கடல்களின் அத்தனை அற்புதங்களையும் அசைவுகளையும் தனக்குள் மொழிபெயர்த்து வைத்திருந்தான் அவன்.


ஈழத்துப் புறம் - 1“பெத்தா” என்னும் பாட்டுடைத் தலைவன்.


அது ஒரு மாரி காலப் பொழுது. எதற்கும் வசதியற்றுப்போய் இடியும் மின்னலும் மழையும் இருட்டுமாய் எங்கும் வியாபித்துக் கிடந்தது. சிறிய தொலைவில் தெரியும் அலைகளைக் கூட தெளிவாகப் பார்க்க முடியாத மூடம் நிறைந்த பகல்களாய் இந்த வாரம் முழுவதும் முடிந்து கொண்டிருந்தது. பெத்தாவுக்கு இந்தக் காரியத்தை எப்படி செய்து முடிப்பதென்பதில் இரண்டு நாட்களாக சங்கடம் இருந்துகொண்டேயிருந்தது. ஏத்தனை பெரிய அலைகளையெல்லாம் மின்னி முடிப்பதற்குள் தாண்டிக் கடந்த அவனுக்கு மிகச் சாதாரணமான அந்த மழை மூடமும் அப்போதைய அலைகளின் மிகக் குறைந்த பேரிரைச்சலும் ஏன் இப்படி சங்கடத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது என்பதை அவனாலேயே உணரமுடியாமல் இருந்தது.

பெத்தா! கடல் சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய முடிசூடா மன்னனாகவே அந்த நாட்களில் வலம் வந்துகொண்டிருந்தான். பெருங்கடல்களோடு சமரசம் செய்துகொண்டு சமுத்திரங்களின் ராட்சத அலைகளையெல்லாம் சங்காரம் செய்வதில் அவனுக்கு சவால் விடுக்கக்கூடிய எவரும் அங்கிருந்ததாகத் தெரியவில்லை. கடல்களின் அத்தனை அற்புதங்களையும் அசைவுகளையும் தனக்குள் மொழிபெயர்த்து வைத்திருந்தான் அவன். இந்து சமுத்திரத்தின் ஆழி அலைகள் எல்லாம் இவனைக் கண்டு அஞ்சுகின்ற அல்லது அடங்கிப்போகின்ற அளவுக்கு விஸ்வரூபப்பட்டுக் கிடந்தது இவனது கடல் ஆளுமைகள்.

'பெத்தா! என்னமாதிரி எதும் பிளான் சரிவந்துதோ?' மழை மூடத்தை விலக்கிக்கொண்டு சாலை முகாமுக்குள் நனைந்தபடி வந்து சேர்ந்த வேங்கை மாறனின் கேள்விக்கு பெத்தாவால் மௌனத்தை மட்டுமே அப்போது பதிலாகத் தர முடிந்திருந்தது. அருகே தென்னங் குத்திகளை அடுக்கி அதன் மேல் கிடுகு கூரை வேய்ந்திருந்த அந்த தாவாரத்தின் குந்தில் இருந்து கடலை மட்டுமே வெறித்துப் பார்த்தபடி பெத்தா குந்தியிருந்தான். 'கடலைக் கடலை பாத்துக்கொண்டிருந்தா சரிவராது. நடுக்கடல்ல நாலு நாளாக் கப்பல் நிக்குது. மாட்டுப்பட்டா கதை சரி. ஏதாவது உடன செய்ய வேணும் பெத்தா'


வேங்கை மாறனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் கடலில் பொங்கி அமிழ்ந்த பேரலையொன்றை உற்று அவதானிக்கத்; தொடங்கின பெத்தாவின் கண்கள். தன்னை திரும்பிப் பார்த்த பார்வையிலும் கடலை வெறித்துப் பார்த்த பார்வையிலும் மிகத் தீவிர செயல்முனைப்பொன்று பெத்தாவிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை ஊகிக்க வேங்கை மாறனுக்கு மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. 'திட்டம் இருக்குது போல' என்று கூறியபடி இலக்கியனை கடந்து பேஸ் சமையற்கட்டுப் பக்கம் நகர்ந்து போனான் வேங்கை மாறன். 'என்ன கப்பல் வேங்கை மாறண்ணை?எண்ணையா இல்லாட்டில் சாமானா?' இலக்கியன் வேங்கை மாறனை விசாரித்தபடி அவனுக்கு புறத்தால் போய்க்கொண்டிருந்தான்.

இலக்கியன்; நான்கு வருடங்களாக ஒரு போராளி. முள்ளியவளைக் கிராமத்தில் இருந்து நான்கு வருடங்களின் முன் இயக்கத்துக்கு சேர வந்த ஏழு பேரில் இவனும் ஒருவன். 21 வயதில் வந்து கடற்புலிகள் அமைப்பில் சேர்ந்தவன். சேர்ந்த காலம் முதல் பெத்தாவின் தீவிர விசிறியாக மாறிப்போயிருந்தான். கடற்போரின் ஜாதகங்களை எல்லாம் தன் இஸ்டப்படி மாற்றி எழுதும் பெத்தாவின் சாகசங்களை நேரடியாகவே பார்த்து வளர்ந்தவன் இவன். பெத்தாவின் கணிப்பு எப்போதும் பிழைத்துப் போகாது என்பதில் முழு நம்பிக்கை கொண்டவனாகவே பல கடற்ச் சமர்களில் லாவகமாக களமாடி மீண்டு வந்திருக்கிறான் இந்த இலக்கியன்.

மழை சற்று ஓய்வெடுக்க நினைத்ததோ என்னவோ மெல்லிய தூறல்களுடன் தன் மூடத்தை கொஞ்சம் விலக்கத் தொடங்கியிருந்தது. நீண்ட நேர நடைப் பயிற்சியின் பின் சோர்ந்து போகும் கால்களைப் போல கடல் அலைகளும் மெல்லிய சோர்வு காணத்தொடங்கின. தாவாரத்தின் குந்தில் இப்போது பெத்தா இல்லை. கடற் கரையில் நின்றபடி அந்த முல்லைத்தீவுக் கடலின் நடமாட்டங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். கடற் சமர் ஒன்றின் புதிய ஜாதகம் பெத்தாவுக்குள் எழுதப்பட்டுக்கொண்டிருந்தது என்பதை அவனின் கடல் நோட்டம் தெளிவாகவே காட்டியது.

கடல் என்ற ஒன்றை பெத்தா முதன் முதலாக பார்த்தது தனது ஐந்து வயதில்த்தான்.. பருத்தித்துறை சாழம்பைக் கிராமத்தில் பிறந்த அவனுக்கும் கடலுக்குமான உறவு அந்த வயதில் இருந்துதான் ஆரம்பமாகியிருந்தது. தாய் தந்தையுடனும் மூன்று தங்கச்சிமாருடனும் வாழ்ந்த அந்த சின்னஞ் சிறிய குடும்பத்தின் வாழ்வுக் கதைகள் பெத்தா நினைவில் அடிக்கடி வந்து போகும். ஈழக் கிராமங்களில் வாழ்ந்த எல்லாரையும் போல இவனும் போரை எப்போதும் விரும்பியவனல்ல. ஆனால் காலம் போர் மீதான தேவையையும் விருப்பத்தையும் இவன் மீது சற்று அதிகமாக ஏற்படுத்தியிருக்க வேண்டும். இளம் வயதிலேயே போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். எந்த ஒரு விடயத்தையும் விரைவாக கற்றுக்கொள்வதிலும் தன்னியல்போடு கற்றவற்றை வளர்த்துக்கொள்வதிலும் அவனுக்கு எப்போதும் ஒரு தனிச் சிறப்பு இருந்தது. அந்த சிறப்பு பல சவால்களை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றி போராட்டத்தில் ஒரு முக்கிய பொறுப்புக்கு வர காரணமாயிமிருந்தது. கனரக ஆயதங்களை கையாள்வதன் வித்துவக் கலை தெரிந்தவர்களுள் பெத்தாவுக்கு தனியிடமொன்று அங்கிருந்தது.

'பெத்தா....!!! பெட்டையளின்ர பேசில இருந்து கதைக்கினம். வோக்கியில தொடர்பில இருக்கினம்'

'பெத்தா அண்ணை படகு வேலை முடிஞ்சிட்டுது. ரெஸ்ற் பண்ணியும் பாத்தாச்சு. இண்டைக்கு இரவைக்கு இறக்கில் இறக்கலாம் ஓவர்' அலையரசி பெத்தாவுடன் வோக்கியில் பேசிக்கொண்டிருந்தாள். கடற்புலிகளின் மகளிர் படகு கட்டுமானத்துறை முகாமின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தாள் அலையரசி. ஒரு வாரத்திற்கு முதல் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த முக்கியமானதொரு படகு கட்டும் பணியினை இப்போதாவது முடித்துவிட்ட திருப்தியிலும் களைப்பிலும் அவள்; குரல் வழமைக்கு மாறான தொனியுடன் ஒலித்துக்கொண்டிருந்தது.

அலையரசி மகளிர் படகு கட்டுமானத் துறைக்கு கிடைத்த மிகப் பெரியதொரு வரம். தமக்கு தேவையான கருவிகளை தம்மிடம் கிடைக்கக்கூடிய வளங்களில் இருந்து உருவாக்கிக்கொள்ளும் மதிநுட்பம் கொண்ட தொழில்நுட்பப் பிரிவினால் அடையாளம் காணப்பட்ட இன்னுமொரு வித்தகி அவள். சமரின் சூக்குமங்களுக்கு ஏற்பவும் சண்டையின் கள நிலவரங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும் போரின் வியூகங்களுக்கு ஒத்திசையக் கூடிய முறையிலும் கடலின் காலநிலை மாற்றங்களுக்கு தகவமைந்து போகும் வகையிலும் நுட்பமாக படகுகளை உருவாக்குவதில் அலையரசி ஒரு தேர்ந்த பொறியியலாளராகவே அங்கு இயங்கிக்கொண்டிருந்தாள். அக்காலத்தில் பல கடல்ச் சமர்களின் வெற்றிக்கு அவளின் கட்டுமானத்தில் உருவான படகுகள் கட்டியம் சொல்லி நின்றன.

'இண்டைக்கு இரவைக்கு எப்பிடியும் இறக்க வேணும். இனியும் வெயிட் பண்ண ஏலாது. பிந்த பிந்த ஆபத்து எங்களுக்குத்தான ஓவர்;' பெத்தாவின் அவசரத்தை அலையரசி புரிந்து கொண்டாள். கடந்த ஒண்டரை மாதமாக ஓயாது இரவு பகலாக உழைத்து மகளிர் படகு கட்டுமானதுறையினர் இன்று தான் அந்த ராங்கர் படகினை தயார்ப்படுத்தியிருந்தனர்.

2000இன் இறுதிப் பகுதி அது. முல்லைத்தீவுக் கடல்பகுதி முன்னெப்போதும் இல்லாதவாறு தனது சுதந்திரத்தை இழந்திருந்த காலம். காங்கேசன்துறை முகாமில் இருந்தும் திருகோணமலை முகாமில் இருந்தும் இலங்கையின் கடற்படையினர் வந்து வந்து முல்லைக் கடலை உழுதுவிட்டுச் செல்லும் ஆபத்து நிறைந்த காலங்கள் அவை. மிக நுண்ணிய ராடர் கருவிகளின் துணைகொண்டு கடலின் அசைவுகளை துல்லியமாக படம் பிடித்தபடி கடற்படையினர் நகர்வுகளும் தாக்குதல்களும் கடற்புலிகளின் அசைவிற்கு சவால்விடுத்துக்கொண்டிருந்தன.


'எங்களுக்கொரு ராங்கர் போட் அவசரமா வேணும். எஸ்சோ அண்ணை உங்களோட கதைக்கச் சொன்னவர்' ஒண்டரை மாதத்திற்கு முதல் மகளிர் படகு கட்டுமானத் துறைக்கு பெத்தா வந்திருந்த போது அலையரசியிடம் சொன்னது இதுதான்.

'ரெண்டு போட் எங்கட்ட இருக்குது பெத்தா அண்ணை அதில ஒண்டை எடுங்கோ' என்று சொன்ன அலையரசியை இடைமறித்து

'இருக்கிற போட் எங்களுக்கு வேண்டாம். ஒரு ஸ்பெசல் போட் வேணும்' பெத்தாவின் தீர்க்கமான இந்த வார்த்தைகளின் பின்னால் ஒழிந்திருக்கும் தேவையையும் நிதானத்தையும் அலையரசியால் புரிந்துகொள்ள முடிந்தது.

'சொல்லுங்கோண்ணை எப்பிடி வேணும்' 'முக்காவாசி தண்ணிக்குள்ள மூழ்கி இருக்கிறமாதிரி ஒரு ராங்கர் படகு வேணும்' பெத்தாவின் தேவையும் அலையரசியின் ஆற்றலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்களுக்கு சமப்பட்டுக்கொள்ளவில்லை. மிக நீணடதொரு அமைதி படகு கட்டுமானப் பகுதி முகாமில் படர்ந்திருந்தது.

ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்கொத்த ராங்கர் படகொன்றினை அமைக்கும் சாத்தியம் எம்மிடம் இருக்கின்றதா? அது எம்மால் முடியக்கூடிய காரியமா? என்ற கேள்விகளுக்கான விடை தேடும் பிரயத்தனம் அந்த நீண்ட அமைதியில் அலையரசி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

'இன்னும் ஒரு மாதத்தில கடலுக்கு முக்கியமான சாமான் வருகுது. ஆனா நேவியின்ர கெடுபிடி பயங்கரமா இருக்குது. அவங்கன்ர ராடரை உச்சிப்போட்டு சாமான் இறக்க வேணுமெண்டால் இது தான் ஒரே வழி. படகை முக்காவாசி தண்ணிக்கை இறக்கினா அவங்கன்ர ராடரில தெளிவா காட்டாது'

பெத்தா தனது திட்டத்தை மிக இரகசியமாக அலையரசியிடம் பரிமாறிக்கொண்டான்.

அலையரசிக்கு இது புதியதொரு சவால். பயத்தோடும் புதியதொரு விடயத்தை கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற புல்லரிப்போடும் படகு கட்டும் வேலைக்கு சம்மதம் சொன்னாள்.

'நீங்க ஒரு கிழமைக்கு மேல இழுத்தடிச்சதால எவ்வளவு பிரச்சினை. கப்பல் வந்து அங்க நடுக்கடல்லை நிக்குது. மாட்டினா ஒண்டும் செய்ய ஏலாது ஓவர்' எவ்வளவு சிரமப்பட்டு இந்த பெரும் முயற்சியை முடித்திருந்தாளாயினும் வேண்டிய நேரத்தில் முடிக்க இயலாமல் போனதுக்கு ஒரு சிறு குற்ற உணர்வு அலையரசியை நோண்டிக்கொண்டிருந்தது. பதில் எதுவும் கூறாமல் வோக்கியை கையில் பிடித்துக்கொண்டிருந்தாள்.

முல்லைத்தீவில் இருந்து 120 கடல் மைல்களுக்கு அப்பால் நிண்டுகொண்டிருந்தது ஆ வு ளுழலளin என்ற அந்த சரக்குக் கப்பல். புலிகளின் சர்வதேச கடல் வினியோப் பிரிவுப் போராளிகள் பன்னிரெண்டு பேர் ஆபத்து எப்போதும் வரலாம் என்பது போல் அதனை எதிர்கொள்ளத் தயாராகியிருந்தார்கள். நங்கூரம் இட்டு நிற்க முடியாத சமுத்திரத்தின் ஆழப்பகுதியில் கப்பலை வைத்திருப்பதென்பது மிகச் சாதாரணமானதொன்றல்ல. கப்பலை அலைகள் அடித்து ஒதுக்கி ஒதுக்கி வேறு இடத்திற்கு நகர்த்த மீண்டும் அதனை குறித்த பழைய இடத்திற்கு கொண்டு வருதல் என்பது ஆபத்து நிறைந்த கடல்பகுதியில் மிகச் சிரமம். அந்த சிரமத்தினை நான்கு நாட்களாக கப்பலில் இருந்த போராளிகள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

'எல்லாரும் ரெடியா இருங்கோ இண்டைக்கு இரவு ராங்கர் வருகுதாம். சாலை பேஸ்ஸில இருந்து தொடர்பு கிடைச்சிருக்கு' கப்பல் கப்டன் அன்பரசன் அவர்களை அலேட் பண்ணினான். 'யார் வாறதாம் அன்பு' போராளிகளுள் ஒருவனுக்கு ஆர்வம் மிகுந்திருந்தது. 'பெத்தாவும் வேற நாலு பேரும் சாலையில இருந்து வாறாங்கள்' அன்பரசன் ஆர்வக் கோளாறுக்கு பதில் சொன்னான். தமக்கும் கப்பலுக்குமான பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்வதற்கும் சாமான்கள் இறக்கப்பட்டதும் உடனடியாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுவிடுவதற்குமான ஆயத்தங்களை அத்தனை பேரும் மேற்கொள்ளத் தொடங்கினர்.

மாரி காலத்து மழையின் குளிர் எங்கும் பரந்து கிடந்தது. நட்சத்திரங்கள் அற்ற அந்த இரவின் அமைதி முல்லைத்தீவை சுற்றி கவிந்து ஓரிரு மணியாகியிருக்கும். பூச்சிகளும் தவளைகளும் சாலை முகாமைச் சுற்றி கத்தத் தொடங்கிவிட்டன. கடல் அலைகளின் சத்தம் மட்டும் மிகப் பெரிதாய் எழுந்து எழுந்து ஓய்ந்தபடி இருந்தது. தூரத்தே ஓரிரு நாய்கள் விட்டு விட்டு ஊழையிட்டபடி இரவைக் கழித்துக் கொண்டிருந்தன. வழமைக்கு மாறாக பெத்தா இன்று மிகப் பதட்டமாக இருந்தான். யாருடனும் நீளமாகவும் சத்தமாகவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வரப்போகும் பேராபத்து ஒன்றை எதிர்கொள்ளும் போராளிக்குரிய தீவிர அவதானிப்புகளை அவன் கண்களில் காண முடிந்தது. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை இருட்டை ஊடறுத்து கடலின் மூன்று முனைகளையும் நோட்டம் விட்டபடி இருந்தான். 'தேவையானதெல்லாம் ஏத்திப் போட்டியளே?' இலக்கியனைத் தாண்டி நகர்ந்து போனபோது பெத்தாவின் குரல் நீண்ட நேரத்தின் பின் சாலை முகாமில் வந்து விழுந்தது. 'எல்லாம் பக்காவா முடிஞ்சுதண்ணை. தொடர்பெடுத்தா சரி....' எப்போதையும் போல் பெத்தாவின் வெற்றிச் சமர் ஒன்றின் சாகசங்களில் மீண்டும் பங்கெடுக்கப் போகிறேன் என்ற ஆனந்தத்தில் இலக்கியன் துடிதுடிப்பாக இருந்தான்.

'பெத்தா பெத்தா பெத்தா ஓவர் ஓவர்..' 'அறிவு அறிவு அறிவு ஓவர்' 'எல்லாம் ஓகேயா ஓவர்' 'சீ சீ ஐஞ்சு கறுப்புப் பூஓவர்' ராடர் தொலை தொடர்பு நிலையத்துக்கும் பெத்தாவுக்கும் கோட் வேட் உரையாடல் வோக்கியில் போய்க்கொண்டிருந்தது. தொடர்ச்சியாக கடலில் நேவியின் நடமாட்டம் குறித்து அவதானித்து வரும் புலிகளின் ராடர் தொலை தொடர்பு நிலையத்தின் உறுதிப்படுத்தலுக்காக யாவரும் காத்துக்கொண்டிருந்தனர். பாதுகாப்பான நகர்வொன்றினை கடலினூடு மேற்கொள்வதற்கு இந்த உறுதிப்படுத்தல் அவசியமாக இருந்தது. 'மூண்டு மலை பி வி ஏ ஓவர்' 'எம் எம் முனை சீறோ சீறோ ஓவர்' காங்கேசன் துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான நேவியின் தொடர்பாடல்களை புலனாய்வு செய்யும் தகவல் கண்காணிப்புப் பிரிவின் சமிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து பெத்தாவும் ஏனைய நால்வரும் ராங்கர் படகில் ஏறி அமர்ந்ததும் அலைகளுக்குள் ஒரு அட்டகாசம் செய்தபடி கடற்படையினரின் ராடர் கண்காணிப்புகளுக்கு மண்தூவி பெத்தாவின் படகு கடலைக் கிழித்துப் போய்க்கொண்டிருந்தது.

'நினைச்ச மாதிரி ஒண்டும் நடக்கயில்லை. சாமான் முழுக்க ஏத்தியாச்சு பெத்தா கொண்டு வந்த ராங்கரை பாத்தியளே அந்தமாதிரியடாப்பா' சாமான்களுடன் ராங்கர் புறப்பட்டுப் போய் ஒரு மணி நேரம் ஆகியும் கப்பல் கப்டன் அன்பரசன் ராங்கரின் வியப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.

'ஒரு ஐம்பது அறுபது கடல் மைல் இப்ப தாண்டியிருப்பாங்கள் எண்டு நினைக்கிறன்'; எண்டான் கப்பலில் இருந்த ஒரு போராளி 'ம்ம்...இன்னுமொரு அரைவாசித்தூரம் போனாத்தான் சாலைக் கரை' என்றபடி மற்றவன் தாங்கள் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.

ராங்கரை ஓட்டியபடி பெத்தாவின் முழுக் கவனமும் விரிந்த கடலின்மேற்தளங்களிலேயே பரந்து கிடந்தது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் காரியங்களை பக்காவாகச் செய்து முடிக்கும் பெத்தாவின் ஆளுமைகளின் மேல் மீண்டும் ஒரு முறை அசை போட்டுக்கொண்டிருந்தான் இலக்கியன். ஒரு மிகப் பெரிய வீரனுடன் தான் இத்தனை நாட்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் என்பதில் அவன் பெருமைப்பட்டுக்கொள்வது இது முதல் தடவையல்ல.

சாலை முகாம் என்றுமில்லாதவாறு மலர்ச்சியற்றுக்கிடந்தது. பெத்தாவின் படகில் இருந்து சாலை துறை முகாமுக்கும் இதுவரை எந்த தொடர்பும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சாமான்களை ஏற்றிக்கொண்டு ராங்கர் படகு 120 கடல்மைல் தொலைவில் இருந்து புறப்பட்டுவிட்டது என ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கப்பலில் இருந்து அன்பரசன் தொடர்பெடுத்ததைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இதுவரை சாலைக்கு கிடைத்திருக்கவில்லை. 'அறிவு அறிவு அறிவு ஓவர்' புலிகளின் ராடர் தொலை தொடர்பு நிலையத்தின் வோக்கித் தொடர்பு சற்று நேரத்திற்குள் சாலை முகாமை பதட்டமடைய வைத்தது.

'இன்பன் இன்பன் இன்பன் ஓவர்' சாலையில் இருந்து இன்பன் வோக்கியோடு தொடர்பில்; இணைந்தான். காங்கேசன் துறையில் இருந்தும் திருகோணமலையில் இருந்தும் ஒரே நேரத்தில் கடற்படையினரின் டோறா தாக்குதல் படகுகள் முல்லைக் கடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன என்பதை ராடர் மூலம் அறிந்து கொண்ட புலிகளின் தொலைத் தொடர்பு நிலையம் விடயத்தை சாலை முகாமுக்கு அறிவித்து முடியமுன்னம் முல்லைக் கடல் அமர்க்களப்படத் தொடங்கியது. பெத்தாவும் ஏனைய நால்வரும் முக்கிய சாமான்களுடன் வந்துகொண்டிருந்த ராங்கரை குறிவைத்து கடற்படையினர் இரு முனைகளில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தத் தொடங்கினர்.

'இன்பன் இன்பன் இன்பன் ஓவர்' 'இன்பன் இன்பன் இன்பன் ஓவர்' நிலைமையைப் புரிந்து கொண்ட இன்பன் சாலையில் இருந்து பெத்தாவுக்கு தொடர்பெடுக்க முயன்றுகொண்டிருந்தான். பெத்தாவின் படகுடனான தொடர்பு சாலைக்கு முற்றாக அப்போது துண்டிக்கப்பட்டிருந்தது.

இரு முனைகளிலும் இருந்து ஒரே நேரத்தில் தாக்குதல் இடம்பெறும் என்பதை பெத்தா எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு முதல் எப்போதும் இப்படி நிகழ்ந்திருக்கவுமில்லை. பெத்தா மிக சாணக்கியமாக படகினைச் செலுத்திக்கொண்டிருக்க வேங்கைமாறன் இலக்கியன் வளநாடன் சதீஸ் நால்வரும் எதிர்த்தாக்குதல் புரிந்துகொண்டிருந்தனர். கப்பலுக்கும் சாலை முகாமுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் சமர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது.

'அன்பு அன்பு அன்பு ஓவர்' சண்டையின் உக்கிரத்தையும் சாலையோடு தொடர்பறுந்ததையும் அறிந்து கொண்ட கப்பல் கப்டன் அன்பரசன் சர்வதேச கடற்பரப்புக்க மிகக் கிட்டவாக கப்பலைச் செலுத்திக்கொண்டு பெத்தாவுடன் தொடர்பினை ஏற்படுத்த முயன்றான்.

'பெத்தா பெத்தா பெத்தா ஓவர்' பெத்தாவின் குரலில் கம்பீரம் குறைந்திருந்தது. ஆனால் துணிவு கொஞ்சமும் குறையாத தைரியம் இருந்ததை அன்பரசன் புரிந்து கொண்டான். 'அன்பு.... அன்பு....எனக்கு வெடி பிடிச்சிட்டுது.... வளநாடன் முடிஞ்சுது.....ஓவர் பெத்தாவின் குரலில் வலியும் வேதனையும் இருந்தது.

'சாலையோட எங்களுக்கு தொடர்பில்லை ஒருக்கா தொடர்பெடுத்து சொல்லு பிரயோசனமில்லை.. ஒருத்தரையும் அனுப்ப வேண்டாம் எண்டு' இனி தப்புவது சாத்தியமில்லை என்பதை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ பெத்தா புரிந்து கொண்டான். மீட்புப் படகு வருவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை அன்பரசனுக்கு தெரியப்படுத்த முன்னமே நிலைமையைத் தெரிந்து கொண்ட சாலை முகாம் மீட்புப் படகொன்றினை மின்னல் வேகத்தில் அனுப்பிவைத்திருந்தது. மீட்புப் படகினை பெத்தாவின் படகருகில் கொண்டுவந்து சேர்த்திருந்தான் வெடியரசன்.

கடற்படையின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கிடையில் மிகச் சிரமப்பட்டு வெடியரசனின் படகில் எல்லோரும் ஏற்றப்பட்டார்கள். பெத்தா காயம்பட்ட வலியுடன் போராடிக்கொண்டிருந்தான். வளநாடனின் உடல் படகில் கவிழ்ந்து கிடந்தது. ராங்கர் படகினை இனி கரைக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்ட பெத்தா ராங்கரை விலத்தி எட்டவாக வந்து அந்த படகினையும் ஏற்றி வந்த சாமான்களையும் கடற்படையிடம் சிக்காதவாறு வெடிவைத்து தகர்ப்பதற்கு முயன்றுகொண்டிருந்தான்.


கடற்படையினர் இப்போது இன்னும் கிட்டவாக நகர்ந்து தாக்குதலை மிகத் திவிரமாக்கினர். இனி உயிருடன் திரும்புவதற்கு சாத்தியமே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பெத்தா மிக மூர்க்கமாக தமது ராங்கர் படகை வெடி வைத்து தகர்க்க பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தான்.

'அன்பு அன்பு அன்பு ஓவர்' ஆ வு ளுழலளin கப்பலில் இருந்து அன்பரசன் மீண்டும் தொடர்பெடுக்க முனைந்தான். இதுதான் தனது கடைசித் தொடர்பு என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்திருந்த பெத்தா கடும் தாக்குதல்களினூடும் மிக நிதானமாகப் பேசினான். முடிவொன்றினை எடுக்க முடியாமல் பேசுவதற்கும் ஒரு முடிவினைத் திடமாக எடுத்த பின்னர் பேசுவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம்தான் பெத்தாவின் நிதானமான பேச்சுக்கு அப்போது காரணமாயிருந்தது. 'பெத்தா ஓவர்' 'என்ன நிலைமை பெத்தா அண்ணை ஓவர்' 'ஒண்டும் செய்ய ஏலாது அன்பு எல்லாம் முடியப் போகுது ஓவர்' 'சாலையில இருந்து உதவி எடுக்கட்டோ அண்ணை ஓவர்' 'ஒண்டும் வேணாம் பிரியோசனம் இல்லை ஓவர்' 'என்ன பிளான் அண்ணை அப்ப.... ஓவர்' 'ஒண்டும் யோசிக்க வேணாம். மெயினுக்கு அடிச்சு சொல்லு நாங்கள் எல்லாம் முடியப் போகுது எண்டு ஆனா முடிய முதல் ராங்கரை முற்றாக வெடி வைச்சிட்டுத் தான் போவம் எண்டு ஓவர்

முக்கால் வாசி கடலில் மூழ்கி இருந்ததால் எத்தனை முயன்றும் ராங்கரை வெடிவைத்து தகர்க்க முடியவில்லை. பெத்தா நம்பிக்கையிழக்கத் தொடங்கியிருந்ததை அவனின் தீவிர விசிறி இலக்கியன் நன்கு புரிந்து கொண்டான். 'ஒரே ஒரு வழி தான் இருக்குது பெத்தா அண்ணை நான் குண்டுகளை கட்டிக்கொண்டு ராங்கருக்குள்ள பாயிறன். வுpசயம் முடிஞ்சிடும்' எனச் சொல்லியபடி மிக வேகமாக இயங்கி ராங்கருக்குள் நுழைந்தான் இலக்கியன். மிகப் பெரிய சத்தத்தோடு இலக்கியன் ராங்கரோடு வெடித்து சிதறிப்போனான். அரை மணி நேரத்துள் கடற்படையினருடன் போராடிபோராடி மீட்புப் படகில் இரந்த அனைவரும் காவியமாகிப் போயினர்.

'பெத்தா அண்ணை நீங்க இந்துமாகடலின் முடிசூடா மன்னன். நீங்க என்ர கடல் ஹீறோ' இலக்கியன் கடைசியாய் சொல்லிவிட்டு வெடிவைத்த அந்த வார்த்தைகள் பெத்தாவின் காதுகளுக்குள்ளும் சாலை முகாமினுள்ளும்; இறுதிவரை ஒலித்துக்கொண்டேயிருந்தது.

- ஈழத்துப் புறம் : அடுத்த பாட்டுடைத் தலைவனுடன் மீண்டும் வரும்... -

185 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE