இங்கு உனது வேலை முடிந்ததும் நீ வீட்டுக்கு போய்விடுவாயா?

- சாம் பிரதீபன் -“இங்கு உனது வேலை முடிந்ததும் நீ வீட்டுக்கு போய்விடுவாயா?” என்று என்னைப் பார்த்துக் கேட்கிறாள் ஒரு காந்தப் பார்வைக்குச் சொந்தக்காரி.

அப்படி ஒரு இடத்திற்குத்தான் அன்று போகப் போகிறேன் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எமக்கு ஒதுக்கப்பட்ட மேசையில் நாம் கொண்டு சென்ற அனைத்து விற்பனைப் பொருட்களுக்கான மாதிரிகளையும், விளம்பர ஆவணங்களையும் அடுக்கி வைத்துவிட்டு நானும் ஜோண் என்ற கூடப்பணியாற்றும் என் அலுவலகப் பெண்ணும் அமர்ந்திருக்கின்றோம்.

அதுவரை யாரும் கேட்காத அப்படி ஒரு கேள்வியுடன் என்னை நோக்கி அங்கு அவள் வருவாள் என நானும் ஜோணும் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தனை கனிவாக இருந்தது அவளது முகம். அவ்வளவு மிருதுவாக இருந்தது அவளது குரல்.


வந்துகொண்டிருக்கும் போதே என்னைத் தனக்குள் வசீகரித்து இழுத்தபடிதான் அவள் அப்போது இன்னொருத்தியுடன் உள் நுழைந்துகொண்டாள். வந்த கணம் முதலே பெயர் சொல்லி வர்ணிக்கமுடியாத ஒரு வித காந்தப் புன்னகையோடு என்னைக் கண்வெட்டாமல் பார்த்தபடியிருக்கிறாள். நான் கூட என் பார்வையை வேறிடம் நோக்கித் திருப்ப வேண்டுமென அப்போது நினைக்கவில்லை. அவளை அப்படியே தூக்கிக் கண்களுக்குள் வைத்துக்கொள்வதைப் போல உற்றுப் பார்த்தபடியிருக்கிறேன்.

“இங்கு உனது வேலை முடிந்ததும் நீ வீட்டுக்கு போய்விடுவாயா?” என்று என்னைப் பார்த்துக் கேட்கிறாள். நான் எதுவும் பேசாமல் அவளையே பார்க்கிறேன்.

இப்போது என்னுடன் கூட வந்த ஜோணைப் பார்த்துக் கேட்கிறாள். “ இங்கு இவனது வேலை முடிந்ததும் இவன் வீட்டுக்கு போய்விடுவானா?” ஜோண், ஆம் எனச் சொல்கிறாள். மீண்டும் ஜோணைப் பார்த்து அவள், “நீயும் உன் வீட்டுக்கு சென்று விடுவாயா” என கேட்கிறாள். “ஆம்” ஜோண் மீண்டும் பதிலளிக்கிறாள். “இவளும் இங்கு இவளது வேலை முடிய தனது வீட்டுக்கு போய்விடுவாள்” என்று தன்னுடன் கூட வந்த அந்த பெண்ணைக் காட்டி எனக்கு சொல்கிறாள் அவள்.


“நீங்கள் எல்லோரும் உங்கள் வீடுகளுக்கு சென்று விடுவீர்கள். ஆனால் நான் மட்டும் எனது வீட்டுக்கு போக முடியாது. எனது மகள் என்னை இங்கே போட்டுவிட்டு எனது வீட்டில் தான் வசிக்கிறாள்” என்று ஓங்கிக் குரல் எடுத்து அலறினாள். அந்த இடம் முழுவதும் சட்டென்று நிசப்தமாக மாறிப்போக அந்த மூதாட்டியை அவளோடு வந்திருந்த அந்த பராமரிப்புத் தாதி, சக்கர நாற்காலியோடு தள்ளியபடி போய்க்கொண்டிருந்தாள். அவள் அங்கிருந்து மறையும் வரை அவளது விசும்பலும் நாற்காலிச் சில்லின் சத்தமும் மாத்திரமே அந்த இடத்தை நிரப்பிக்கொண்டது.


மூன்று நாட்களாகிவிட்டது. முகச் சுருக்கங்களோடும், கூன் விழுந்த உடலோடும் சக்கர நாற்காலியோடு அங்கு வந்து புன்னகைத்த அந்த முகத்திலிருந்தும், முகச் சுருக்கங்களின் ஒவ்வொரு வளைவுகளிலும் தேங்கித் தேங்கி வழிந்த அந்த கண்னீர்களின் நினைவுகளில் இருந்தும் என்னால் மீள முடியவில்லை. ஆனால் “நானும் நீயும் இந்த இடத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். நான் சற்று முன்பே வந்துவிடுவேன். நீ சற்று நிதானமாய் வா” என்று 60 வயது நிரம்பிய ஜோண், அந்த மூதாட்டி சென்றபின் எனக்கு கூறிய வார்த்தைகள் வெளியே எடுக்க முடியாத முள்ளாய் நெஞ்சுக்குள் உறுத்தியபடியே இருக்கின்றது.


- சாம் பிரதீபன் -218 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE