ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபை அவசரமாக மாற்றுங்கள் - சிவில் அமைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபு அல்லது பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜர் வாசித்துக்காட்டப்பட்டது.
இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கும் நீதி கோரி தமிழ் சமூகம் தொடர்ந்து போராடி வருகின்றது. இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், திட்டமிட்ட இனப்படுகொலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு கோரி நடைபெற்ற பேரணி ஊடாக தமிழ் சமூகம் தங்களை வலியுறுத்துகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.