மிக மோசமான தோட்ட நிறுவனம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது

தொழிலாளர் சட்டங்களை மீறி செயற்படும் பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர் சட்டங்கள், வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் சம்பளம் போன்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் தோட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை. அவற்றுள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் ஹேலீஸ் தோட்டக் நிறுவனமே முன்னிலை வகிக்கின்றது” என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் தொழில் அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், தம்மிக்க பெரேரா, ஹரி ஜயவர்தன போன்ற தோட்ட நிறுவன உரிமையாளர்கள் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை எனக் கூறியுள்ளார்.

“நாட்டிற்கு டொலர்களை கொண்டு வருவேன் என நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவதில்லை. குறைந்த பட்சம் உயர்த்தப்பட்ட 1,000 ரூபாயை தரவில்லை.”

“10 மாவட்டங்களில் உள்ள தோட்டங்கள் நான்கைந்து தோட்ட உரிமையாளர்களின் கைகளில் உள்ளது. அரசாங்கத்தை விட அவர்களுக்கு அதிகாரம் அதிகம். பலாங்கொட மற்றும் மடுல்சீம தோட்டக் கம்பனிகள் ஹரி ஜயவர்தனவிடம் காணப்படுகின்றது. ஹேலீஸ், ஹொரண, தலவாக்கலை, களனிவெளி தோட்ட நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கு சொந்தமானது.”

பாலியல் வன்முறை

தோட்டத் தொழிலாளர்களில் 75 வீதமானவர்கள் பெண்களாக இருப்பதால், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாத தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சுமத்திய இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஒழிப்பதற்காக உலக தொழிலாளர் சங்கம் அறிமுகப்படுத்திய “C 190″ பிரகடனத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார்.

1992ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்தினால் பெருந்தோட்டங்கள் 22 பெருந்தோட்டக் நிறுவனங்களின் கீழ் தனியார் மயமாக்கப்பட்ட போது 12 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 143,000ஆக காணப்படுவதோடு அவர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள்.

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபை பரிந்துரைக்கு எதிராக தோட்ட முதலாளிகள் நீதிமன்றத்தின் உதவியை நாடியதால் தோட்ட உரிமையாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் செல்லுபடியற்றது எனவும், அதனால்தான் தோட்ட உரிமையாளர்கள் தொழிற்சங்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

“இன்று 1,000 ரூபாயில் யார் வாழ முடியும்? ஆனால் இருவரும் வெவ்வேறு வேலை நிபந்தனைகளை விதித்தனர். சராசரியாக ஒரு தோட்டத்திலுள்ள ஒரு குடும்பம் வாழ்வதற்கு குறைந்தது 3,750 ரூபாவைச் செலவிடுகிறது. சம்பள  நிர்ணய  சபையில் இருந்து வந்தாலும், புதிய கூட்டு ஒப்பந்தம் வந்தாலும் பரவாயில்லை, இதில் அவர்கள் செயற்பட்டால், நாங்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஆதரிப்போம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் இராணுவம்

தொழிலாளர் தகராறுகளைத் தீர்ப்பதற்காக தோட்ட முகாமையாளர்கள் பொலிஸாரை அழைத்ததால் தொழிலாளர் உத்தியோகத்தர்களின் கடமைகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

“மறுபுறம், ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இராணுவத்தை நேசிக்கிறோம். மரியாதை வைத்திருக்கின்றோம். எனினும் அவர்களால் இதைச் செய்ய முடியாது.”

“அரசாங்கத்தால் இந்தத் தோட்டங்களை நடத்த முடியாமையால் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று வட்டவலை தோட்ட நிறுவனம் இல்லை அது ஹட்டனாக மாறியுள்ளது. அகலவத்தை தம்ரோ ஆகிவிட்டது. தோட்ட அதிகாரிகளின் பங்களாக்கள் அனைத்தும் ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டப்படுவதால், மண் சரிவுகள் அதிகமாக உள்ளன. ஒரு தேயிலை செடிக்கூட புதிதாக நாட்டப்படவில்லை. இவை இப்படி இருக்க முடியுமா? இது அரச சொத்து.”

தோட்ட நிறுவனங்கள் தேயிலையை மீள் நடுகை செய்யாத காரணத்தினால் 9,000 ஹெக்டேயர் நிலம் காடாக மாறியுள்ளதாகவும் இதனால் சிறுத்தை, பன்றி, குளவி போன்ற தொல்லைகளால் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

“குளவி கொட்டியதில் 27 இளம் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்”

பெருந்தோட்டங்களிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் போன்று பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் ஆனால் மலையக மக்கள் நாட்டை நேசிப்பதால் அவை வெளிவரவில்லை எனவும் குற்றம் சுமத்தும் வடிவேல் சுரேஸ் ஆனால் ஆட்சியாளர்கள் தோட்டத் தொழிலாளர்களை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“தொழிற்சங்கங்கள் விடுதலைப் புலிகளை தோட்ட மக்களிடம் செல்ல விடவில்லை. மக்கள் விடுதலை முன்னணியையும் செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் அதனை நிறுத்தினோம். ஒவ்வொரு நாளும் பணியாற்றுகின்றனர். கொவிட் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றாமல் இருக்கவில்லை. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் நடத்தப்படுகின்றனர்.”