உண்மை அழ வைத்து ஆறுதல் சொல்கிறது, பொய் அழ விடாமல் ஆயிரம் வழி சொல்கிறது!

உண்மைகளின் மீது
எனக்கு
எப்போதும் ஒரு கோபமிருக்கிறது.
பொய்கள்
என்னைப் பாதுகாக்கின்றன.
உண்மைகளோ
எப்போதும்
என்னைக் காட்டிக்கொடுத்தபடியிருக்கின்றன.
பொய்களோடு
நான் நட்பு பாராட்டுகிறேன் இல்லை
உண்மைகளை
கட்டிப்பிடித்தபடியே அலைகிறேன்
அவை
என்னைக் காட்டிக்கொடுத்தபடி இருப்பினும்.
கொண்டுவந்து
ஏதோவெல்லாம் நீட்டுவது,
எடுத்துக்கொள் என
அள்ளி நிறைப்பது,
என்னைத் தரமுயர்த்தும் சங்கதிகளை
அறிமுகம் செய்வது,
வாய்ப்புகளை வளைத்துப் போடும்
பொத்தான்களை கைகளுக்கருகே காட்டுவது,
தேவைகளைத் தீர்க்கும் மந்திரங்களை
எப்போதும் சொல்லிக்கொடுப்பது,
நாளை என்பதன் கைவசப்படுத்தலுக்கு
இன்றைய நாளின் சூக்குமத்தை
வரைந்து கொடுப்பது,
இப்படி இப்படிப் பல
பொய்கள் எனக்காய் செய்தபடியிருக்கிறது.
உண்மைகளோ,
என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது,
என் கண்களில் இருந்து மறைக்கிறது,
இயலாமைகளை
அடுத்தவனுக்குப் போய் சொல்லிக்கொண்டிருக்கிறது,
நேர்கோட்டுத் தத்துவத்தில்
மிகச் சிறியதொரு வாய்ப்பையும்
நீண்ட தொலைவுக்கப்பால் காட்டுகிறது,
தேவைகளைத் தீர்ப்பது
தீர்க்கமுடியாத நோய் என்கிறது,
சோரப் பண்னுகிறது,
தனிமைப்படுத்துகிறது,
அழச் செய்கிறது,
நேற்றைய நாள் குறித்த கவலையில்
இன்றைய நாளை கொலை செய்கிறது.
உண்மை அழ வைத்து ஆறுதல் சொல்கிறது,
பொய் அழ விடாமல் ஆயிரம் வழி சொல்கிறது.
“உண்மை பேசி உத்தமனாய் வாழ்” என்று
என் அம்மா அடிக்கடி
பொய் சொல்லியிருக்காது போயிருந்தால்,
“உண்மை உயர்வு தரும்” என்று
என் ஆசான் எனக்கு
பொய் கற்றுத் தந்திருக்காது போயிருந்தால்,
“பொய் சொல்லாதிருப்பாயாக” என்று
என் ஆண்டவன் எனக்கு எட்டாம் கட்டளையை
பொய்யாக திணித்திருக்காது போயிருந்தால்,
உண்மைகளின் மீது
இப்போது எனக்கு வருத்தமிருந்திருக்காது.
பொய்கள்
என்னைப் பாதுகாக்கின்றன.
உண்மைகளோ
இப்போதும்
என்னைக் காட்டிக்கொடுத்தபடியிருக்கின்றன.
- சாம் பிரதீபன் -