“குழந்தைகளுக்காய் நேரம் ஒதுக்குதல்”
- சாம் பிரதீபன் -

முடிந்தவரை தமிழுக்கு தழுவலாக எழுதியிருக்கிறேன். - ஒரு தாய் இன்னுமொரு தாய்க்கு எழுதிய அழகான பதிவு -
சின்னச் சின்னக் குறும்புகளோடும் சண்டைகளோடும் விவாதங்களோடும் மட்டுமல்ல, அப்போதெல்லாம் என் வீடு மிக உச்சக் கலகலப்போடும், கும்மாளங்களோடும், வயிறு குலுங்கச் சிரிக்கும் நகைச்சுவைகளோடும் புன்னகைகளோடுமே அதிகம் நிறைந்திருந்தது. புத்தகங்கள் வீடு முழுவதும் ஆங்காங்கே எறியப்பட்டுக் கிடக்கும், பென்சில்களும் கொப்பிகளும் திரும்பும் இடமெங்கும் அலங்கோலமாய் வீசப்பட்டுப்போய்க் காட்சியளிக்கும். கடந்த வாரம் துவைத்திருக்க வேண்டிய துணிமணிகளும் இரண்டு வாரத்துக்கு முந்தி துவைத்தெடுத்த உடுப்புகளும் என் படுக்கையறைக் கட்டிலிலும் மேசைகளின் மீதும் குவிந்து கிடக்கும். அவர்களை எப்போதுமே நான் கடிந்துகொண்டிருந்தேன். அவர்கள் அலங்கோலமாக்கிய என் வீட்டினை ஒழுங்குபடுத்தும் வரை என் சத்தத்தால் அவர்களை சங்கடப்படுத்தியிருந்தேன். தினமும் எனது காலைகளில்,

“அம்மா எனக்கு தேவையான புத்தகம் ஒன்றை இங்கு வைத்தேன் காணவில்லை” என ஒரு பிள்ளை எழுந்து புலம்பும். “எனது வாசனைத் திரவியத்தை யார் எடுத்தது” என்று மற்றொன்று தொடங்கும். “அம்மா நான் செய்த வீட்டுப் பாடப் புத்தகத்தை கண்டீங்களா” அடுத்தது அலறும். “ஐயோ நான் வீட்டுப் பாடம் செய்ய மறந்துவிட்டேன்” என இன்னுமொன்று ஒப்பாரி வைக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தடவையும் தாம் தவறவிட்ட விடயங்கள் பற்றி என்னிடம் நச்சரிக்கும் போது நான் கூறுவது ஒன்றை மட்டும்தான். “நீங்கள் எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள் தானே. நீங்கள் தான் உங்களுடையவைகளை பொறுப்பாக கவனமாக எடுத்து வைக்க வேண்டும்”
இன்று என் வீட்டு அறைக் கதவோரங்களில் நான் நின்று பார்க்கிறேன். என் கட்டில்களில் எந்த உடுப்புகளும் எறியப்பட்டிருக்கவில்லை அது மிக அழகாக ஒழுங்காக இருக்கின்றது. எனது அலுமாரிகளை ஒருசில துணிகள் மட்டும் வைக்கப்பட்டிருக்கின்றது. வாசனைத் திரவியங்களின் மணம் மாத்திரம் என்னைச் சுற்றியுள்ள காற்றில் இப்போது படர்ந்து விரிந்து கிடக்கின்றது. அவர்கள் எல்லோருக்கும் தனித்தனியான விசேட வாசனைத் திரவியங்கள் அப்போது இருந்திருந்தது. இனி அந்த மணங்களின் நினைவுகள் மட்டுமே என் வெறுமையான இதயத்தின் வலியை நிரப்பக் கூடியது என நம்புகின்றேன். இப்போதெல்லாம் என்னிடம் சில நினைவுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அது அவர்களின் சிரிப்பொலிகளின் நினைவுகளாகவோ, சின்னச் சின்ன சண்டைகளின் நினைவுகளாகவோ, மீளக் காணக்கிடைக்காத குறும்புகள் பற்றிய ஞாபகங்களாகவோ, அவர்கள் தந்த மிகக் கணகணப்பான கட்டி அணைத்தல்கள் பற்றிய எண்ணங்களாகவோ தொடர்கின்றன.

இந்த வீடு இப்போதெல்லாம் மிகச் சுத்தமாக இருக்கின்றது. ஒழுங்கு குலையாமல் வைத்தது வைத்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றது. ஒரு தியான மண்டபத்தைப்போல் மிக அமைதியாக காட்சி தருகின்றது. ஆனால் மனிதர்கள் வாழாத ஒரு பாலைவனத்தைப் போல் உணர்வுகளால் கொல்லக்கூடிய வெளிகளால் எல்லாச் சுவர்களும் நிறைந்திருக்கின்றன. உன் குழந்தைகள் உன் வீட்டினை அலங்கோலம் செய்வதையிட்டு நீ ஒருபோதும் அவர்களைக் கடிந்து கொள்ளாதே.
ஒவ்வொரு தடவையும் அவர்கள் என்னைச் சந்திக்க என் வீட்டுக்கு வரும் போதும், என்னுடன் சிறிதளவு நேரம் செலவிடும் போதும், மீண்டும் புறப்படத் தயாராகி தமது கைப்பைகளை தோள்களில் போட்டுக் கொள்ளும் போதும் எனது மனது வலிப்பதை இப்போதெல்லாம் நான் உணர்ந்து கொள்கிறேன். கதவுகளைப் பூட்டியபடி அவர்கள் விடைபெற்றுச் செல்லும் ஒவ்வொரு தடவையும், பூட்டப்பட்ட கதவின் உட்புறமிருந்து கண்ணீருடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே போய்வரும்படி எத்தனை தடைவைகள் முன்பெல்லாம் நான் அவர்களைக் கடிந்து கொண்டேனென்று.
இன்று எனது கதவுகளை எல்லாம் நானே பூட்டிக் கொள்கின்றேன்.என் கதவுகளைத் திறந்துவிட இப்போதெல்லாம் என் அருகில் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வெவ்வேறு நகரங்களுக்கும் வெவ்வேறு நாடுகளுக்கும் தத்தமக்கான வெவ்வேறு வாழ்க்கை அமைத்துப் போய்விட்டார்கள். எல்லோரும் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோருமாக ஒன்றாக எப்போதும் இந்த வீட்டில் என்னோடு இருக்க வேண்டும் என என் மனம் இப்போது விரும்புகிறது. என் இறைவனே! அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள். அவர்கள் சந்தோசமாக வாழ வழி செய்.
உங்களுடைய குழந்தைகள் இப்போது அந்த சிறிய வயதில் இருந்தால், அதை அனுபவிக்க ஒருபோதும் தவறாதீர்கள். இந்த வீட்டை விட்டு அவர்கள் புறப்பட முன்னம் அவர்களுடன் சிரியுங்கள் மனசு கரையக் கரைய கதையுங்கள் கதைத்துக்கொண்டே இருங்கள். குதூகலங்களால் அவர்களை சீராட்டுவதை நிறுத்திக்கொள்ளாதீர்கள். அவர்களின் புன்னகைகளைப் புறக்கணிக்காதீர்கள். குறும்புகளோடு சந்தோஷிக்க தவறிவிடாதீர்கள். உங்கள் வீட்டை மிக விரைவாக அவர்கள் உங்களிடம் மீளக் கொடுத்துவிடுவார்கள். ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருங்கள். உங்கள் மண வாழ்வின் ஆரம்பத்தில் அவர்கள் உங்களோடு இருந்திருக்கவில்லை. இப்போது தான் உங்களுடன் வந்து இணைந்திருக்கிறார்கள். அவர்களை சந்தோசப்படுத்துங்கள்.
தமிழில் : சாம் பிரதீபன்