ஒரு பம்பரத்தின் கதையை நான் உனக்குச் சொல்வேன் உன் காதுகளைக் கொடு!


ஒரு

பம்பரத்தில் கதையை

நான் உனக்குச் சொல்வேன்

உன் காதுகளைக் கொடு

அவன் ஒரு

ஒயாத பம்பரம்,

எத்தனை கயிறுகளில்

ஆடி ஆடி

இறுதிவரை சுழன்று

ஓய்ந்து போய் மாதம் ஒன்று.

கயிற்றை இழுத்து

அன்று ஆட்டத்தை

ஆரம்பித்து வைத்தாள்

தேசத்தின் தமிழன்னை.

பாசத்தில் ஆடினான்

அவனும் பம்பரமாய்.


அவன் வேகத்தில்

மீளப் பிறந்து

மொழி நீராடிக் கொண்டது.

அவன் சுவாசத்தில்

தேரோடிக் கொண்டது தமிழ்

கலைத் தாயின் கயிற்றிலும்

உரிமையாய் அவன்

வீச்சாய் ஆடினான்.

சல்லரி ஓசையும்

கிண்ணறச் சிணுங்கலும்

அடவும் ஆட்டமும்

மத்தள முரசமும்

எட்டாவது ஸ்வரமாய்

களி நடனம் புரிந்கள்,


துறவுக் கயிற்றினில்

ஆடி ஆடி அவன்

உன்னத பயணத்தில்

பாதம் பதித்தான்.

வெள்ளை உடுத்து

வெண்புறாச் செய்தியைப்

பேசத் துணிந்தான்

சகதிகளுக்குள்

சங்கெடுத்து ஊதினான்.

நாயுருவிப் பூக்களுக்கும்

புது வாசம் கொடுத்தான்.


அவனுக்குள் புகழ்ச்சி இருக்கவில்லை

கடலின் ஆழப் பகுதிகளில்

அலை அடிக்காதது போல.


மனங்களை வென்றான்

மதங்களை அல்ல.

வாலிபர் சூழ்ந்தனர்

அவன் சோக்கிரட்டீஸ் அல்ல

கன்னியர் நாடினர்

அவன் றஸ்புடீனும் அல்ல

சுட்டு வரல் அசைவில்

எல்லாமே நகர்ந்தன

அவன் கிட்லரும் அல்ல

மதத்திலே

ஒரு புதுமையை தேடினான்

மாட்டீன் லூதரும் அல்ல.


திருமறைக்கும் தமிழ் மொழிக்கும்

கலை அரங்கிலே

புதுக்கவிதை எழுதினான்.

ஆடல் அரங்கு

அவனது ஆயுதமானது

அவன் பேசினான்

தேசம் கடந்தும்

ஒரு தூதனாய்


அவன் அமைத்த கலைப் பாலங்களில்

மொழிகளும் இனங்களும் மதங்களும்

கை குலுக்கிக் கொண்டன.

அவனது மனிதத்தில்

கல்வாரியும் கைலாயமும்

போதிமரமும் மக்காவும்

சமரசம் செய்தன.


அவன் மேய்த்தான்

ஆடுகள் எவையும்

காணமல் போகவில்லை,

அவன் விதைத்தான்

வித்துகள் எவையும்

வழியோரம் விழவில்லை

தேசங்கள் தோறும்

அவை விருட்சமான

ஐந்து தலைமுறையை

பிரசவத்துக் கொண்டது.

கருத்தரித்த தமிழன்னை

ஆட்டிய கயிற்றில்

ஆடத் தொடங்கி

கலைத் தாயின் கயிற்றிலும்

திருச்சபைத் தாயின் கயிற்றிலும்

திருமறையாள் கயிற்றிலும்

அறிவியல் கயிற்றிலும்

அமைதியின் கயிற்றிலும்

ஆடி ஆடி

ஓயாது சுழன்ற அவன்

ஒரு பம்பரம்.

அந்த பம்பரத்தில் கதையை

நான் உனக்குச் சொல்வேன்

உன் காதுகளைக் கொடு.


- சாம் பிரதீபன் -

108 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: