“சிகிச்சை அளிக்கும் நாய்கள்”(Therapy dogs )

- சாம் பிரதீபன் -

“வெளியே இருப்பவர்களை சற்றும் பொருட்படுத்துபவர்களாய் அவர்கள் இருவரும் அப்போது இல்லை”

அவளுக்கு ஆறு அல்லது ஏழு வயதுதான் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த அறையின் ஒரு கரையில் அமர்ந்திருந்து அவனுடன் அவ்வளவு அன்னியோன்யமாக பேசிக்கொண்டிருந்தாள். என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று அப்போது தெரியவில்லை. ஆனால் இருவரது உடல் மொழிகளும் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்ட முறைகளும் என் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியிருந்தது. இடையிடையே விம்மி அழுவதும் அவனை இழுத்து தன்னுடன் அணைப்பதுமாக அந்த உரையாடல்கள் நீண்டுகொண்டேயிருந்தன. அவன் அதிகமாய் கேட்பவனாகவும், அவள் அதிகமாய் சொல்பவளாகவுமே எனக்கு அப்போது பட்டது.

யாரும் நுழைய முடியாதவாறும், அந்த உரையாடல்களை அறிய முடியாதவாறும் மிகப் பாதுகாப்பாய் கதவுகள் இறுக மூடப்பட்ட அந்த வகுப்பறைக்கு வெளியே இருந்துகொண்டு கண்ணாடிச் சுவர்கள் வழியாக அவர்களை பார்த்தும் பார்க்காததும் போல் நான் இருந்துகொண்டிருந்தேன். வெளியே இருப்பவர்களை சற்றும் பொருட்படுத்துபவர்களாய் அவர்கள் இருவரும் இல்லை. தமது உரையாடல்களுடனும் உணர்வுப் பரிமாற்றங்களுடனுமே வேறோர் உலகத்தில் அவர்கள் அப்போது இருந்துகொண்டிருப்பதாகவே எனக்குப் பட்டது. எவ்வளவு முயன்றும் கடைசிவரை அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதையும் அந்த சிறுமிக்கு என்ன பிரச்சினை என்பதையும் என்னால் அறிந்திருக்க முடியவில்லை.

எல்லாம் தெரிந்துகொண்டிருந்தவன் அவளுடன் அப்போது அருகிருந்த அந்த அவன் மட்டும்தான் என்றே நான் நினைத்திருந்தேன். அவனை அங்கு எல்லோரும் ஜான்சன் என அழைத்தார்கள்.

நான் பணி புரியும் சந்தைப்படுத்தல் பிரிவின் ஒரு நிகழ்ச்சித் திட்டம் சார்ந்து அண்மையில் பிரித்தானியாவின் ஒரு பாடசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த வகுப்பறை ஒன்றினுள் என் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவம் தான் இது.

இதற்கு முதல் நான் அறிந்திராத ஒரு புதிய விடயம் இது என்பதால் அப்போது என் கவனம் முழுவதும் சந்தைப்படுத்தலைக் காட்டிலும் இந்த சம்பவத்தோடேயே அதிகம் இருந்திருந்தது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பிரித்தானிய பாடசாலைகள் பலப்படுத்தியுள்ள பாதுகாப்புப் பொறிமுறை காரணமாகவும் அந்த பாடசாலைச் சூழலுக்குள் என் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு அனுமதி இல்லாமை காரணமாயும் Facebook, WhatsApp போன்ற கவனக் குலைப்பான்கள் என்னை அப்போது தீண்டியிருக்கவில்லை. அதனால் என் முழுக் கவனமும் அந்த சம்பவத்தில் ஆர்வம் கொண்டிருந்தது.


“சிகிச்சை அளிக்கும் நாய்கள்”(Therapy dogs ) என்ற ஒரு விடயம் இந்த உலகில் இயங்கு நிலையில் இருக்கும் சங்கதி அப்போதுதான் முதன் முதலாக எனக்கு தெரியவந்தது. அந்த சிறுமி பேசிக்கொண்டிருந்த அந்த ஜான்சன், ஒரு சிகிச்சை அளிக்கும் நாய்( Therapy dog ) என்பது அந்த ஆசிரியை நிக்கொலஸ் எனக்கு சொல்லும் போது மிக ஆச்சரியமாய் இருந்தது.

மன அழுத்தம், கோபங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவருதல் போன்ற பல மனித மனநிலைத் தேவைகளுக்கு இப்போதெல்லாம் இத்தகைய நாய்களின் பாவனை அதிகரித்து வருவதாக நிக்கொலஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “பாடசாலைச் சிறுவர்களுக்கு ஏன் இத்தகைய சிகிச்சை தேவைப்படுகின்றது?” என நான் கேட்பதை தவிர்ப்பதற்கும் தகவல்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி அடுக்கி வைத்துக்கொண்டேயிருந்தார்.

குடும்பங்களில் நிலவும் இதரபல முரண்பாடுகள் காரணமாகவும், பரம்பரை மரபணுக்கள் வழியாகவும், இலத்திரனியல் உபகரணங்களின் மிதமிஞ்சிய பயன்பாடுகள் காரணமாயும் சிறுவர்களின் மன அழுத்த விகிதாசாரம் அதிகரித்துவரும் நிலைப்பாடு ஆய்வாளர்களால் கண்டு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலைகள் இத்தகைய சிகிச்சை முறைகளை தேவைப்படும் மாணவர்களுக்கு பாதுகாப்பான பாடசாலைச் சூழலில் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெற்றோர்களுடனோ, ஆசிரியர்களுடனோ, சக மாணவ நண்பர்களுடனோ வெளிப்படையாக பேசிப் பகிர விரும்பாத பல மன அழுத்த காரணிகளை, இத்தகைய நாய்களுடன் மனம் திறந்து மாணவர்கள் பகிர்ந்து கொள்வது பாடசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்த உரையாடல்கள் பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் மறைக்கப்பட்ட ஒலிவாங்கிகளூடாக கேட்கப்பட்டு சிக்கல்களுக்கான புறவய நிவாரணிகளை ஏற்படுத்தவும் முனைப்புக் காட்டப்படுகின்றன.

ஜான்சன் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணிக்கு பாடசாலை வந்து மாலை 4.00 மணிக்கு மீண்டும் வீடு சென்று வருவதாக பாடசாலை நிர்வாகம் கூறியது. பாடசாலை முகாமைக்கு சொந்தமான ஜான்சன் செவிலித் தாயான அந்த பாடசாலையின் ஆசிரியை நிக்கொலஸின் பராமரிப்பில் அவருடைய வீட்டில் தற்போது வசித்து வருகிறார். ஜான்சன் பாடசாலை சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, சில சமயம் அங்குள்ள வளர்ந்தவர்களுக்கும் ஏன் நிக்கொலசுக்கும் கூட மனத் தளர்வைத் தருவதாக அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டார்கள்.

நாம் சொல்வதை வெளியே யாருக்கும் சொல்லாத நம்பிக்கைக்குரிய யாரோ ஒருவருடன் மனம் திறந்து உரையாடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்பதும், அதை செய்வதற்கு பயிற்றப்பட்ட துறை சார்ந்தவர்களே “உள ஆற்றுப்படுத்துவோர்” என்பதும், நாம் ஏற்கனவே அறிந்த விடயங்களே. “மனிதர்களுடன் வெளியே வார்த்தைகளால் பேச இயலாத ஜான்சன் போன்றவர்கள் இதற்குப் பொருத்தமானவர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது மனிதர்கள் பால் மனிதர்களுக்கு மலிந்திருக்கும் நம்பிக்கையீனத்தை வெளிக்காட்டுகிறதா?” என்ற கேள்வியோடு அன்றைய நாள் எனக்கு நகர்ந்திருந்தது.


“வெளியே யாருக்கும் சொல்லத்தெரியாத சிலைகளோடும் சொரூபங்களோடும் பண்டைத் தமிழர் உருவகித்த ‘கடவுளர்’ என்ற சித்தார்ந்தங்கள் கூட ஒரு வகை உளச் சிகிச்சை அளிக்கும் வித்தைதான் என்ற பதிலோடு மறு நாள் காலை எனக்கு விடிந்திருந்தது.


- சாம் பிரதீபன் -

53 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli