இன்று மேற்கொள்ளப்படவிருந்த சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வாக்கெடுப்பு ஜெனீவா நேரத்தில் முற்பகல் 9 மணிக்கும், இலங்கை நேரத்தின் பிராகரம் பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை குறித்து இன்றைய தினம், வாக்கெடுப்பு நடாத்தப்படவிருந்தது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ, மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளநிலையில் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளினால் இந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஜெனிவா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.