அந்த வண்ணத்துப்பூச்சிக்கு சரியா நொந்திருக்கும்!
Updated: Mar 20
- சுகந்தினி சிவகுமார் -

ஒரு வாசகியாக என்னுடைய பார்வையில் இந்தக் கதை எவ்வாறு இருந்தது என்றுதான் உங்களுடன் பகிர இருக்கின்றேன். இன்று நான் அறிமுகம் செய்ய இருக்கும் நூல் எழுத்தாளர் நிரூபா அவர்களால் 2005 ஆம் ஆண்டு எழுதி வெளிவந்த சுணைக்கிறது என்ற புத்தகம்.
இந்த கதையினைப் பார்த்தோம் என்றால் பன்னிரெண்டு தலைப்புகளுக்கு கீழாக கதையினை நகர்த்திக் கொண்டுசென்றிருப்பார் கதாசிரியர். இந்த கதை முழுவதுமே கதாசிரியர் கையாண்ட வார்த்தைப் பிரயோகம், இயல்பான அந்த பேச்சுத் தமிழ் எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது.

முதலாவதாக, ஒரு பழம் தப்பிச்சின்னா என்ற தலைப்பில்
ஒரு மலையகச் சிறுவன் ஒருவன் வேலைக்காக வந்த இடத்தில் அவன் அனுபவிக்கின்ற வலி, வேதனை, துன்புறுத்தப்படுதல், அடிமையாக நடத்தும்விதம் அவன்மேல் அன்புகொள்ளும் ஒரு சிறுமி அவனுக்காக இரக்கம் கொள்ளுதல், அவனுக்காக யோசித்தால் அதுமட்டுமல்லாமல் அந்தச் சிறுவன் மலையகத்தில் பிறந்திருந்தாலும் அவனுக்கும் மலையகத்திற்குமான எந்தத்தொடர்பும் இல்லாதபோதும் அவனைத் தோட்டக்காட்டான் என்று சொல்கிறதும், மலையகத்தை தோட்டக்காடு என்று சொல்வதும் ஒரு வர்க்கபேதத்தைக் காட்டுவதும் இன்றுவரை எமது சமூகத்திற்குள் புரையோடியிருக்கும் அந்த வர்க்கபேதத்தை மிகத் தத்ரூபமாக கதாசிரியர் எடுத்துக் காட்டியிருப்பார்.
அடுத்ததாக போட்டு வாறன் என்ற தலைப்பில் வீட்டில் இருக்கும் ஒரு சின்னப் பிள்ளையைப் பார்த்து உன்னை தோட்டக்காட்டில் இருந்துதான் வாங்கி வளர்த்தது என்று பகிடி செய்யும் போது அந்தக் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது பற்றியதாக இருந்தது. குறிப்பாக அந்தக் குழந்தை கோவத்தோட நான் தோட்டக்கட்டிற்கே போறன் என்று சொல்லிக்கொண்டு தனக்குப் பிடிச்ச சிவப்பு ரோசாப்பூ படம் போட்ட பவுடர் ரின் முட்டை தான் சேர்த்து வைத்திருந்த சில்லறைக் காசு இவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தோட்டக்காட்டிற்கு புறப்படுவது. பின்பு தெரு முனைவரை சென்று பாதை தெரியாமல் பயத்துடன் வந்த வழியே திரும்பி வீட்டிற்கு வரும்போது வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சிரிப்பதும் அப்போது அந்தக் குழந்தையுடைய மனம் எவ்வாறு இருந்தது என்பதை அந்த சிறுமி கொண்டு சென்ற முட்டை உடைந்திருந்ததுபோல அந்தக் குழந்தையினுடைய மனமும் அங்கே உடைந்திருந்ததை கதாசிரியர் காட்டிய விதம் சிறப்பு.
எழுத்தாளர் நிரூபா இதில் உள்ள கதைகள் முழுவதுமே பன்னிரண்டு தலைப்புகளுக்குள்ளும் பெண்குழந்தைகளின் அல்லது சிறுமிகளின் மனவுணர்ச்சி, ஏக்கம், வலி, பாலியல் துஸ்பிரயோகம், இயலாமை, மனப்பயம், இளகிய மனம்போன்றவற்றின் பிரதிபலிப்பாகத்தான் எழுதியிருக்கின்றார்.
அடுத்து சுணைக்கிறது இதுதான் இந்தப் புத்தகத்தினுடைய தலைப்பாக இருக்கிறது. இந்தக் கதையில் வண்ணத்துப்பூச்சியின் சிறகு உடைந்ததிற்கு வருந்தும் அந்தச் சிறுமி அந்த வண்ணத்துப்பூச்சிக்கு செரியா நொந்திருக்கும் என என்று சொல்வது வண்ணத்துப்பூச்சிக்காக வருந்தக்கூடிய அந்தக் குழந்தையை ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டபோது தனக்கு நடந்த கொடுமை என்ன என்பதை விளங்கிக் கொள்ளக்கூடத் தெரியாத அந்தக் குழந்தை தன்னுடைய வலியை சொல்லக்கூடத் தெரியாமல் எரியுது எரியுது என்று சொல்வதும் குழந்தையை குழந்தையாகவே பார்க்கும் தாய்க்கு அதைத் தாண்டி யோசிக்க முடியாமல் உனக்கு குளிக்கப்பஞ்சி எரியாமல் என்ன செய்யும் என்று சொல்லி சீனியை தண்ணீரில் கரைத்துக் குடிக்கக் கொடுப்பதும் அடுத்த நாள் தகப்பன் சூடுபோக எண்ணெய் தேய்த்து கிணற்றடியில் இருத்தி தண்ணிரை அள்ளி ஊற்றுவதும் சிறுமி ஒவ்வொரு வாளியாக எண்ணி இருபத்தைந்துவாளி குளிச்சாச்சு இனி எரியாது என்று நினைக்கிறதும் அதற்குப் பிறகும் வலியும் எரிவும் இருக்கின்றபோது கொக்காக்களுக்கும் வாறதுதான் ஒருநாள் ரெண்டுநாளில சரியாகிரும் உனக்கென்ன எட்டுநாள் பத்துநாள் ஆகியும் மாறாதது புதினமாக்கிடக்கு என்று தாய் சொல்லவதும் வலி தாங்கமுடியாமல் இருக்கின்றபோது பெரியாக்கள் தாங்கள் நினைக்கிறதத்தான் செய்வீனம் என்று அந்தக் குழந்தை நினைப்பதும் இவ்வாறாக கதாசிரியர் சொல்லியிருக்கும் விதம் படிக்கின்றபோது மனம் கனதியாகி ஒரு வலியை ஏற்படுத்தியிருந்தது.

காதல் கடதாசிப்பூ என்ற தலைப்புகளில் சிறு பராயத்தில் வரும் நட்பு, அன்பு காதல் எல்லாவற்றையும் சொல்லியிருந்தா. சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பட்டம் வைத்துக் கொள்வதும் இவருக்கு இவா, இவாக்கு இவர் என்று சொல்வதும் தனது நண்பன் தந்த கடதாசிப்பூவை மொனிற்ரர்க் கொப்பிக்குள் வைத்திருப்பதும் அந்த நண்பன் வேறு இடத்திற்கு சென்றதும் அவன் வரும்வரையும் அந்தக் கடதாசிப்பூவை மொனிற்ரர் கொப்பிக்குள் வைத்திருப்பதும் நீண்ட நாட்களின்பின் அதே பாடசாலைக்கு அவன் வந்தபோது அவனிடம் அந்த கடதாசிப்பூவை காட்டப்போறதும் அவன் தன்னுடைய சக நண்பியுடன் நட்புக்கொண்டிருப்பதைப் பார்த்து கவலைப்படுவதும் பின்பு கோவப்பட்டு அவர்கள் இவருடைய பெயர்களையும் கரும்பலகையில் எழுதி விடுவதும் இப்படியாக அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்னச் விடங்களையும் அவர்களுடைய பார்வையில் சொன்னவிதம் ரசிக்கக்கூடியதாக இருத்தது.
அடுத்ததாக முதல்நாள் மழை ஏன் வந்தது என்ற கதைகளில்
பருவ வயதுடைய பெண் பிள்ளைகள் பற்றியதாக இருந்தது.அவர்களுக்குள் ஏற்படுகின்ற மாற்றம் ஒரு பெண்குழந்தை வயதுக்கு வந்தபோது அவர்களை வீட்டில் ஒரு இடத்தில் இருக்கவைப்பதும் அதைத் தொடக்கூடாது துடக்கு, கிணற்றில் தண்ணி அள்ளக்கூடாது தீட்டு, ஓடி விளையாடக்கூடாது என்று சொல்லி முப்பது நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதும் அதன் பிறகு அந்தக் குழந்தை வெளியே போகின்றபோது அவளுடைய நண்பர்கள் அயலவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரும் அவளைப் பார்க்கின்ற பார்வை, அவள் உடலில் ஏற்படுகின்ற மாற்றம் இவை எல்லாமே அவளுக்குள் ஒருவித பயத்தை உண்டுபண்ணுவதையும் இதன் காரணமாக இரவில் நித்திரை இல்லாமல் தவிப்பதும் கெட்ட கனவுகள் வருவதும் யாரோ தன்னை துஸ்பிரயோகம் செய்வதாக உணர்வதும் தாய் பக்கத்தில் இருக்கும்போது மட்டும் பாதுகாப்பாக உணர்வதும் இப்படியாக பெண் குழந்த்தைகளுடைய வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரியாத அந்த நிலையை விளைந்து நிற்கும் நெற்பயிர் அடுத்து சாக்குப்பையில் அடைபடப்போகிறேனோ அல்லது அடுப்பில் வேகப்போகிறேனோ என்று தெரியாமல் தலை நிமிர்ந்து நிற்பதாக நிரூபா கூறியவிதம் சிறப்பாக இருந்தது.
அடுத்ததாக மாயமனிதன் மிகவும் சுவாரிசயமான ஒரு கதை பாடசாலையில் அந்த நன்பிகளுக்குள் நடக்கும் விடயங்கள்இகுறிப்பாக சுவிங்கம்மாதிரி அதே வாசனையுடன் இருக்கும் அழிரப்பர் அந்த வாசனையை மணப்பதற்காகவே கடன் வாங்குவது அழித்துப்பார்க்கும்போது அந்த ரப்பர் உடைந்துவிட்டால் நண்பிகளுக்கிடையில் ஏற்படும் சண்டை கோபம் அதுமட்டுமல்லாமல் பாடசாலையில் கொடுக்கப்படும் பிஸ்கட் அந்த கப்பில் குவிச்சுப் போட்டால் எத்தனை பிஸ்கட் மட்டம் தட்டிப் போட்டால் எத்தனை பிஸ்கட் என்று எண்ணிப் பார்ப்பது பிஸ்கட்போடுபவர் தனக்குப் பிடித்தவர்களுக்கு கூடப் போடுவது மற்றவர்களுக்கு குறையப்போடுவது இப்பிடியான விடையங்கள் மாயமனிதன் என்று ஒருத்தன் இருக்கிறானாம் அவன் யன்னலுக்காலையும் கதவு இடுக்குக்கிளாலையும் சிவருக்கிளாலையும் வருவானாம் குறிப்பா பெண்களிட்டத்தானாம் வருவான் அவர்களைக் கெடுத்திடுவானாம் என்ற புரளிக் கதைகளை உண்மை என்று நம்பும் சிறுமிகள் நாங்கள் எல்லோரும் நேசம் போடவேணும் அப்பதான் மாயமனிதன் பற்றிய தகவல்களைப் பற்றி பரிமாறிக்கொள்ளலாமென்று நண்பிகள் நேசம் போடுவது இப்படியாக என்னையும் எனது சிறுபராய பள்ளிநாட்களை கண்முன்னே கொண்டுவந்த்திருந்தார் கதாசிரியர் நிரூபா.

அடியடியாய் பயந்தாங்கொள்ளி என்ற கதையில் பெரியவர்களுக்கிடையிலான பிரச்சனைகளை சிறுகுழந்தைகள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனை,பெரியவர்கள் தாங்கள் செய்கின்ற தப்புகளை மறைப்பதற்காகவும் தப்பித்துக்கொள்வதற்காகவும் பேய், ஆவி இருப்பதாக நம்ப வைத்தல், சுட்டுக்கொலை என்ற கதையில் குயில் குஞ்சுக்காக காகத்தை கொலை செய்யும் சிறுமிகள் இவ்வாறாக கதையை நகர்த்திக்கொண்டு சென்றிருப்பார் நிரூபா.
இறுதியாக யாருடைய பிள்ளை என்ற தலைப்பில், வழமைபோலவே அப்பா யாருடைய பிள்ளை என்று கேட்பதும் அம்மா யாருடைய பிள்ளை என்று கேட்பதும் பிள்ளை புத்திசாலித்தனமாக இருவருடையதும் என்று சொல்வதும் யாரில கூட விருப்பம் என்றபோது கணபதியில என்று சிறுமி கூறுவதும் அப்ப அவனைக் கூட்டிக்கொண்டு தொட்டக்காட்டிற்கு போவன் என்று சொல்வதும் உன்னை வெள்ளத்தில் இருந்துதான் எடுத்தது என்று சொல்லுகின்றபோது அழும் குழந்தையின் கண்ணீரை துடைப்பதற்கு யாரும் இல்லை என்பதாக பக்கம் 132 உடன் கதை முடிகிறதா? அல்லது இல்லையா என்பது புரியாமல் இருந்தது. காரணம் அதற்கு அப்பால் பக்கங்கள் வெறுமையாக இருந்தது.
என்னால் இந்தப் புத்தகத்தினை நூலகம் என்ற வலைத்தளத்தில்தான் வாசிக்க முடிந்தது. அதுமட்டும் அல்லாமல் இந்தக் கதைகளை வாசிக்கின்றபோது இது ஒரு தொடர் கதையா? அல்லது சிறு கதைகளின் தொகுப்பா என்ற சந்தேகம் இருந்தது ஏனென்றால் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் ஒன்றாகவும் கதைகள் சில தொடர்பு இல்லாதமாதிரி எனக்கு இருந்தது. அதுமட்டுமல்லாமல் கதைகளுக்கிடையில் சில பாடல்வரிகளையும் கதாசிரியர் சேர்த்திருந்தா அந்தப் பாடல்களுக்கும் கதைக்குமான தொடர்பு என்ன? இந்தப் பாடல்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது. இது நிரூபாவின் யுக்தியாகக்கூட இருக்கலாம் ஏனென்றால் நிரூபா எழுதிய கதைகளில் நான் முதன்முதலாக வாசித்த ஒரேயொரு கதை இந்த சுணைக்கிறது என்ற புத்தகம்தான் அதனால்தான் எனக்கு அவருடைய யுக்தி புரியவில்லையோ தெரியாது. இதனாலேயே அவருடைய புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்திருக்கிறது. நிச்சயம் அதற்கான முயற்சியை நான் மேற்கொள்ளுவேன். இந்தக் கதைகள் முழுவதுமே சிறு குழந்தைகளுடைய பார்வையாக இருப்பதால் அந்த ஒருசில கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. அவை தவிர இப் புத்தகத்தை வாசிக்கின்றபோது எங்களுடைய சிறுபராய பாடசாலை நாட்களையும் நாங்கள் கடந்து வந்த, பார்த்த, கேள்விப்பட்ட எல்லாவற்றையும் எம் கண்முன்னே கொண்டுவரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எல்லோரும் வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்தான் சுணைக்கிறது.