அஞ்சலோட்டம்!

வீட்டுக்குள்ளே
அம்மாதான் எனக்கு
"அகரம்" கையளித்தாள்.
அப்பாதான் எனக்கு
"நாலும் இரண்டும் ஆறு" எனச் சொல்லிக் கொடுத்தார்.
அக்காதான் எனக்கு
"பாரதியாரின் பாப்பா பாட்டு" சொல்லித் தந்தாள்.
அண்ணாதான் எனக்கு
அரிதாரம் பூசி அடவு கட்டிவிட்டான்.
சித்திதான் எனக்கு
அம்புலி காட்டி பாட்டி வடை சுட்ட கதை சொன்னாள்.
அத்தைதான் எனக்கு கட்டப்பொம்மன் கதையை கட்டியம் சொல்லி நின்றாள்.
மாமாதான் எனக்கு காவடி தூக்கி
களிநடனம் புரியச் செய்தார்.
மாமிதான் எனக்கு
கோலம் போடும் புள்ளியினைக் காட்டினார்.
சித்தப்பாதான் எனக்கு
கிளித்தட்டு ஆடும் இங்கிதம் சொல்லித் தந்தார்.
பெரியப்பாதான் பெரியபுராணத்தை
மொழிபெயர்த்துத் தந்தார்.
ஆச்சிதான் அம்மானைப் பாடலை
சொல்லி முடித்தாள்.
அப்புதான் அந்தாதிக் கவிதை பற்றி
விளக்கமாகச் சொன்னார்.
வீட்டுக்குள்ளே
என்னைச் சுற்றியிருந்த தனி மனிதர்களே
எனக்கு கடத்துகை செய்தார்கள்.
தனி மனிதர்களின் பணிகள் பூச்சியமாக்கப்படுகின்றபோது,
அல்லது சரியப்படுகின்றபோது,
அங்கே அமைப்புக்கள் இல்லை
வரலாறுகளும் இல்லை.
- சாம் பிரதீபன் -