போப் வருகைக்காக காத்திருக்கும் ஈராக்.

இம்மாதம் 5ம் தேதி முதல், 8ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத் திட்டங்கள் பற்றிய விவரங்களை, மார்ச் 02, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.
மார்ச் 05, வருகிற வெள்ளி, உரோம் நேரம் காலை 7.30 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 12 மணிக்கு, உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, ஈராக் தலைநகர் பாக்தாத்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்குச் சென்றடைவார்.
பாக்தாத் பன்னாட்டு விமானத்தளத்தில் இடம்பெறும் வரவேற்பு நிகழ்விற்குப்பின், அந்நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறையில், பிரதமரை, தனியே சந்தித்துப் பேசும் திருத்தந்தை, பாக்தாத் அரசுத்தலைவர் மாளிகையில், அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார். அதற்குப்பின், அதே மாளிகையில், அரசுத்தலைவரை தனியே சந்தித்துப் பேசுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்று மாலை பாக்தாத், அரசுத்தலைவர் மாளிகையில், அரசு அதிகாரிகள், பொது மக்கள் பிரதிநிதிகள், மற்றும், தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, பாக்தாத் நகரிலுள்ள மீட்பரின் அன்னை மரியா சீரோ-கத்தோலிக்க ஆலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும், வேதியர்களைச் சந்தித்து உரையாற்றுவார்.
மார்ச் 06 சனிக்கிழமையன்று நஜாப், நசிரியா, மற்றும், ஊர் சமவெளியிலும், மார்ச் 07, ஞாயிறன்று, பாக்தாத், எர்பில், கரகோஷ் ஆகிய நகரங்களிலும், நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 08, திங்கள் காலையில், பாக்தாத் நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படுவார். அன்று உரோம் நேரம் மதியம் 12.55 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமானநிலையம் வந்துசேர்வார். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும்.
இதேவேளை பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் இரண்டு நாட்களில் ஈராக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் மேற்கு ஈராக் மாகாணமான அன்பரில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்தின் மீது, ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது