சொல்லி நான் அறிந்திராத, உலகத் தத்துவஞானிகள் யாரும் அறிக்கையிட்டிராத அந்த விடயத்தை வறுமைக்கும் பொறுமைக்கும் சொந்தக்காரரான அந்த மோர் வியாபார முதலாளி மிகச் சாதாரணமாய் சொல்லி முடித்தார். அதன் சாரம் இப்படி இருந்தது. “நான் எப்போது கோபப்பட வேண்டும் என்பதை எனக்கு முன் நின்று உரையாடுபவன் தீர்மானிக்க முடியாது. அதை நான் தான் தீர்மானிக்க வேண்டும்.


எனக்கு முன் நின்று என்னை வசைபாடும் அவனுக்கு நான் ஆத்திரமான எதிர்வினை ஆற்றுகிறேன் எனில், “நான் இந்தக் கணத்தில் கோபப்பட வேண்டும்” என்ற எனக்கான தீர்மானத்தை அவன் எடுக்கிறான். என் உணர்வுகளின் வெளிப்பாட்டு கணங்களை மூன்றாமவன் முடிவெடுக்க முடியாது. அந்த உரிமையை நான் எவருக்கும் கொடுக்கமாட்டேன்” என்ற கருத்துப்பட தனது கொலோக்கியல் மொழியில் சொல்லி முடித்தார்.

அண்ணனின் கதை கேட்டு மீண்டும் தம்பி முதலாளியும் அவரின் மனைவியும் முகம் முழுதும் பல்லாய் சிரித்தனர். மோர் சுவையாகத்தான் இருந்தது ஆனால் துரதிஷ்டவசமாக இப்போதுவரை எனது வயித்துப்போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. கடும் கோப்பி குடித்துவிட்டு கட்டிலில் சாய்ந்திருக்கிறேன். இப்போது கூட அந்த மோரில் குறையிருப்பதாக நான் நம்பவில்லை. 25 வருடத்தில் எனது உடற்கூறுகளுக்கு பழகிப்போன உணவுகளின் வரிசையில் அந்த மோர் இல்லையோ என்னவோ.....

- சாம் பிரதீபன் -

464 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE