மாகாண சபை தேர்தலை அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை : கெஹலிய ரம்புக்வெல.

மாகாண சபை தேர்தலை இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை' என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் அதற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இன்று நடைபெற்றது.
இதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திபோடப்பட்டதாக குறிப்பிட்டார்.இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.