மாறிவரும் சூழலை எதிர்கொள்வார்களா வடபுலப் பெண்கள்?

Updated: Apr 7

- தமனிகை பிரதாபன் - (சமூகவியலாளர்)

மாறிவரும் வடபுல சூழலிலே நாம் புதிய வாழ்வுக்கான தொடக்கத்தில் புதிய வேலைத்திட்டங்களில் கால் பதித்து நிற்கின்றோம். யுத்தம் தந்த சமூக நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் நிலைகுலைவை ஏற்படுத்தினாலும் பெண்கள் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். ஒரு அறிவார்ந்த சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் போது தன்னுள் இருக்கும் குறைபாடுகளை நீக்க வேண்டும். இதற்குப் பிரதானமாக வேண்டப்படுவது சிந்தனையும் சீரிய மனப்பான்மையும் ஆகும். சமூகத்தில் பெண் விடுதலை பற்றிப் பேசி நிற்கும் பெண்கள் ஒரு புறமும் கலாசாரம் மரபு என்ற வெளியினுள் ஒடுங்கிப் போய் இருக்கும் பெண்கள் இன்னொரு புறமுமாக உள்ளனர்.


காலத்துக்கு காலம் பெண்களின் கோட்பாடுகளும் போராட்டங்களும் குரல்களும் அவர்களின் தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபட்டுக் காணப்படுகின்றன. இருப்பினும் பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள், குடும்பம் மதம் சார்ந்த அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்,வாக்குரிமை போராட்டம் என்பவற்றில் ஒற்றுமை கண்டுள்ளனர்.பெண்களின் போராட்டங்கள் தொழிற்சங்க ரீதியாகவும் அரசுக்கு எதிராகவும் பொருளாதார முன்னேற்றம் கோரியும் குடும்ப வன்முறைக்கு எதிராகவும் எனப் பன்முகப்பட்டவை. பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் என்பன இன்று தீவிரமான நிலையில் உள்ளன. அதுமட்டுமன்றி சமூக நிகழ்ச்சித் திட்டமாகவும் காணப்படுகிறது. பெண்கள் சமத்துவம் விடுதலை, பெண்ணியம் சார் சிந்தனைகளிலும் சமூக மாற்றத்திலும் ஆர்வம் கொண்டோராகவும் தெளிவுடையோர் ஆகவும் இருப்பதாகப் பேசப்படுகிறது. ஆனால் எமது சூழலில் அவ்வாறான நிலையைப் பெண்கள் இதுவரை முழுமையாக அடையவில்லை. சிந்தனை விழிப்பு மட்டுமன்றி செயற்றிறன் உடையோராகவும் பெண்கள் மாற வேண்டியது அவசியமானது. இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண்கள் வாழ்விலும் சமூக அமைப்பிலும் வித்தியாசமான புதிய அமைப்பாக உருப்பெற வேண்டும்.

பாரம்பரியங்களிலும் மரபு வழமை பண்பாடு சடங்கு என்ற வரைபுகளினுள்ளும் ஒடுக்குமுறைக்கு ஆதரவான கல்வியினுள்ளும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் பெண்களின் வாழ்வை மீட்கும் நடைமுறையின் தேவை பற்றிய தெளிவே எல்லோரிடமும் வேண்டப்படுகிறது. பெண் விடுதலை பற்றி அறியாத உணராத நிலையே பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ளது. பெண் விடுதலை உரிமைக்காக போராடும் தரப்பினரும் அது தொடர்பாகச் சிந்திப்போரும் ஒரு குறியீடாகவே நமது சூழலில் பார்க்கப்படுகின்றனர். பெண் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் கூடிய தன்னிலை பற்றி தூரநோக்குடன் சமூகவியல் பண்பில் சிந்திக்கக்கூடிய ஆற்றலை வளர்க்க வேண்டியது அவசியமானது. கல்விக்கு அப்பால் சமூக அக்கறையுடன் பெண்களிடையே புதுமலர்ச்சியை தேடலை உருவாக்க வேண்டியது இன்றியமையாதது. வேலைத் திட்டங்கள் அனைத்திலும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். சமூக சிந்தனை என்பது புறநிலைப்பட்டதாக எழுச்சி பெற வேண்டும்.

எமது சமூகப் பெண்களுக்கு மரபுக்களினுள்ளே கட்டுண்டு அமிழும் நிலையை உடைக்கக்கூடிய துணிவையும் ஆற்றலையும் வழங்கக்கூடிய கல்வி போதிக்கப்பட வேண்டும். பண்பாட்டு இறுக்கங்களுக்குள் கட்டுண்டு அவற்றிலிருந்து வெளியே வரத் தயங்கும் பெண்களுக்கு வெளியே வருவதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். ஆணாதிக்கம் வரன்முறையின்றி பெண்கள் மீது தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்றது. நடைமுறை அரசுகளில் ஆணாதிக்கத்துக்கு ஆதரவு வழங்கும் நிலையே தொடர்கிறது. இந்த நிலை தொடரும் வரை பெண்ணடிமைத்தனம் தினமும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். பெண்கள் அரசியல் ரீதியான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது விழிப்பு நிலையை அடையாத வரையில் ஆணாதிக்கப்பிடியில் இருந்து விடுதலை பெறுவது கடினம். பாலியல் பாகுபாட்டின் பிரகாரம் ஆண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏராளம். மேலான சமூக மதிப்பு, வெளியுலக வாழ்க்கையில் சுதந்திரம், எதையும் முடிவு செய்யும் திறன் என அனைத்து வகையிலும் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இருந்தபோதும் பெண்கள் வேண்டுவது எல்லாவித பாகுபாடுகளையும் நீக்கி ஆண்களுக்குச் சமனான பொருளாதார அமைப்பை தாமும் உருவாக்குவதைத் தான். பெண்கள் தம்மிடம் உள்ள ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி சுயமான சிந்தனை உடையோராக வாழ விரும்புகின்றனர்.ஆணாதிக்க சமூகத்தில் சமூக நிறுவனங்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையே பெண்கள் இயக்கங்களின் தோற்றங்களுக்கும் காரணமாகின்றது.

பொதுவாக தமது சுய அடையாளத்தையும் அரசியல் இருப்பையும் முன்னிலைப்படுத்தி அல்லது அந்நேரச் சமூகச் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைப்பாடுகளை முன்னிறுத்தியே பெண்கள் அமைப்புக்கள் உருவாகி உள்ளன. ஆனாலும் பெண் விடுதலை என்றால் என்ன என்பதை அறியாத நிலையே எமது சமூகத்தில் இன்றும் உள்ளது. ''அனைவரும் மனிதப் பிறவிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக வாழ அருகதை உடையவர்கள் என உள்நாட்டுச் சட்டங்களிலிருந்து ஐநா சாசனங்கள் வரை உள்ள போதிலும் பெண்கள் மட்டும் ஏன் சமமாக வாழ முடியாத நிலை காணப்படுகின்றது? நம் பெண்கள் ஏன் எதனையும் சிந்திக்கத்தவர்களாக உள்ளனர்? பெண்கள் கல்வி கற்க முடியும் ஆனால் உயர்பதவி என்று வரும்போது எத்தனை ஆண்கள் பெண்களுக்கு மதிப்பு வழங்க முன்வருகின்றனர். எங்கும் ஆண் சார்புப் போக்கு மேலெழுந்து நிற்கிறது. கல்வி கற்ற சமூகத்திலும் இவ்வாறான நிலை தொடர்வதானது நகைப்புக்கு இடமான விடயமாகப் பார்க்கப்படுகிறது.

பெண்ணால் முடியும் என்பதை ஆண் சமூகம் ஏற்கத் தலைப்பட வேண்டும். பெண்ணை ஒரு அழகுப் பொம்மையாக பார்க்கும் நிலை மாற வேண்டும். இதுவே இரண்டாம் தரப்பிரஜையாக நோக்க இடமளிக்கிறது. இன்றுவரை பெண்கள் எவ்வளவு தான் கல்வி கற்றிருந்தாலும் உயர் பதவிகளில் இருந்தாலும் திருமணம் என்று வரும் போது சீதனம் என்ற போர்வையில் பெண்களுக்கு விலை பேசும் சமூக மனம் மாறியதாக இல்லை. பதிலாக மேலும் வளர்ச்சி கண்டு வருகிறது. யுத்தத்தின் கொடுமைகளையும் உயிர் உடமை இழப்புக்களையும் தாண்டி வந்துள்ள எம் சமூகத்தில் சமத்துவ உலகைக் காணப் புறப்பட வேண்டுமெனவும் சமூக மாற்றத்துக்கான அவசியம் உணரப்பட வேண்டுமெனவும் அறைகூவல் விடுப்போர் ஏன் பெண்களின் பிரச்சினைகளை எள்ளளவும் எண்ணிப் பார்ப்பதில்லை. கரிசனை கொள்வதும் இல்லை. இன்றைய காலத்தில் வடபுலப் பெண்கள் தெளிவு பெற வேண்டும். தாம் ஓரங்கட்டப்படும் சந்தர்ப்பங்களை இனம் காணத் தலைப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பேதங்களை இல்லாதொழிப்பதற்கான ஐநா சாசனமானது,பெண்கள் ஆண்களுக்கு உள்ள மனித உரிமைகளையும் அரசியல்,பொருளாதார,சமூக கலாசார குடியியல் மற்றும் வாழ்க்கையின் பிறதுறை சார்ந்த சுதந்திரங்களையும் அனுபவிக்க உரித்துடைடையவர்கள் எனக் கூறுகிறது.


அதே சாசனத்தில் உறுப்புரை 14 ஆனது கிராமப்புற மகளிருக்கு தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், சமத்துவமாக நடாத்தப்படவும், கிராமிய அபிவிருத்தித் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் நலன்களை அனுபவிக்கவும், சுகாதாரம் பேணும் சேவைகளை அனுபவிக்கவும், கல்வி மற்றும் பயிற்சிகளை அனுபவிக்கவும், சுய உதவிக்குழுக்களை அமைக்கவும், சமூகம் சார் செயற்பாடுகளில் பங்கு பற்றவும், கடன் வசதிகளைப் பெறவும், சந்தை வாய்ப்புக்கள் தொழில்நுட்ப வாய்ப்புக்களை அடையவும், வீடமைப்பு சுகாதார வசதிகளைப் பெறவும், உரிமை உண்டு எனக் கூறுகின்றது.இவை எவ்வளவு தூரத்துக்கு நடைமுறையில் உள்ளன.இந்த அறிவை நம் பெண்கள் பெறாமல் இருப்பதும் இத்தகைய பின்னோக்கிய நிலைக்கு காரணம்.

எனவே வடபுல பெண்களை தயார்ப்படுத்த வேண்டும். சிறிய அளவில் உள்ள பெண் சிந்தனையை அகலித்து முழுச் சமூகத்திலும் கலக்க வைக்க வேண்டும். ஒடுக்கப்படும் பெண் மட்டும் தெளிவு பெற்றால் போதாது.ஒடுக்கும் சமூகமும் தெளிவு பெற வேண்டும். புதிய புரட்சிகரமான மாற்றத்துக்கான மனோநிலை வளர வேண்டும்.ஜனநாயகத்தின் உயரிய அம்சங்களைப் புரிந்து அந்தத் தளத்துக்குள் பெண்கள் கால் பதிக்க வேண்டும்.


வடபுலப் பெண்கள் புனர்வாழ்வு பொருளாதார முன்னேற்றம், சுயதொழில் முயற்சி, சுய உழைப்பு, தீர்மானம் எடுக்கும் திறன், என அனைத்தையும் பெறும் நிலையை உருவாக்க வேண்டும். இந்நிலையில் நீண்ட கால அழிவுகளைக் கடந்து சுமைகளுடன் உள்ள நம் வடபுலப் பெண்களின் தனித்துவத்தை இழக்காத வகையில் புதிய பாதையில் பெண் விடுதலை, சமத்துவம், பெண் உரிமை நோக்கி புதிய திட்டமிடல்களுடனும் அர்ப்பணிப்புடனும் பயணிக்க வேண்டும். அதன் மூலமே மாறிவரும் சூழலை எதிர்கொண்டு எம்மை நாம் அடையாளப்படுத்தி சமத்துவமான சமூகத்தில் சமூக மாற்றத்தைக் காண முடியும்.


149 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli