முள்ளிவாய்க்கால் நான்கு தசாப்த தன்மான விடுதலைப் போரின்ஒரு குறிச்சொல் அல்ல!

இப்போது குறித்துக்கொள்ளுங்கள்! முள்ளிவாய்க்கால் நான்கு தசாப்த தன்மான விடுதலைப் போரின் ஒரு குறிச்சொல் அல்ல!
இனி சாவு காவு கொள்ளாத ஒரு கபாலச் சண்டை வேண்டுமெமக்கு! இழவு வீடாகாத ஒரு இனமானப் போர் தேவையெமக்கு! ஆயுதங்களை தூக்கிச் சுமக்காத ஒரு அறிவார்ந்த சமர் வேண்டுமெமக்கு! முடியுமா? அது அறிவாயுதத்தால் மட்டுமே சாத்தியம் என்ற தெளிவும் வேண்டும் எமக்கு!
முள்ளிவாய்க்கால் முடிவாகுமா? என்ன கேள்வி இது. அது முடிவாகத்தான் வேண்டும் இனி. முடிந்த முடிவாக வேண்டும் இனி. இன்னுமொரு முள்ளிவாய்க்கால் கேட்கவும், அது ஒரு தொடக்கம் என திருப்பள்ளி எழுச்சி பாடவும் நாமென்ன நரபலிகளின் சொந்தக்காரர்களா?
இப்போது குறித்துக்கொள்ளுங்கள்! முள்ளிவாய்க்கால் நான்கு தசாப்த தன்மான விடுதலைப் போரின் ஒரு குறிச்சொல் அல்ல! அது பெரும் அவலம் ஒன்றின் குறிச்சொல். மான இனமொன்று அவமானம் செய்யப்பட்ட கரிய நாளொன்றின் குறிச்சொல்!
கற்சிலை மடு பண்டாரவன்னிய வரலாற்றின் ஒரு குறிச்சொல் கிடையாது. அது ஒரு காட்டிக்கொடுத்தலின் குறிச்சொல்.
பாஞ்சாலம் குறிச்சி கோட்டையும் கயத்தாற்று மண்டபமும் கட்டப்பொம்மனின் குறிச்சொல்லாய் இருக்க முடியாது. அது ஒரு துரோகத்தின் குறிச்சொல்.
உடையாளூர் அரண்மனை ராஜ ராஜ சோழனின் ஒரு குறிச்சொல் ஆகாது கோவாவின் தூக்குமேடை சங்கிலிக் குமாரன் வரலாற்றின் ஒரு குறிச்சொல் கிடையாது. இவை எல்லாம் துரோகங்களின் குறிச்சொல். மான வாழ்வொன்றை அவமானம் செய்த ஈனக் கொலைகளின் குறிச்சொல்.
முள்ளிவாய்க்கால் நான்கு தசாப்த தன்மான விடுதலைப் போரின் ஒரு குறிச்சொல் அல்ல! அது ஒரு இனம் அவமானப்படுத்தப்பட்ட நாளொன்றின் குறிச்சொல். அந்தக் குறிச்சொல் முடிவாக வேண்டுமா? இல்லை தொடக்கமாக வேண்டுமா? இல்லை தொடர் தொடராக வேண்டுமா? அது முடிவாகத்தான் வேண்டும் இனி
- சாம் பிரதீபன் -